ஞானகுரு பதில்கள்
கேள்வி : குழந்தைகளை படிக்கவைப்பது இன்றைய பெற்றோருக்கு மன அழுத்தம் தருகிறதே?
- ஜி.சிவரஞ்சனி, ஸ்ரீவில்லிபுத்தூர்.
ஞானகுரு :
குழந்தைகளை படிக்க வைப்பது யாருக்கும் சிக்கலாக இருப்பதில்லை. பக்கத்து வீட்டுக் குழந்தையைவிட அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும், வகுப்பில் முதல் மதிப்பெண் பெற வேண்டும், பரிசு பெற வேண்டும் என்பது போன்ற அநியாய ஆசைகளே மன அழுத்தங்களுக்கு காரணமாகிறது. எல்லா படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது, மதிப்பெண்கள் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை என்பது போன்ற உண்மைகளைப் பெற்றோர் புரிந்துகொண்டாலே, அந்த வீட்டில் படிப்பு கொண்டாட்டமாகிவிடும்.
கேள்வி : இல்லற வாழ்வுக்கு பலம் எது..? பலவீனம் எது..?
- சி.சிந்தாமணி, திருத்தங்கல்.
ஞானகுரு :
கணவன், மனைவிக்கு இடையிலான நம்பிக்கையே இல்லற வாழ்வுக்கு பலம் தருகிறது. இந்த உறவுக்கு நடுவில் மூன்றாவது நபர் நுழையும்போது, இல்லற வாழ்வின் அஸ்திவாரம் ஆட்டம் காண்கிறது. அந்த மூன்றாவது நபர் பெரும்பாலும் கணவன், மனைவியின் பெற்றோராக இருப்பதுவே பெரும் துயரம்.












