சேவாக் எனும் சூப்பர்மேன்

Image

அதிரடி சரவெடி

இந்திய கிரிக்கெட்வரலாற்றில் அதிரடி ஆட்டக்காரர் என்றால், அது வீரேந்திர சேவாக் மட்டும்தான்.  சச்சின் தன் கிரிக்கெட் வாழ்வின் ஒரு பகுதி வரையில் அதிரடி ஆட்டக்காரர் என்றாலும், பிற்பகுதியில், சற்று நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார். ஆனால் சேவாக் தன முதல் சர்வதேச ஆட்டத்திலிருந்து கடைசி ஆட்டம் வரை தன் பாணியை ஒருபோதும் மாற்றிக் கொள்ளவில்லை. வெற்றியோ தோல்வியோ அவரது ஆட்டத்தின் தன்மையும் பாணியும், ஒரு போதும் மாறாதது என்பதாலே சேவாக்கை சூப்பர்மேன் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.


ஆஃப் ஸ்பின் பந்துவீச்சு, மற்றும் அதிரடியாக விளையாடக் கூடிய பின்வரிசை ஆட்டக்காரராகவே அவர் அறிமுகமானார். முதலிரண்டு போட்டிகளில் அவ்வளவாக சோபிக்கவில்லை. அவர் தன் முத்திரையைப் பதித்தது, 2001 மார்ச்சில் மிக பலம் வாய்ந்த ஸ்டீவ் வாஹின் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக. அந்த ஒருநாள் பந்தயத்தில் சேவாக் 54 பந்துகளில் 58 ஓட்டங்கள் எடுத்தார். இது தவிர, ஹெய்டன், ஸ்டீவ் வாஹ், மற்றும் டேமியன் மார்ட்டின் ஆகிய முன்னணி மட்டையாளர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த புள்ளி விவரங்களை விட முக்கியமானது, அவர் அடித்து ஆடிய விதம்தான் அத்தனை பேரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

அதே வருடத்தின் நவம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்க் அணிக்கு எதிராக, தென்னாப்பிரிக்க மண்ணில் தன் முதல் சதமடித்தார்.அந்த பந்தயத்தில் சொற்ப ஓட்டங்களிலேயே இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டபோதும், சச்சினுடன் ஜோடி சேர்ந்து சேவாக ஒரு சதம் விளாசினார். அப்போது பார்த்தவர்கள், ஆடுகளத்தின் இரண்டு பக்கங்களிலும் சச்சினே விளையாடுவதைப் போன்று உணர்ந்தனர்.


மணிக்கட்டின் சுழற்சிக்கும் லாகவத்துக்கும் ப்ரசித்தமானவர் சேவாக். மிடில் ஸ்டம்பில் கூட அல்ல லெக் ஸ்டம்பிலும் அதற்கு வெளியிலும் வந்து விழுந்த பந்துகளைக் கூட அவர் ஆஃப் சைடில் பாயிண்ட் மற்றும் , தேர்டு மான் ஆகிய நிலைகளுக்கு நடுவே எல்லைக் கோட்டுக்கு விரட்டுவதில் கில்லாடி. கூர்மையான கண்பார்வை, பந்து வீசப்படும் அளவை மிக விரைவில் அனுமானிக்கும் திறன். மிக இளக்கமான மணிக்கட்டுகள் மற்றும் மிக முக்கியமாக கண்ணுக்கும் கைகளுக்கும் இடையேயான இணக்கம். இவை அனைத்தையும் ஒருங்கே பெற்றிருந்தார் சேவாக், இந்த நிலைகளுக்குள் பந்தை தரையோடு மட்டுமல்ல, நினைத்த மாத்திரத்தில் அந்தத் தடுப்பு வீரர்களின் தலைக்கு மேலும் தூக்கி அடிக்கும் திறன் வாய்ந்தவர். அது மட்டுமல்லாமல் மைதானத்தின் எந்த இடத்திற்கும் பந்தை விரட்டக்கூடிய ஒரு ஆல்ரவுண்ட் ஆட்டத்திறனும் அவருக்கு உண்டு.


1980  வரை உலகெங்குமே துவக்க ஆட்டக்காரர்கள் என்போர், காவஸ்கர், பாய்காட், போன்று நிதானமாக விளையாடக் கூடியவர்களாகவே இருந்தார்கள். 80களின் மத்தியில் ஸ்ரீகாந்த் வந்தார். அடித்து ஆடும் ஒரு புதுப்பாணி ஆட்டத்தைக் கொண்டுவந்தார். அதற்குப் பின் நவ்ஜோத் சிங் சித்துவும்,ஒரு ஆக்ரோஷமான துவக்க ஆட்டக்காரராக இருந்தார்.

2002ல் , இங்கிலாந்தின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், திடீரென்று சேவாக்கை துவக்கக் ஆட்டக்கரராக களமிறக்கினார், கங்குலி,  அதற்கு முன் அவர் இங்கிலாந்தில் விளையாடியதில்லை. துவக்க ஆட்டக்காரராக, இறங்கியதுமில்லை. ஆனால் அதுவெல்லாம் அவருக்கு பொருட்டேயல்ல. அந்த ஆட்டத்தில் 96 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்த டெஸ்ட் போட்டியிலேயே துவக்க ஆட்டக்காரராக தன முதல் சதத்தை அடித்தார். அன்றிலிருந்து இந்தியாவுக்கு துவக்க ஆட்டக் காரரகவே களமிறங்கினார்.

ஒரு வகையில் தன் ஆட்டத்தின் மூலம் சரிந்து விழுந்து கொண்டிருந்த டெஸ்ட் ஆட்டத்தின் மீதான பார்வையாளரின் கவனத்தையும் சேவாக் மீட்டெடுத்துக் கொடுத்தார்.என்றே சொல்லலாம்.பின்னர் சௌரவ் கங்குலி தன தலைமைகே காலத்தின் முக்கிய நிகழ்வுகள் பற்றி நினைவு கூர்கையில், சேவாக்கை துவக்க ஆட்டக் காரராக மாற்றியது, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான நிகழ்வு என்று கூறினார்.


இந்திய மட்டையாளர்கள் ஒரு இன்னிங்சில் அடித்த 10அதிகபட்ச ரன்கள் வரிசையில் முதல் மூன்று 319,  309,  293 ஸ்கோர்கள் சேவாக் அடித்தவை, தவிர அவரது சராசரியான 49.34 என்பதும், கங்குலி மற்றும் லக்ஷ்மண் ஆகியோரை விடவும் அதிகம்.
அவர் ரன் குவிக்கும் வேகம் அவரை ஒரு நாள் போட்டிகளுக்கும், 20/20 போட்டிகளுக்கும் மிக மிகப் பொருத்தமானவர் என்று நினைக்க வைத்தாலும்,ஒரு நாள் போட்டிகளில் இரண்டாவது இரட்டைச் சதம் அடித்தவர் என்ற பெருமைக்குரியவர் என்றாலும்,டெஸ்ட் போட்டிகளிலேயே அவர் அதிகம் சோபித்தார்.

2007 உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா முதல் சுற்று ஆட்டத்தில் , வங்கதேசத்திடம்,வீழ்ந்தது, பின்னர் இலங்கையிடமும் தோற்று. காலிறுதிக்குகூடத் தகுதி பெறாமல் திரும்பி வந்தது மீண்டும் 2011 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் வங்க தேசத்துடன் டாக்காவில் மோதியது இந்தியா. 2007ன் நினைவுகள் மறையவில்லை. ஆனால் அந்த ஆட்டத்தில் சேவாக 175 ரன்கள் குவித்தார். இந்தியா எளிதாக வென்றது. பழிக்குப்பழி என்பது போல் இலங்கையை இறுதி போட்டியில் சந்தித்து கோப்பையை வென்றது..அவர் காலத்தில் உலகிலேயே சிறந்த அணியாக விளங்கிய ஆஸ்திரேலியா அணிக்கெதிராகவும் சேவாக் சோடை போனதில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவரடித்த 319 ரன்கள் ஒரு சாதனை என்றால், சதத்தில் முடியாத ஒரு ஆட்டமும் அவரது மிகச்சிறந்த ஆட்ட ங்களில் ஒன்று. சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் நான்காவது இன்னிங்க்சில் 387 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கியது இந்தியா. நிச்சயம் தோல்விதான் என்று நினைத்த சமயத்தில், புயல் வேகத்தில் 68 பந்துகளை மட்டுமே சந்தித்து 83 ரன்கள் அடித்து வெளியேறினார் சேவாக். அந்த ஆட்டம் உருவாக்கிய உற்சாக வேகத்தில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் ஊக்கம் அதல பாதாளத்திற்கு சரிந்தது,பின் டெண்டுல்கர் சதமடிக்க இந்தியா ஒரு நம்ப முடியாத வெற்றியைப் பெற்றது. சச்சின் அந்த வெற்றிக்கு சேவாக்கின் ஆட்டம்தான் முதல் காரணம் என்றார்.


