தவறு செய்பவரை தட்டிக் கேட்பீர்களா..?

குட்டியூண்டு நம்பிக்கை கதை

உயர் அதிகாரியை சந்திப்பதற்காக தலைமை அலுவலகத்திற்கு சென்றுகொண்டு இருக்கிறீர்கள். மேலதிகாரி நேர மேலாண்மையில் மிகவும் கண்டிப்பானவர். சரியான நேரத்தில் எல்லாம் சரியாக நடக்கவேண்டும் என்று நினைப்பவர். அதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே கிளம்பி செல்கிறீர்கள். அப்போது நடுரோட்டில் ஒரு குடிகாரன் அவனுடைய காரை நடுரோட்டில் நிறுத்தி தகராறு செய்துகொண்டு இருக்கிறான். யாரோ ஒருவர் அவன் காரை இடித்துவிட்டு சென்றதால், தனக்கு நியாயம் வேண்டும் என்று சாலையை மறித்து போராடுகிறான். அவனுடைய நண்பர்கள் சிலர் அவனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவருகிறார்கள்.

இந்த நேரத்தில் உங்களிடம் இரண்டு கேள்விகள் மட்டுமே இருக்கின்றன. அந்த குடிகாரனிடம் பேசி, காரை எடுக்கச்செய்து முன்னேறி செல்வது முதல் வழி. உடனடியாக வண்டியை வேறு ஒரு பாதையில் திருப்பி தலைமையகத்தை அடைவது இரண்டாவது வழி. நீங்கள் எதனை தேர்வு செய்வீர்கள்?

குடிகாரன் செய்வது தவறுதான். அதனால் அவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சரிசெய்து அனைவருக்கும் நல்லவராக இருப்பீர்களா அல்லது உங்கள் சொந்த வாழ்க்கை முக்கியம் என்று கருதி வேறு வழியில் செல்வீர்களா?

முதல் வழியை தேர்வு செய்பவர் நிச்சயம் நல்ல மனிதராக இருக்கலாம் ஆனால் நிர்வாகத்தில் வெற்றிகரமாக திகழமுடியாது. ஏனென்றால் குடிகாரரிடம் பேசுவதற்கும் அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் காவல் துறையினரால் மட்டுமே முடியும். நீங்கள் பேசுவதை அவர் கேட்பார் என்பது உறுதியில்லை, உங்கள் மீது வன்மம் கொள்வதற்கும் எதிர்த்து தாக்குதல் நடத்துவதற்கும் வாய்ப்பு உண்டு.

அதனால் உங்களுக்கு வேறு பணிகள் இல்லாத நேரத்தில் இதுபோன்ற முயற்சிகளில் இறங்கலாமே தவிர, இன்று அல்ல. இப்போதைக்கு உங்களுடைய முக்கியமான பணி மேலதிகாரியை சரியான நேரத்தில் சந்திப்பதுதான். குறிப்பிட்ட நேரம் தாண்டிப்போனால் நிச்சயம் உங்கள் மீதான அபிப்ராயம் அவருக்கு குறைந்துதான் போகும் என்பதால் ஏதாவது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படலாம். அதனால் நிர்வாகத் துறையில் சாதிக்க நினைப்பவர்கள் இரண்டாவது வழியைத்தான் பின்பற்ற வேண்டும்.

ஒரு பிரச்னை வரும்போது காரியத்தை சாதிப்பதற்காக வளைந்துகொடுத்து செல்வது தவறு அல்ல. மோதவரும் ஒரு வாகனத்திடம் இருந்து வளைந்துநெளிந்து தப்பிப்பவர்தான் உயிருடனே இருக்கமுடியும். அதனால் நிர்வாகம், தொழில், வியாபாரத்தில் வெற்றிகரமாக இயங்க விரும்பும் நபர்கள் நாணல் போன்று வளைந்துகொடுப்பவராக இருக்கவேண்டும். புயல் அடிக்கும்போது அதன் திசையில்தான் செல்லவேண்டும், எதிர்த்து நின்றால் நிச்சயம் எதிர்பலனையே அனுபவிக்க வேண்டியிருக்கும்.

Leave a Comment