மனிதரால் முடியாததை கடவுளிடம் கேளுங்கள்

Image

ஆசிரியர் பார்வை

இந்த உலகை சுற்றிப் பார்க்க கடவுள் வந்தாராம். அடையாளம் கண்டுகொண்ட மனிதர்கள் அவரை சூழந்துகொண்டனர். தங்கள் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.

கடவுள் சம்மதம் தெரிவித்ததும் பணம், புகழ், ஆரோக்கியம், நிம்மதி, ஞானம் என்று ஆளுக்கு ஒன்றாகக் கேட்டார்கள்.

அவர்களிடம் கடவுள், ‘ஆளுக்கு ஒன்று என வரம் கொடுக்க முடியாது. அனைவரும் ஒரே வரமாகக் கேளுங்கள், தருகிறேன்’ என்றார்.

உடனே அனைவரும் சேர்ந்து ஆலோசனை செய்து ஓட்டெடுப்பு நடத்தினார்கள். அதில் ஆரோக்கியம் முதல் இடம் பிடித்தது. உடனே அதையே வரமாகக் கேட்டார்கள்.

அதைக் கேட்ட கடவுள் சிரித்தே விட்டாராம். ‘’உங்களால் முடியாத ஒன்றைத்தான் நான் வரமாகத் தர முடியும். ஆரோக்கியமான உடல் பெறுவது உங்களுக்கே சாத்தியம்தான்’ என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.

இது, கதை என்றாலும் சொல்லவரும் கருத்து உயர்வானது. ஆரோக்கியம் அடைவது மனிதர்கள் கையில்தான் இருக்கிறது. ஆனால், மனிதர்கள் ஆரோக்கியம் தேட வேண்டிய காலங்களில் எல்லாம் பணம் தேடி அலைகிறார்கள். அதன்பிறகு ஆரோக்கியத்திற்காக பணத்தை செலவழித்து ஆரோக்கியத்தைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.  

இன்றைய மருத்துவ டெக்னாலஜி உதவியுடன் மனிதரால் கிட்டத்தட்ட 75 வயது வரை நல்ல ஆரோக்கியமாக வாழ இயலும். ஆரோக்கியம் பெறுவதற்கு சரிவிகித உணவு, நல்ல சுற்றுச்சூழல், போதிய உறக்கம் மற்றும் பயிற்சிகள் மட்டுமே போதும். பணமும் உறவுகளும் கூடுதல் போனஸ்.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்தான் இருக்கிறது. ஆரோக்கியமாக இருப்பவரால் மட்டுமே சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். எனவே, உடல் என்பதே கடவுள் என்பதை உணருங்கள். அதுவே, மகிழ்ச்சி தரும்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment