ஆரோக்கிய ரகசியம்
உடல் ஆரோக்கியமாக இருக்க ஆசைப்படுகிறீர்களா..? மிக எளிதான ஒரு வழி இருக்கிறது. ஆம், தினமும் உணவு உட்கொள்வதற்கான இடைவெளி குறைந்தது 10 மணி நேரமாக இருக்கும்படி அமைத்துக்கொண்டாலே போதும் என்கிறது மாடர்ன் விஞ்ஞானம்.
எல்லா மதங்களும் உண்ணாமை எனப்படும் விரதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே செய்கின்றன. இந்து மதம் அமாவாசை, பௌர்ணமி கழிந்த ஏகாதசி என்று கூறப்படும் பதினோராவது நாளன்று உபவாசம் இருக்கச் சொல்கிறது. மேலும், ஆடி மாதம் பௌர்ணமிக்கு முன்வரும் ஏகாதசியிலிருந்து, கார்த்திகை மாதப் பௌர்ணமிக்கு முன்வரும் ஏகாதசிவரையுள்ள நான்கு மாதங்களுக்கு இந்து மதத்தினர் பலர் ஒரு வேளை மட்டும் உண்பதைக் கடைபிடிக்கின்றனர்.
கிறிஸ்துவ மதம் லெண்ட் என்று கூறப்படும் 40 நாள் உபவாசத்தையும், இஸ்லாமிய மதம் ரம்ஜான் என்று சொல்லப்படும் 30 நாள் உண்ணாமையை வலியுறுத்துகின்றன. எல்லா மதங்களுமே அடுத்த வேளை உணவு நினைப்பைத் விர்த்துக் கடவுளை நினைவு கூர்வதை இக்காலங்களில் அதிகரிக்கவேண்டும் என்று விரும்புகின்றன.
உபவாசம் இருப்பதால் மனித ஆயுளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது மருத்துவ உண்மை. ஆதி கால மனிதர்கள் நம்மை போல் 3 வேளை உண்டு வாழ்ந்தவர்கள் அல்லர். உணவு கிடைக்கும் நேரத்தைவிட உண்ணாமலிருந்த நேரமே அதிகம். அதனால் உயிரணுக்களிலும் அதன் மூலம் மற்ற உறுப்புகளிலும் ஏற்பட்ட மாற்றங்களின் பரிணாமத் தொடர்ச்சியே தற்கால மனிதர்களிடையே நீண்ட நேர உண்ணாமையின் பயன்களுக்குக் காரணம் எனலாம்.
உபவாசம் இருக்கும் காரணத்தால், சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தல் (Glucose regulation), நோயெதிர்ப்புத் திறன் அதிகரிப்பு (Stress Resistance), வீக்கத் தணிப்பு (Suppression of inflammation) ஆகிய நன்மைகள் உண்டாகின்றன. மேலும், உயிரணுக்கள் தமக்குள்ளே ஏற்படக்கூடிய சேதங்களைத் தடுக்கும் வழிகளைப் பலப்படுத்துவதையும் சேதமானவற்றை சரிசெய்வதையும் வெளியேற்றுவதையும் மேற்கொள்கின்றன.
எலிகளிடத்தும் மற்ற பிராணிகளிடத்தும் நடத்திய பரிசோதனைகளின்மூலம் நீண்டநேர உண்ணாமை, உடல் பருமன், சர்க்கரை, இதய ரத்தக்குழாய் அடைப்பு, மூளை மற்றும் நரம்புச்சிதைவு ஆகிய நீண்ட கால வியாதிகளில் நன்மை பயக்கும் மாற்றங்கள் ஏற்படுத்துவதைக் கண்டறியமுடிந்தது. பின்னர், பிராணிகளிடமும் மனிதர்களிடமும் நடத்தப்பட்ட பரிசோதனைகள் நீண்டநேர உண்ணாமை உடல்நலனில் நற்பயன்களையும் மூப்பையும் நீண்டகால நோய்களையும் பின்தள்ளுவதையும் அறியமுடிந்தது.
நீண்டநேர உண்ணாமையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன்மூலம் பின்னே வரக்கூடிய சவால்களைத் தடுத்து நிறுத்தும் எதிர்ப்புச் சக்தியும் இவ்வுறுப்புகளில் ஏற்படுகின்றன. இவ்விளைவுகள் மனிதர்களிடம் மட்டுமல்லாமல் எல்லா உயிர்வகைகளிடத்தும் காணப்படுகின்றன.
மேலும், நீண்டநேரம் உண்ணாதிருக்கும் சமயத்தில் உயிரணுக்கள் பிராணவாயு அணுக்களினால் சிதிலமடைந்த புரதங்களையும் ஊன்குருத்துகளையும் (Mitochondria) வெளியேற்றும் பணியை செவ்வனே செய்கின்றன.
