மாறு கண்ணை மாற்றிவிட முடியும்..!

நம்பிக்கை தரும் டாக்டர் மாலா பாலகோபால்

இன்று தொழில்நுட்ப வளர்ச்சியும், விஞ்ஞானமும் போட்டி போடும் காலம் என்றாலும்கூட, அதனால் பாதிப்புகளும் அதிகமாகவே இருக்கின்றன. அந்த வகையில், கம்ப்யூட்டர், மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் கண்களால் பாதிக்கப்படுகின்றனர். இதுதவிர, பிறவிக் கண் பார்வைக் கோளாறுகள் உள்ளவர்களும் அதிகரித்து வருகின்றனர். இதற்கான காரணம் மற்றும் சிகிச்சை குறித்து சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனையின் கண் சிகிச்சை நிபுணர் மருத்துவர் மாலா பாலகோபால் அவர்களிடம் பேசினோம்.


குழந்தைகளுக்கு கண்ணில் ஏற்படும் நோய்கள் என்ன? எந்தெந்த வயதில் என்னென்ன பாதிப்புகள் வரும்?

பொதுவாக அனைவருக்குமே கண்களில் நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், பெரியவர்களுக்கும் வரலாம்; குழந்தைகளுக்கும் வரலாம். குறிப்பாக, குழந்தைகளுக்கு பிறக்கும்போதே கண்ணில் நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது. பொதுவாக பார்வைத் திறன் குறைபாடுதான் குழந்தைகளுக்கு முக்கியப் பிரச்னை. மாறுகண், கண் புரை போன்றவை மரபுரீதியாக ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இதில் மாறுகண் என்பது ஒரு கண் நேராகவும், மற்றொரு கண்ணின் பார்வை திசை மாறியிருப்பதையும் குறிக்கும். மாறுகண்ணால் பிரச்னை எதுவும் ஏற்படாது. இதனை முழுமையாகச் சரி செய்துவிடலாம். தவிர, கண் அழுத்த வியாதியும் குழந்தைகளைப் பாதிக்கும் முக்கியமான பிரச்னைதான்.

கண்ணில் அழுத்தம் ஏற்படுவதால் பார்வை நரம்புகள் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகும். மேலும், குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் கண் பார்வை குறைபாடு ஏற்பட வாய்ப்பு அதிகம். மூளை பாதிப்பு இருந்தாலும் கண் பார்வையில் குறைபாடு ஏற்படலாம். அல்பினிசம் என்ற பிறவி மரபு வழி நோயில் உடல் முழுவதும் வெண்மை நிறத்தில் இருக்கும். கண்களில் உள்ள நிறமி செல்கள் பாதிக்கப்பட்டிருக்கும். இதிலும் கண் பார்வை பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கும்.

குழந்தை கருவில் இருக்கையிலேயே கண் அழுத்தம் அதிகரித்து அதனால் கருவிழி முழுவதும் ஒளி உட்புகா நிலை ஏற்படக்கூடும். பிறக்கும்போது வெண்மையான கருவிழியோடு குழந்தை பிறக்கும். உடனடியாக சிகிச்சையைத் துவங்கினால் ஓரளவு பார்வையை மீட்டெடுக்க முடியும்.

Leave a Comment