இத்துடன் ஈரோடு தமிழன்பன் வாழ்வு நிறைவடைந்தது.

Image

மரபுக்கும் புதுமைக்கும் பாலம் போட்ட கவிஞன்

பெரும்பாலான நபர்களுக்கு அந்த காலத்து டிடி செய்தி வாசிப்பாளராக மட்டுமே ஈரோடு தமிழன்பனை தெரியும். அவர் ஒரு கவிஞர், சென்னை நியூ காலேஜ் பேராசிரியர் என்பதெல்லாம் நிறைய பேருக்குத் தெரியாது.

மரபுக் கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடையில் அழகிய பாலம் அமைத்தவர். ஹைக்கூ, சென்ட்ரியூ, லிமைரைக்கூ ஆகிய புதுவகை குறும்பாக்களிலும், எழுதி குவித்தவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்!

”எதற்கப்பா எதுகை மோனை

மின்னலைப் பிடித்து வைக்கவா

சட்டி பானை?”

– என்று விழிப்பூட்டியவர்.

ஊது வத்திச் சின்னம் கட்சி வென்று

கோட்டை பிடித்தும்

நாற்றம் இன்னும் போகவில்லை!”

 என அரசியல்வாதிகளை விமர்சனம் செய்தவர். அவரது ‘அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்’ நூல் தமிழகத்தில் மிகப்பெரும் அதிர்வலைகள உருவாக்கிய ஒன்று.

சாகித்ய அகாதமி விருது பெற்ற இவரின் ‘வணக்கம் வள்ளுவ’ நூல் பல கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினராக, அறிவியல் தமிழ் மன்றத்தின் உறுப்பினராகப் பன்முகம்கொண்டு விளங்கிய அய்யா ஈரோடு தமிழன்பன் தனது 92-ம் வயதில் நிறை வாழ்வு வாழ்ந்து முடித்திருக்கிறார்.

“தாலியின் பெருமை

கணவன் அறிவான்

கணவனை விடவும் மனைவி அறிவாள்

இருவரையும் விட மார்வாடி அறிவான்” – என்ற புகழ்பெற்ற கவிதையை எழுதியவர் உடலுக்கு மரணம் உண்டு அவர் விரலுக்கு மரணம் இல்லை. “சாவு முடிவல்ல ஒரு சந்திப்பின் ஆரம்பம்” என்று எழுதியிருந்தார் தமிழன்பன். இன்று அவரது வாழ்வுக்கு முடிவு. அவரது கவிதைகளுக்கு அல்ல.

Leave a Comment