நேரத்துக்கு விலை அதிகம்
நம் இந்தியாவை பொறுத்தவரை மனிதனின் சராசரி ஆயுள் கிட்டத்தட்ட 65 வருடங்கள்தான். அதனால் அதற்குள் ஆசைப்பட்ட இலக்குகளை அடைந்துவிட வேண்டும் என்றால் நேரத்தை திட்டமிட்டுத்தான் செலவழிக்க வேண்டும். தன் வாழ்நாளில் நேரத்தை மிகச்சிறப்பாக பயன்படுத்தி வெற்றியடைந்த ஒரு தலைவர் இருக்கிறார். பொதுக்கூட்டத்திற்கு வருவதற்கு ஒரே ஒரு நிமிடம் தாமதமானாலும் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்வார் அவர்.
அப்படியொரு நேர நிர்வாகிதான் நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி. நேரம் தவறாமையை காந்தி கறாராக கடைபிடித்தார் என்பதற்கு அத்தாட்சிதான் அவருடைய இடுப்பில் தொங்கும் கடிகாரம். அந்தக் காலத்தில் கைகளில் கட்டும் கடிகாரம் அறிமுகமாவில்லை என்பதால் காந்திக்கு பாக்கெட் வாட்ச் பரிசளித்தார் அவரது சகோதரர். அந்த பாக்கெட் கடிகாரத்தை தன் இடுப்பு நூலில் கட்டி தொங்கவிட்டிருந்தார் காந்தி. அந்த கடிகாரம் காந்தி சுடப்பட்ட நேரமான 5:17 என்பதை காட்டியபடி இன்னமும் அருங்காட்சியத்தில் இருக்கிறது.
காந்தியின் நேரம் தவறாமைக்கான இரண்டே எடுத்துக்காட்டுகள் மட்டும் இங்கே.
காந்தி பொதுவாக ரயில் பயணங்களையே விரும்புவார். கார், பஸ் பயணங்களில் வேறு எந்த பணியும் செய்யமுடியாது என்பதுதான் அவரது ரயில் பயணத்தின் ரகசியம். ரயிலில் ஏறி அமர்ந்ததும் வேடிக்கை பார்ப்பது, வெட்டிப் பேச்சு பேசுவது என்று எதுவும் இருக்காது. உடனடியாக அடுத்த கூட்டத்திற்கு பேச்சு தயார் செய்வது, அறிக்கைகள் எழுதுவதில் இறங்குவார். இதையடுத்து காந்திக்கு வந்த கடிதங்களுக்கு பதில் எழுதுவதும் இதுபோன்ற பயணங்களில்தான் நடக்கும்.
ஒரு முறை பயணம் செய்துகொண்டிருந்தபோது, நாம் இறங்குவதற்கு இன்னமும் எத்தனை நேரம் இருக்கிறது என்று உதவியாளரிடம் கேட்டார் காந்திஜி. இதோ சில நிமிடங்களில் வந்துவிடும் என்று அவர் சொல்லவே, தன்னுடைய எழுத்து வேலைகளை எல்லாம் எடுத்துவைத்து, கீழே இறங்குவதற்கு தயாரானார் காந்திஜி. ஆனால் அவர் இறங்கவேண்டிய சந்திப்பு வருவதற்கு 10 நிமிடங்கள் ஆனது. உடனே காந்திக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. இத்தனை நேரம் ஆகும் என்று தெரிந்திருந்தால் இன்னமும் இரண்டு கடிதங்கள் எழுதியிருப்பேன்.. இப்படி வீணாக இத்தனை நேரம் உட்காரவைத்துவிட்டாயே என்று கோபமானார். 10 நிமிடங்கள் என்பது ஒரு விஷயமே இல்லை என்று நினைக்கலாம், ஆனால் காந்திக்கு ஒவ்வொரு நொடியும் தேவைப்பட்டது. அதனால்தான் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும், அனைத்து மக்களுடன் கலந்து உரையாடவும், சுதந்திர போராட்டத்தை சிறப்பாக தலைமையேற்று நடத்தவும் முடிந்தது.
காந்தியின் மரண தினமான ஜனவரி 30, 1948 அன்றும் நேரம் தவறாமையை வலியுறுத்தினார் காந்தி. ஆம், காந்தி எப்போதும் மிகச்சரியாக மாலை 5 மணிக்கு பிரார்த்தனை வழிபாட்டு கூட்டத்தை தொடங்கிவிடுவார். ஆனால் அன்று இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் காந்தியிடம் தீவிரமாக உரையாடிக்கொண்டு இருந்தார். நேருவுக்கும் படேலுக்குமான மோதல் விவாதிக்கப்பட்டது. அந்த உரையாடலை தடுக்காமல் அமைதி காத்தார் மனு. அதேநேரம் நேரம் தவறாமையில் காந்தி எத்தனை கடுமையானவர் என்பதும் தெரியும். அதனால் காந்தியின் பார்வையில் படும்படி நின்று கடிகாரத்தை சுட்டிக்காட்டினார் மனு.
5 மணி 10 நிமிடங்கள் என்று காட்டியது. உடனே பரபரவென எழுந்தார் காந்தி. எதற்காகவும் கடவுளை காக்க வைப்பது குற்றம், நான் புறப்படுகிறேன் என்று படேலுக்கு விடைகொடுத்து வேகவேகமாக கிளம்பினார் காந்தி. எப்போதும் நடை பாதையில் செல்லும் காந்தி, நேரமாகிவிட்டது என்பதால் புல்தரையின் மீது வேகமாக நடந்துசென்றார். 5.17 மணிக்கு மூன்று குண்டுகளால் காந்தியின் வாழ்க்கையை கோட்சே முடித்துவைத்தான்.
வாழ்நாள் முழுவதும் நேரத்தின் மகிமையை உலகிற்கு வலியுறுத்திய காந்தி, நொடியில் இறந்துபோனார். இன்று பொதுக்கூட்டங்களுக்கு ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் தாமதமாக வரும் தலைவர்களுக்கு மத்தியில் 10 நிமிட தாமதத்தைக்கூட குற்றமாக கருதியதால்தான் மகாத்மாவாக உயர்ந்தார் காந்திஜி.












