எது அவசரம்… எது அவசியம்..?

Image

சரியாக தேர்வு செய்வதே வெற்றி

காலையில் கண் விழிக்கும்போதே அன்று செய்யவேண்டிய வேலைகள் வரிசையாகத் தோன்றி மலைக்கவைப்பது சகஜம்தான். அந்த வேலைகளில் இருந்து எதனை முதலில் செய்வது, எதனை தள்ளி வைப்பது, எந்த வேலையை கண்டுகொள்ளாமல் விடுவது என்பதை பிரித்து, அதன்படி செயல்படத் தெரிந்த ஒருவரால்தான், அன்றைய பொழுதை டென்ஷன் இல்லாமல், சிக்கல் இல்லாமல் கழிக்க முடியும்.

பொதுவாகவே, அதாவது இந்த நிமிடத்தில் செய்து முடிக்கவேண்டிய பணிக்கு மட்டுமே முன்னுரிமை தருவதுதான் பெரும்பாலான நபர்களின் வழக்கமாக இருக்கிறது. அதனால், அவசரம் என்று வந்த பிறகே பல விஷயங்களை செய்து முடிக்கிறார்கள். கரண்ட் பில் கட்டுவதற்கு கடைசி நாள், ஸ்கூல் பீஸ் கட்டுவதற்கு கடைசி நாள் என பல விஷயங்களை, முன்கூட்டியே முடிக்க முடியும் என்றாலும் தேவையில்லாமல் தள்ளிப் போட்டு கடைசி நேரத்தில் அவஸ்தைப் படுகிறார்கள்.  

அவசரம் எப்போதும் சரியான பலனை தருவதில்லை. உதாரணத்துக்கு, அலுவலகத்துக்கு அவசரமாகச் செல்வதற்கு நேரமாகிறது என்பதற்காக  சிலர் ஹெல்மெட் எடுக்காமல் போகிறார்கள். அத்துடன் வாகனத்தையும் விரைவாக ஓட்டிச் செல்கின்றனர். இதனால், மனதில் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல், இன்னும் சிலர் சாப்பிடாமல் அவசரஅவசரமாக செல்கின்றனர். ஒருசிலர், வேளை தவறாது விழுங்க வேண்டிய மாத்திரைகளைக்கூட விழுங்குவதில்லை. இதனால், உடலாலும் மனதாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

கடைசி நேரத்தில் அவசரப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. காலையில் கொஞ்சம் சீக்கிரமாக எழுந்துவிட்டால் இந்த டென்ஷன் தேவையே இல்லை என்பதை புரிந்துகொள்ள முடியும்.

எல்லோருக்குமே 24 மணி நேரம்தான் கிடைக்கிறது. நேர மேலாண்மையை மிகச்சரியாக கடைபிடிக்கும் நபர்கள், அந்த நேரத்தை மிகச்சரியாக கணக்கிட்டு ஏகப்பட்ட பணிகளை செய்து முடிக்கிறார்கள். அதே நேரத்தில் சிலர் ஒருசில வேலைகளை முடிக்கவும் தெரியாமல் அவஸ்தைப்படுகிறார்கள்.

ஒருசில வேலைகளுக்கு நிரம்பவே டயம் இருக்கும். அதற்காக அதனை எதள்ளிப்போடக் கூடாது. உதாரணமாக ஒரு திருமணம் மூன்று மாதங்களுக்குப் பிறகு முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்றாலும், முதலில் மண்டபம் புக் செய்ய வேண்டும், சமையல்காரர் புக் செய்ய வேண்டும். அதைவிடுத்து முதலில் பட்டுச்சேலை வாங்குவதற்கும் உறவினர்களை அழைப்பதற்கும் நேரம் ஒதுக்குவது வீண். ஏனென்றால் கடைசி நேரத்தில் மண்டபத்துக்குப் போனால், சுமாரான மண்டபங்கள்தான் கிடைக்கும்.

வெளியூர் பயணம் என்றால் முன்கூட்டியே வருவதற்கும் டிக்கெட் புக் செய்ய வேண்டியது அவசியம். எப்படியாவது கிடைத்துவிடும், அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தால், அந்த பயணத்தையே அனுபவிக்க முடியாத அளவுக்கு டிக்கெட் கிடைக்காத சிக்கல் பாடாய்படுத்தி விடும்.

எனவே, எது அவசரம் என்று பார்க்க வேண்டாம். எது அவசியம் என்று ஆராய்ந்து, அதற்கு முன்னுரிமை கொடுங்கள். அதுதான் வெற்றியின் ரகசியம்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment