ரஜினியும் இளையராஜாவும் மது பிரியர்கள்
இன்னைக்கு பஸ்ஸில் ஜன்னலோரம் சீட் கிடைச்சது, ஜாலியா டிராவல் செஞ்சேன். அதுக்கு ஒரு பார்ட்டி வைக்கலாம் எனும் ரேஞ்சுக்கு குடிப்பதற்கு ஏதேனும் காரணம் தேடுகிறார்கள். மது குடித்தால் மகிழ்ச்சி கிடைக்கும் என்பது குடிகாரர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
மதுவில் கிடைப்பது உண்மையான மகிழ்ச்சி இல்லை என்கிறது மருத்துவ உலகம். ஆனாலும் மகிழ்ச்சி கிடைப்பது எப்படி..? அறிவியல்பூர்வமாக பார்க்கையில், மது குடிக்கத் தொடங்கியதும் மூளையின் செயல்தன்மை மந்தமடைகிறது. மூளையின் செயல் குறைந்து ஓய்வுக்குப் போவதால் டோபமைன் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் உடலை முறுக்கேற்றி, தன்னம்பிக்கையை விறுவிறுவென அதிகரிக்கச் செய்கிறது.
இதனால் சாதாரண மனிதரும் தன்னை ஒரு சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு முக்கியமான ஒரு நபராக உணர்கிறார்கள். இந்த நம்பிக்கையே அளப்பரிய மகிழ்ச்சியும் அசட்டுத்துணிச்சலும் தருகிறது. இதனாலே குடி போதையில் மனைவியை அடிக்கிறார்கள், எதிராளியுடன் சண்டைக்குப் போகிறார்கள், கொலையும் செய்கிறார்கள். இதனால் பெரும் பிரச்னைக்கு ஆளாகிறார்கள்.
பெரும்பாலோர் மதுவை மகிழ்ச்சியான காரணங்களுக்காகவே குடிக்கத் தொடங்குகிறார்கள். மது தரும் மகிழ்ச்சி அதிவிரைவிலேயே பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் கொண்டுவந்து சேர்க்கிறது.
எனவே நாளடைவில் மகிழ்ச்சியைக் கொண்டாடக் குடிப்பவர்களைவிட, துயரம், தோல்வி, கவலையை மறைக்கக் குடிப்பவர்களே அதிகம். பணியில் உண்டாகும் மன அழுத்தம், குடும்பத்தில் உண்டாகும் மனஸ்தாபம், பண நெருக்கடி போன்ற பல்வேறு கவலைகளை மறப்பதற்கு மது கை கொடுக்கிறது.
துன்பம், துயரத்தை கொஞ்ச நேரம் மறக்கவும், மனதை அழுத்தும் வேதனையை தள்ளிப்போடவும் மது உதவுகிறது. அதேநேரம், அந்த பிரச்னைகளை எந்த வகையிலும் மது தீர்ப்பதில்லை. எனவே மது குடிப்பது தற்காலிகத் தப்பித்தல் மட்டும்தான். மது போதையில் இருந்து மீண்டதும் மீண்டும் அதே கவலை முன்னிலும் வீரியமாக கண் முன் நிஜமாக நிற்கும். எனவே, அதிலிருந்து தப்புவதற்கு மீண்டும் மீண்டும் குடிக்கிறார்கள். மது கொடுப்பது நரம்பியல் மாயை. அது துயரத்தின் சிறு சாயலைக்கூட தீர்ப்பதில்லை.
இந்த நேரத்தில் உண்மையான மகிழ்ச்சி என்பதன் அர்த்தம் புரிந்தால் மட்டுமே மது தரும் பொய்யான மகிழ்ச்சிக்கு நிஜ மகிழ்ச்சிக்கும் உள்ள வித்தியாசத்தை அறியமுடியும்.
நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளது என்ற நம்பிக்கையே ஒருவரது மகிழ்ச்சிக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது, நிறைய பேருக்கு தேவைப்படும் நபராக இருக்கிறேன், என்னால் பலருக்கு உதவி செய்யவும், நல்ல வழி காட்ட முடியும், நிறைய அன்பு செலுத்துகிறேன், நிறைய அன்பு கிடைக்கிறது என்பதும் மகிழ்ச்சியின் அடிநாதமாக இருக்கிறது.
இதையடுத்து நெருங்கிய உறவுகள், நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்களின் அன்பு, பாசம், நெருக்கம் போன்றவை மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. இவற்றுடன் சேர்த்து வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற்றம் அடைவதும், புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்வதும் மகிழ்ச்சி தருகிறது.
இத்தகைய மகிழ்ச்சி நீண்ட நேரம், நீண்ட காலம் நீடிக்கிறது. அதேநேரம் மதுவின் போதையும் இனிமையும் அதிகபட்சம் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை மட்டுமே நிலைக்கிறது. மதுவின் செரோட்டின் அளவு குறைந்ததும் மனதில் சோர்வு அதிகரிக்கிறது.
