சென்னையில் எக்கச்சக்க மாற்றங்கள்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 432

இந்தியாவில் முக்கியமான நகரங்களை எல்லாம் ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகரமாக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் பெருநகர சென்னைக்கும் முக்கிய இடம் கிடைத்தது. இதையடுத்து சென்னையின் மாற்றத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க முன்வந்தார் மேயர் சைதை துரைசாமி.

முதல்கட்டமாக தமிழக அரசுடன் பெருநகர சென்னை மாநகராட்சி 50 : 50 என்ற விகிதத்தில் இணைந்து, ‘சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது.  இந்த வளர்ச்சித்  திட்டத்தில் தியாகராயநகர், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை மற்றும் மயிலாப்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. நான்கு தொகுதிகளில் இருந்து 110  கி.மீ நீளமுள்ள 409  சாலைகள்  தேர்வு செய்யப்பட்டன.

இந்த நான்கு தொகுதிகளிலும் சீர்மிகு நகரத் திட்டத்தின் தொலைநோக்கு பார்வையின்படி, பெருநகர சென்னை மாநகரத்தை தன்னிறைவுடன், நிலையான சுற்றுச்சூழல் மற்றும் சீரிய பொருளாதாரத்தைக் கொண்ட உலகத் தரம் வாய்ந்த வணிக நகரமாக மாற்றப்படும்.

ரயில் போக்குவரத்து, மாநகரப் பேருந்துகள் போன்றவற்றை இணைத்து  பாதுகாப்பான நடைபாதை மற்றும் சைக்கிள் தடத்தை மேம்படுத்த உள்கட்டமைப்புகள், தனிநபர்  பயன்பாட்டிற்கு உகந்த நகர்புற போக்குவரத்து இயக்க மேம்பாட்டுத் திட்டம் மேற்கொள்ளப்படும்.

மோட்டார் இல்லா வாகனப் போக்குவரத்தை மேம்படுத்துதல் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு ஏற்ற நடைபாதை ஏற்படுத்தப்படும். இதன்படி, நடப்பவர்களுக்கு உகந்த நடைபாதைகள், போக்குவரத்து சத்தமில்லாத தெருக்கள், மாற்று திறனாளிகளுக்கான நடைபாதை, மிதிவண்டி தடம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலமாக பல அடுக்குமாடி வாகனநிறுத்தம் ஏற்படுத்தப்படும்.

இதுபோன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு கனவு கண்டிருந்தார் மேயர் சைதை துரைசாமி. அவர் காலத்திலேயே இதனை தொடங்கிவைப்பதற்கு நல்ல வாய்ப்பு உருவானது.

Leave a Comment