நீண்டநேர உண்ணாமை மனிதர்களிடத்திலும் பிராணிகளிடத்திலும் உடலாற்றலை அதிகப்படுத்தலாம். இளம் வயதினர் தினம் 16 மணி நேரம் உண்ணாதிருத்தலுடன் உடற்பயிற்சியையும் சேர்ந்துக் கடைபிடித்தால் கொழுப்பு எடை குறையும், ஆனால், சதைப்பற்று குறையாது. நீண்டநேர உண்ணாமை இரத்த அழுத்தம், நாடித் துடிப்பு, இரத்தக் கொழுப்பு ஆகியவற்றைச் சரிசெய்வதன்மூலம் இதய இரத்தக் குழாய்களை வளமூட்டுகிறது. ஒருநாள்விட்டு ஒருநாள் உண்ணாமை, சாதாரண மற்றும் எடை கூடியவர்கள் ஆகிய இரு வகையினரின் இதயத்தையுமே போஷிக்கிறது.
உண்ணாமை, புற்று நோய் உயிரணுக்களின் சக்தியையும் வளர்ச்சியையும் குறைக்கிறது. சாதாரண உயிரணுக்களின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதின்மூலம் அவை புற்று நோய் உயிரணுக்களாக மாறுவதைத் தடுக்கிறது. நீண்டநேர உண்ணாமை மனிதர்களின் மூளையில் ஏற்படும் புற்றுநோய் கட்டியின் வளர்ச்சியைத் தடைசெய்து ஆயுளை நீடிக்கவும் செய்கிறது.
இளைப்பு நோயினால் அவதிப்படும் உடல் பெருத்தோர், 2 மாதங்கள் ஒருநாள்விட்டு ஒருநாள் உண்ணாதிருந்தால் உடல் எடை குறைவதுடன் இளைப்பின் தாக்கமும் குறைகின்றது. ரூமட்டாய்டு ஆர்தரைடிஸ் போன்ற மூட்டு வியாதிகளின் தாக்கமும் குறைகிறது. உடல் கொழுப்பைக் குறைக்கும் அறுவை சிகிச்சைக்குமுன் 2 வாரம் நீண்டநேர உண்ணாமைக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் பின்விளைவுகளைக் கணிசமாகக் குறைக்கின்றது. நீண்டநேர உண்ணாமை விளையாட்டு வீரர்களின் திறனை அதிகரிக்கிறது. மூளை தண்டுவடக் காயங்களினால் ஏற்படும் பாதிப்பையும் மரணத்தையும் குறைக்கின்றது
நடைமுறைச் சிக்கல்கள்:
நீண்டநேர உண்ணாமையின் நல்விளைவுகள் நூறு வருடங்களுக்கும் மேலாகத் தெரிந்திருந்தபோதும் சமூகத்திலோ நோயாளிகளிடமோ இதனை அறிமுகப்படுத்துவதும் தொடர்ந்து கடைபிடிக்கச் செய்வதும் கடினமான விஷயங்களாகவே உள்ளன. இதன் காரணம் மூன்று வேளை உணவு, இடையிடையே சிற்றுண்டி என்னும் வழக்கம் மக்களிடம் ஆழ்ந்து பதிந்துவிட்டதே. போதாதற்கு, விதவிதமான உணவு வகைகளும் அதைப் பற்றிய விளம்பரங்களும் நம்மைச் சதா காலமும் சூழ்ந்துள்ளன. இவ்வாறு இருக்கும்போது 16லிருந்து 18 மணி நேரம் உண்ணாமை என்பதை மருத்துவர்களோ, நோயாளிகளோ சிந்திப்பதற்கே சந்தர்ப்பமில்லை. இதையும்மீறி ஒருவர் நீண்டநேர உண்ணாமையைக் கடைபிடிப்போம் என நினைத்து ஆரம்பிக்கும் காலத்தில் பசி, எரிச்சல், கவனக்குறைவு ஏற்படுவதும் காரணமாகிவிடுகிறது.
அதனால் இது முழுமையாக சாத்தியம் இல்லை என்றாலும், தினமும் மாலை நேரத்தில் வேகமாக சாப்பிட்டுவிட்டு, மறுநாள் காலையில் லேட்டாக உணவு உட்கொள்வதையாவது தொடரலாம். அதாவது ஏதேனும் ஒரு நேரமாவது, உணவுக்கான இடைவெளி 10 முதல் 12 மணி நேரம் வரையிலும் இருப்பது உடல் நலனுக்கு நல்லது.
கடைப்பிடித்து பாருங்களேன்.












