அடிக்கடி பரிசோதனை செய்தால் புற்றுநோய் வருமா..?

Image

ரேடியாலஜி நிபுணர் முரளி


இன்றைய மருத்துவ உலகில் ரேடியோலஜி துறையை யாருமே தவிர்க்கவே முடியாது. ஆம், உடலில் எந்த ஒரு பிரச்னை என்றாலும் உடனே மருத்துவர்கள் பரிசோதனை செய்துவருமாறு எழுதித் தருவதுதான் நடைமுறையாகிவிட்டது. அந்த பரிசோதனைகள் மூலம் நோயின் தன்மையைக் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிக்கும்போது குணம் அடைவது எளிதாகிறது. இந்த ரேடியாலஜி துறை குறித்து பேசுகிறார்,  சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனை ரேடியாலஜி நிபுணர் முரளி.

ரேடியாலஜி அவசியம்தானா..?

ஆம். எந்த ஒரு மருத்துவராலும் உடலை கண்களால் பார்ப்பதால் அல்லது தொட்டுப் பார்ப்பதால் மட்டும் நோயின் தன்மையை, தீவிரத்தை அறிந்துகொள்ளவே முடியாது. ஆகவே, மக்கள் நலனுக்காகச் செய்யப்படுவதே ரேடியாலஜி பரிசோதனைகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பலவித நோயால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக குழந்தைகள் வயிற்றுப்போக்கு, இருமல், சளி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றைக் கண்டறிவதற்கு எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மிகுந்த உபயோகமாக இருக்கிறது.


எந்தவொரு வியாதியாக இருந்தாலும், அவற்றைத் துல்லியமாக கண்டுபிடித்து அதற்கேற்ற சிகிச்சைகளைச் செய்யும்போது பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும். அதுபோல் முதியோர்களின் நோய்களுக்கும் ரேடியாலஜி பரிசோதனைகள் சிறந்த பயனைத் தருகின்றன. ரேடியாலஜியின் பரிசோதனைகள் மூலம் நோயின் தாக்கத்தையும் தன்மையையும் விரைவில் அறியமுடியும். தவிர நடுத்தர வயதினரின் இதய நோய்கள், சிறுநீரக வியாதிகள், குடல் மற்றும் நுரையீரல் பிரச்சினைகளுக்கும் சிடி, எம் ஆர்.ஐ மற்றும் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் கருவிகள் சிறந்த பயனைத் தருகின்றன.

கதிர்வீச்சு எப்போது ஆபத்தாகும்? கதிர்வீச்சால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?

கதிர்வீச்சு எப்போது செய்யக்கூடாது, யார் யாருக்கு ஆபத்து ஏற்படும்  என்பதற்குச் சில குறிப்புகள் உண்டு. முக்கியமாக கர்ப்பிணிகள் எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் போன்றவற்றைக் கண்டிப்பாகச் செய்யக்கூடாது. காரணம்,  அவர்களது வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை கதிர்வீச்சுகள் பாதிக்கும். மேலும் குழந்தை பிறந்தவுடன், அதற்கு கேன்சர் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு. குழதைகளுக்கு மனக் குறைபாடுகள் வரக்கூடும். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களும், கைகால்களில் ஊனம் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.


மேலும், இதயத்தில் வால்வு பொருத்தப்பட்டவர்கள், நரம்பில் சிகிச்சை மேற்கொண்டவர்கள், எலும்பில் சிகிச்சை பெற்றவர்கள் அனைவரும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யக்கூடாது. தேவையில்லாமல் எக்ஸ்ரேவும் செய்யக்கூடாது. காரணம், எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேனால் நம் உடலில் உள்ள செல்கள், கேன்சர் செல்களாகவும் மாற வாய்ப்பிருக்கிறது. அதனால் ரேடியாலஜிஸ்ட்டின் பரிந்துரைகள் இல்லாமல் எதைச் செய்தாலும் அது ஆபத்துதான்.


கதிர்வீச்சால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாது. ஏனென்றால், ஒரு மருத்துவ நிபுணர் வயதுக்கு ஏற்றாற்போல கதிர்வீச்சு கருவிகளில் செட்டிங் பரிசோதனைகள் மேற்கொள்ளலாம். ரேடியாலஜி துறையில் கேவிஎம்எஸ் என்று பிசிக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உள்ளன. அதன்மூலம் சிறப்பாக சிகிச்சை அளிக்க முடியும். உதாரணத்துக்கு, குழந்தைகளுக்கு ஹைக் வே டெக்னிக் உள்ளது. அதன்மூலம் அவர்களுடைய உடலில் எக்ஸ்ரே கதிர்வீச்சை குறைக்கவும் செய்யலாம்.
தவிர அதன்மூலம் எத்தகைய நோய்களையும் துல்லியமாகக் கண்டறியவும் செய்யலாம்.  அதுபோல், வயதானவர்கள் மீது படும் நுண்கதிர்களின் அளவையும் குறைக்க முடியும். அதன்மூலம் துல்லியமாக வியாதியையும் கண்டுபிடிக்க முடியும். இதனால் ஆபத்து என்பது கண்டிப்பாக கிடையாது. ஆனால், தானாகவே சென்று ஸ்கேன் செய்துகொள்ளக்கூடாது. இந்த விஷயத்தில் ரேடியாலஜிஸ்ட்டின் பரிந்துரைகள் கட்டாயம் தேவை. அவர்களை வைத்துக்கொண்டுதான் ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் அது ஆபத்துதான்.

ரேடியாலஜியின் மூலம் மார்பக புற்றுநோயைக் கண்டறிய முடியுமா?

கண்டிப்பாக. மார்பக புற்றுநோய் என்பது மகளிர் சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்சினை. மார்பக புற்றுநோய் என்பது 1990க்கு முன்பு 50 வயதுக்கு மேல்தான் வரும் என்று கூறப்பட்டது. ஆனால், 2000க்குப் பிறகு இளம்பெண்களுக்கே, அதாவது 25-40 வயது உள்ளவர்களுக்கே மார்பக புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு இருப்பது தெரியவந்திருக்கிறது.  இதனால், இந்த நோயைக் கண்டுபிடிக்கும் தொழில் நுட்பமும் அட்வான்ஸாய்ப்  போய்க்கொண்டிருக்கிறது. குறிப்பாக, இதில் ஒன்று மேமோகிராம். இதில் எக்ஸ்ரே மேமோகிராம், சோனோ மேமேகிராம், எம்ஆர் மேமோகிராம் என மூன்று வகைகள் உள்ளன. இந்த மூன்று வகையிலும் ஒவ்வொரு நன்மை  உள்ளது.
எக்ஸ்ரேவில் ஆய்வை மேற்கொள்கிறோம் என்பதற்காக, அப்படியே அதை விட்டுவிடக் கூடாது. அடுத்து அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். அதில் தண்ணீர் பார்ம் பண்ணி இருக்கிறதா அல்லது சாலிட் பார்ம் பண்ணி இருக்கிறதா என தெரிந்துகொள்ளலாம். இவை இரண்டிலும் முடிவுக்கு வந்த பின், எம்ஆர் மேமேகிராம் ஸ்கேன் செய்து பார்க்கலாம். இதன்மூலம் அதில் வளர்வது கேன்சர் கட்டியா அல்லது சாதாரண கட்டியா எனப் பார்க்கலாம்.


இதை பைராக்ஸ் கோரிங் என்பர். இவை ஒன்றுமுதல் ஐந்துவரை இருக்கிறது.  பைராக்ஸ் ஒன்று என்பது நார்மல். பைராக்ஸ் இரண்டு என்பது சாதாரண கட்டி. அதில் கண்டிப்பாக கேன்சர் கிடையாது. பைராக்ஸ் மூன்று என்பது சந்தேகத்துக்குரியது. அதில் சாதாரண கட்டியும் இருக்கலாம் அல்லது கேன்சரும் இருக்கலாம். நான்கு என்பதிலும் கேன்சர் இருக்கலாம். ஐந்து என்பது அவருக்கு ஆல்ரெடி கேன்சர் இருந்து பரவியிருக்கலாம்.  இதில் 1 மற்றும் 2ம் நிலைகளை நாம் கண்டறிவதன் மூலம், அவர்கள் அடுத்த நிலைக்குப் போகவிட முடியாமல் தடுக்கலாம். இந்த ரேடியாலஜியில் மேமோகிராம் என்பதை, ஒரு தெய்வீகமான டூல் என்று சொல்லலாம். குறிப்பாக இதன்மூலம் மிகவும் எளிதாகவும், விரைவாகவும் நோயைக் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

Leave a Comment