சேவாக்கின் இந்த தனிச்சிறப்பு மிக்க மட்டைத்திறன், 2010க்கு பின் திடீரென்று சரிவுக்கு உள்ளானது. ஆனால் அதில் அவ்வளவு ஆச்சரியம் இல்லை. ஏனெனில், அவரைப் போன்ற மட்டை பிடித்தலின் அடிப்படை தொழில்நுட்பத்தில் பலமில்லாத, கண் கை ஒருங்கிணைப்பும், உள்ளுணர்வும் பொருந்திய ஆட்டக்காரர்களின் சரிவு எப்போதுமே திடீரென்று வருவதே ஆகும்.  2010ம் ஆண்டின் இறுதியில்,தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சேவாக் 6 இன்னின்க்சுகளில் ஒரே ஓரு அரை சதமே அடித்தார். அது ஒரு தற்காலிகப் பின்னடைவு என்று எண்ணியவர்களுக்கு, 2011 இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் அவரது ஆட்டம் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. சொல்லப்போனால் 2011 இங்கிலாந்து போட்டித் தொடரில் இந்தியாவின் பஞ்சரத்னங்களில் டிராவிட் ஒருவரைத் தவிர மற்றவர்கள் எவருமே சோபிக்கவில்லை.காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாமல் இருந்த சேவாக் மூன்றாவது டெஸ்டில் தனது டெஸ்ட் வாழ்வில் முதல் தடவையாக இரண்டு இன்னின்க்சிலும் பூஜ்யம் பெற்று வெளியேறினார். அடுத்த போட்டியிலும் சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. 4 போட்டிகளிலும் இந்தியா தோற்றது.
கேள்விகள் எழத் தொடங்கின, நல்லவேளையாக அடுத்தத் தொடர் பலவீனமான மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இந்தியாவில் நடைபெற்றது. அந்தத் தொடரிலும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றாலும்,ஒரு நாள் போட்டிகளியில் 219 ரன்கள் அடித்து உலக சாதனை புரிந்தார்.ஆனால் அதன் பிறகு 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சேவாக் ஒரே ஓர் அரை சதமே அடித்தார்.  2011ம் ஆண்டு அவரது சர்வதேச போட்டிகளூக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

தனித்திறன் மிக்க அவரது பேட்டிங் ஒரு பந்து வீச்சாளராக அவரது திறமைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதிலிருந்து தவிர்ததுவிட்டது என்று கூறலாம். சமயங்களில் சில பந்தயங்களில் ஹர்பஜன் சிங்குடன் மறுமுனையில் சேவாக் தன ஆப் ஸ்பின் பந்துவீச்சில் ஈடுபடும்போது, சேவாக்கே ஒரு classical off spinnerன் திறனைப் பெற்றிருந்தார். குறிப்பாக அவரது பந்து வீசும் திசை எப்போதும், ஹர்பஜன் போல லெக் ஸ்டம்பின் மீது அல்லாமல் ஆப் ஸ்டம்ப் மற்றும் அதற்கு சற்று வெளியே என்று ஒரு செவ்வியல் ஆப் ஸ்பின்னர் போல அமைந்தது. அவரது பிற்கால கிரிக்கெட் வாழ்வில், அவருக்கும் தோனிக்கும் சில பிரச்னைகளை எழுப்பியது என்றும், அதனாலேயே அவர் சில வாய்ப்புகளை இழந்தார் என்றும் கருதவும் இடம் இருக்கிறது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதமடித்த இந்திய வீரர்களில் 15 சதங்களுடன் சேவாக் 3-வது இடத்தில் உள்ளார். இப்பட்டியலில் சச்சின் (48) முதலிடத்திலும், கங்குலி  (22) இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அதேபோன்று, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சேவாக் சதமடித்துள்ள 15 ஆட்டங்களில் 14-ல் இந்தியா வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment