சைதை துரைசாமியின் வரலாற்றுத் துணிச்சல்
இன்று தினத்தந்தி நாளிதழில் வெளியாகியிருக்கும் ஒரு செய்தி அதிமுகவின் பழைய வரலாற்றை மீண்டும் மக்களுக்கு ஞாபகப்படுத்தியிருக்கிறது. இதுதான், தமிழகத்தில் சலசலப்பை உண்டாக்கியிருக்கும் பெருநகர சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் கட்டுரை.
1972 நவம்பர் 26 அண்ணா திமுகவின் முதன் முதல் போராட்டத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அறிவித்தார். அதாவது, திமுக வெற்றிபெற்ற சட்டமன்றத் தொகுதிகளில் மக்கள் நம்பிக்கை இழந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அமைதிப் பேரணி நடத்தி மனுகொடுக்க வேண்டும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வீடுகளுக்கு சென்று ராஜினாமா செய்யச் சொல்லி மனு கொடுக்கப்பட்டது.
அப்போது சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி. அவரது வீட்டிற்கு வடபழனி சிங்கார வேலன் திடலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோபாலபுரம் நோக்கி ஊர்வலம் சென்றது.

குறிப்பிட்ட இடத்தில் ஊர்வலம் நிறுத்தப்பட்டு சைதை தொகுதி அமைப்பளர் சடகோபன் நான் உள்ளிட்ட சில பேர் மனு கொடுக்க அனுமதிக்கப்பட்டோம். முதல்வர் இடத்தில் சடகோபன் மனுகொடுத்தார். மனுவைப் பெற்றுக்கொண்டு ஒரு எலுமிச்சை பழத்தை கையில் கொடுத்தார்.
நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தாவர்களிடம் ஒரு எலுமிச்சைபழத்தை கொடுக்கிறீர்களே என்ன காரணம் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டார்கள். ’தெளிவில்லாதவர்கள் தேய்த்து குளிக்கட்டும்’ என்று முதல்வர் பதில் சொன்னார்.
மறுநாள் அந்தச் செய்தி பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வந்தது. தலைவருக்கு சடகோபன் மீது கடுமையான கோபமும் வருத்தமும் ஏற்பட்டது. ’மனு கொடுத்து விட்டு வா என்றால் நீ எதற்கு அவரிடம் எலுமிச்சை பழம் வாங்கிக்கொண்டு வந்தாய்’ என்று சத்தம் போட்டிருக்கிறார்.
இந்தத் தகவல் எனக்கு தெரிந்ததும், இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கு ஏற்றவகையில் திமுகவில் அறிவிப்பு ஒன்று வெளியானது. ’ஏன் விளக்கினோம் எம்.ஜி.ஆரை?’ என்று சைதாப்பேட்டை தேரடியில் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சி. முதல்வர் வீட்டிற்கு சென்றபோது அவர் ஒரு எலுமிச்சைப்பழம் கொடுத்தார். அவர் சைதாப்பேட்டைக்கு வருகிறார். வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுக்கத் திட்டமிட்டேன்.
அதன்படி பொதுக்கூட்ட மேடையில் ஏறி, ‘வாக்காளர் பேரணியன்று மனுகொடுக்க வந்த எங்களை தெளிவில்லாதவர்கள் என்று சொன்ன முதல்வரே கலைஞரே… எம்ஜியாரை நீக்கிய தாங்களும் 26 செயற்குழு உறுப்பினர்களும்தான்; தெளிவில்லாதவர்கள், நீங்கள் தேய்த்து குளியுங்கள்’ என்று மைக்கில் சொல்லிவிட்டு 26 எலுமிச்சைப்பழம் கோர்த்த மாலையை அணிவித்தேன்.
‘திருவாரூர் மு. கருணாநிதியே ராஜினாமா செய்’ என்ற துண்டு பிரசுரத்தை அவரது தலையில் தூவினேன். அந்தத் துண்டு பிரசுரத்தில் உள்ள வாசகத்தை பார்த்தவுடன், ’பிடி இவனை’ என்று சத்தம் போட்டார்.
உடனே அனைவரும் மேடையிலேயே என்னை அடித்து, துவைத்து நான் மயக்கம் அடையும் வரை தாக்கப்பட்டு மிதிக்கப்பட்டு கடுமையான வன்முறைத் தாக்குதலுக்கு ஆளானேன். இத்தனையும் மேடையில் முதல்வர் முன்னிலையில் நடந்தது. நான் பேச்சுமூச்சற்று கிடந்ததைப் பார்த்ததும் பயந்துபோய் நிறுத்த சொல்லி, பிறகு அங்கிருந்து காவல் நிலையம் கொண்டுசொல்லப்பட்டேன். பிளேடு என்ற பயங்கர ஆயுதத்தை கொண்டு கொலை செய்யும் முயற்சி என்று என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
21 நாட்கள் கழித்து பரோலில் வெளியே வந்ததும் நேராக மாம்பலம் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டேன். புரட்சித்தலைவர் என்னை வரவேற்று எல்லோர் முன்னிலையிலும், ‘இவர்தான் அண்ணாதிமுகவின் முதல் தியாகி, அண்ணா திமுகவின் பகத்சிங். எனக்கு ஒன்று என்றால் எத்தகைய காரியத்தையும் தியாகத்தையும் செய்வதற்கு எம்.ஜி.ஆர் படை தயாராக இருக்கிறது என்பதற்கு இவன் ஒரு உதாரணம்…’’ என்று பாராட்டி என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
அதோடு, ‘கொஞ்சம் நாட்களுக்கு எங்கும் செல்லவேண்டாம். என்னுடனேயே இரு. உனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது என் பொறுப்பு’ என்று அவருடன் தங்க வைத்துக்கொண்டார். திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தல் வரை நான் தலைவருடன் மாம்பலம் அலுவலகத்திலும், தலைமைக் கழகத்திலும் தங்கியிருந்தேன். 1977-ஆம் ஆண்டு வரை என்மீது போடப்பட்ட பொய்வழக்குகளின் எண்ணிக்கை 17.
கருணாநிதிக்கு எலுமிச்சைபழம் மாலை போட்ட வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 9 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. உயர்நீதி மன்றத்தில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு வந்ததும், என்னை தொகுதி அமைப்பாளராக நியமனம் செய்து பொதுக்குழுவில் என்னைப் பாராட்டி பேசினார். இத்தனை சம்பவங்களுக்கும் காரணமாக அதிமுகவின் முதல் போராட்ட நாள் வரலாற்றிலும் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.












