டாக்டர் பாலகோபால் ஆலோசனை
முதுமை அடைந்தவர்களுக்குத்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் நேரிடும் என்பதெல்லாம் போயே போச்சு. மரபணு குறைபாடு, உணவு, அலட்சியம் போன்ற இன்னும் பிற காரணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்குக்கூட, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் நேர்ந்துவிடுகிறது. குழந்தைகளுக்கு செய்யப்படும் அறுவைச்சிகிச்சைகள் குறித்து சென்னை வடபழனி சூர்யா மருத்துவமனையின் குழந்தைகள் அறுவைச்சிகிச்சை நிபுணரான மருத்துவர் பாலகோபால் அவர்களிடம் பேசினோம்.
பொதுவாக, குழந்தைகளுக்கு ஏற்படும் அறுவை சிகிச்சை நோய்கள் எவை? இவற்றில் ஏதேனும் பிரிவுகள் உள்ளனவா?
பொதுவாக, குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, பிறவியிலேயே வரக்கூடியது. மற்றொன்று, வளர்ந்த குழந்தைகளுக்கு வரக்கூடியவை. சுவாசக்குழாய், உணவுக்குழாயில் இருக்கக்கூடிய வித்தியாசங்கள், குடல் அடைப்புகள், ஆசனவாய் இல்லாத நிலை, சிறுநீர் வரும் வழியில் உறுப்புகளில் காணப்படும் வித்தியாசம் போன்றவற்றுடன் உறுப்பு மற்றும் துவார வித்தியாசங்கள், கிட்னியிலிருந்து வரும் தடைப்பாடுகள் ஆகியன பிறவியிலேயே இருக்கக்கூடியவையாகும்.
குடல் சுத்திக்கொள்ளுதல், சிறுகுடல் பெருங்குடலுக்குள் சிக்கிக்கொள்ளுதல், அப்பன்டீஸ் போல வளர்ந்த குழந்தைகளுக்கும் பிரச்சினைகள் ஏற்படுதல், எல்லாக் குழந்தைகளுக்கும் ஏற்படுவதுபோல் அடிபடுதல் ஆகியன வளர்ந்த குழந்தைகளுக்கு வரக்கூடிய பிரச்னைகளாகும்.
இந்த நோய்கள் வருவதற்கு என்ன காரணம்? இவற்றைச் சரிசெய்ய வழிகள் யாவை?
பிறவி நோய்கள் வருவதற்கு முக்கியக் காரணம், மரபுவழி சார்ந்தது. அதேநேரத்தில், சில நோய்கள் எதேச்சையாகவும் நடக்கக்கூடியவை. வளர்ந்தபின்பு வரக்கூடிய விபத்துகள், டிராமா ஆகியன எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள் ஆகும். அதாவது, விளையாடும் சூழ்நிலையில் போதிய அளவு இடமில்லாமல், குறுகிப்போய் வீட்டுக்குள்ளேயே விளையாடும் சூழ்நிலையில் கீழே விழுந்து உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. மேலும், சாலைகளில் விளையாடும்போது வாகனங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. தவிர, அப்பன்டீஸ் போன்ற பிரச்சினைகள் எல்லாம் உணவு விஷயத்தால் வரக்கூடியவை. குறிப்பாக, பிளாஸ்டிக் கவர்களில் போடப்படும் ரெடிமேட் ஃபுட், நார்ச்சத்து இல்லாத உணவுகளால் மலச்சிக்கல் பிரச்சினைகள் வருகின்றன.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சி மூலம் எத்தகைய நோய்களையும் ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் மூலம் கண்டறிந்து, அவற்றுக்கு உடனே தீர்வளிக்க முடியும். மேலும், பிறவியிலேயே ஏற்படும் நோய்களையும் சரிசெய்ய முடியும். குறிப்பாக, பிரசவம் சம்பந்தமான பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்ய முடியும். அதற்கான வசதியுள்ள மருத்துவமனைகள் இன்று பெருகிவிட்டன. அவற்றின் மூலம் மரபு வழி பிரச்சினைகளையும் குணப்படுத்த முடியும்.
அறுவைச்சிகிச்சை செய்தபிறகும் பாதிப்புகள் தொடருமா?
கூடுமானவரை, குழந்தைகளின் பாதிப்புகளைக் குறைப்பதுதான் அறுவைச் சிகிச்சையின் நோக்கமே. குழந்தைகளின் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே குணப்படுத்திவிட முடியும். இதனால் பின்னாளில் வரும் பாதிப்புகள் மிகவும் குறைவு. அதாவது, 98 சதவிகிதம் நார்மலாக்கிவிடும். சில சமயங்களில் 1 அல்லது 2 சதவிகித பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும், ‘மருத்துவர்கள் அனைவரும் ஊர் சொல்லும் படைப்பாளிகள்’ என அழைக்கப்படுகின்றனர். ஆனாலும் அவர்கள் கடவுள் அல்ல. கடவுள் என்ன செய்ய நினைக்கின்றாரோ, அந்த அளவுக்கு மருத்துவர்கள் தங்களது முயற்சியைச் செய்கிறார்கள். அதேநேரத்தில், குழந்தைகள் வளரவளர இதன் பாதிப்புகளைச் சரிசெய்ய முடியும். இதில், நீண்டநாள் பாதிப்புகள் இல்லாமல் பார்த்துக்கொள்வதுதான் சரியான நடவடிக்கை ஆகும்.