பொதுவாக தொடர் குடிகாரர்களுக்கு, மதுவைத் தவிர வேறு எதிலும் மகிழ்ச்சி இல்லை என்பதே இவர்களுடைய உறுதியான நிலைப்பாடாக இருக்கும். எனவே, இவர்களால் இயற்கையான மகிழ்ச்சியை உருவாக்கவும் அனுபவிக்கவும் முடியாது. குழந்தையின் சிரிப்பு, மலரின் மணம், மழையின் இதம் கூட இவர்களுக்கு மகிழ்ச்சி தருவதில்லை.
எனவே, மது மகிழ்ச்சியை தராது; அது மகிழ்ச்சியின் மாயையை மட்டுமே உருவாக்கும் என்பதை புரிந்துகொள்வதே உண்மையான மகிழ்ச்சி.
மது துயரத்தைச் சில நிமிடங்கள் மறக்கும் வாய்ப்பை மட்டும் தரும் என்பதற்கு உதாரணமாக எத்தனையோ பிரபலங்கள் இருக்கிறார்கள். தன்னுடைய தனித்துவமான நடிப்பால் உலகையே சிரிக்க வைத்தவர் ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ். ஆழமான மனச்சோர்வுக்கு ஆளானதும் மது மற்றும் போதைப் பொருட்களை நாடினார். அதிலிருந்து மீளமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார். ஹாலிவுட் நடிகர் மட்டுமின்றி நம் தமிழ் நடிகர்கள், கலைஞர்கள் எத்தனையோ பேர் மதுவுக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். நடிகர் சந்திரபாபு, சாவித்திரி தொடங்கி சமீபத்தில் மரணமடைந்த ரோபோ சங்கர் வரை பலரும் குடியினால் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள்.
மது குடிப்பவர்கள் மகிழ்ச்சியை வெளியில் தேடுவதால் அது கிடைப்பதில்லை. மகிழ்ச்சிக்காக மது குடிப்பது ஒரு எஸ்கேப் மெகானிசம். அதாவது உண்மையான பிரச்சினைகளை நேருக்கு நேராக எதிர்கொள்ளாமல் விலகிச்செல்வது ஆகும். இந்த வகையில் தற்காலிகமாக நிம்மதிக்கு வழிகாட்டும் மது பழக்கம், நிரந்தர நிம்மதியை அழித்துவிடுகிறது. அவரது வாழ்க்கை மட்டுமின்றி, அவரது குடும்பமே தள்ளாடுகிறது.
அதேநேரம், ஒரு சிலர் மட்டுமே அளவோடு குடித்து இதன் விபரீதத்திலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள். இவர்களே நிறைய பேர் குடிக்கு அடிமையாக காரணமாகவும் இருக்கிறார்கள்.
சினிமாவில் குடிப்பது, புகைப்பது போன்றவைகளைக் காட்டினால் தன் ரசிகர்கள் கெட்டுப் போவார்கள் என்று கட்டுப்பாடுடன் திரைப்படங்களில் நடித்தார். அதே திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என்று எல்லோரும் மது குடிப்பதை ஹீரோயிசமாக காட்டிவருகிறார்கள்.
அதுமட்டுமின்றி, சின்ன வயதில் இளையராஜாவுடன் சேர்ந்து மது குடித்தது பற்றி ரஜினிகாந்த் ஜாலியாகப் பேசுகிறார். ரஜினி சொன்னதைக் கேட்டு எல்லோரும் சிரிக்கிறார்கள். மது குடித்த காரணத்தால் எத்தகைய நோய்ச் சிக்கலுக்கு ஆளாகி, சிகிச்சை எடுத்து மருத்துவமனையில் கஷ்டப்பட்டதை எல்லாம் ரஜினி வெளியில் பேசவில்லை. ஜாலியாக இருந்ததை மட்டுமே சொல்கிறார்.
குடிகாரராக இருந்த ரஜினி நன்றாக இருக்கிறார், எனவே, அது தப்பு இல்லை என்று ரசிகர்கள் நம்பத் தொடங்குகிறார்கள். அதோடு இப்போது மது குடிப்பது சாதாரண, இயல்பான பழக்கம் என்று எல்லோரும் பேசத் தொடங்கிவிட்டனர். மது குடிப்பதற்கு யாரும் குற்றவுணர்வு கொள்வதில்லை. மது அருந்துதல் ஒரு கலாச்சாரமாக மாறிவருகிறது. ஆணோடு சேர்ந்து பெண்ணும் குடிக்கிறார்.
மது குடிப்பது என்பது ஒரு சாதாரண பழக்கம் அல்ல, தீவிர நோய் என்பதே உண்மை மது குடியர்களை மது பிரியர்கள் என்று அழைப்பதன் மூலம், குற்றவாளிகளும் நோயாளிகளும் அதிகமாவார்கள்.
உண்மையான மகிழ்ச்சி மதுவில் இல்லை. மதுவின் அற்ப சுகத்திற்கு அடிமையாகும் நபர்கள் மருத்துவமனைக்குச் சென்று செலவழிப்பது மட்டுமின்றி, கடுமையான துயரத்துக்கும் ஆளாகி அற்ப ஆயுளில் மடிய வேண்டியிருக்கும்.
மதுவில் மயங்காதீர்கள். உண்மையை அறிவதே மகிழ்ச்சி.












