சினிமா நடிகைகள் மட்டும் ஏன் அழகு..?

ரகசியம் சொல்லும் சோனம் கபூர்

சினிமா நட்சத்திரங்களின் எந்த போட்டோவைப் பார்த்தாலும் அழகாகத் தெரியும் அது நிறைய பெண்களுக்கு மனக்குறையை உருவாக்கும். அதாவது, நாம் அப்படி இல்லையே என்று கவலைப்படுவார்கள். பிரபல நடிகை சோனம் கபூர் கூறியிருக்கும் விஷயத்தை ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டும். அவர் சொன்னது இதுதான்.

‘திரையுலக நாயகியைப் போல மின்னவில்லை என்று பெருங்கவலை கொள்கிறாயா? உனக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். தூங்கி எழுகிறபோதே நாங்கள் யாரும் பேரழகியாக ஜொலிப்பதில்லை. உலகத்தில் இருக்கும் எந்த நடிகையும் அப்படிப்பட்ட அசல் அழகி இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

“ஒவ்வொரு முறை மின்னும் கேமராக்கள் முன்னால் தோன்றுவதற்கு முன்னாலும் நான் ஒப்பனை அறையில் ஒன்றரை மணிநேரம் தவம் கிடக்கிறேன். 3 – 6 பேர் என் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒப்பனை செய்கிறார்கள். ஒரு தேர்ந்த அழகுக்கலை நிபுணர் என் நகங்களைப் பொலிவாக்குகிறார். என் கண் புருவங்கள் பிறைநிலா போல வளைக்கப்படுகின்றன. என் மேனி முழுவதும் ஒப்பனை பூச்சுக்கள் நிறைத்து மூச்சடைக்க வைக்கின்றன.

காலையில் ஆறு மணிக்கு எழுந்து ஒன்றரை மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறேன். சமயங்களில் படுக்கப்போவதற்கு முன்னும் உடற்பயிற்சி செய்கிறேன். நான் என்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக் கூடாது என்பதைத் தீர்மானிக்க மட்டுமே ஒருவருக்குச் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறேன். நான் அணிவதற்கு உரிய கவர்ந்து இழுக்கும் ஆடைகளைத் தேர்வு செய்யவே ஒரு குழு இருக்கிறது. இவ்வளவு போராடியும், ‘மாசற்ற’ முழு அழகு சமயங்களில் வெளிப்படுவதில்லை. போட்டோஷாப் புண்ணியத்தில் நான் பேரழகியாகப் படைக்கப்படுகிறேன்” என்று உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார்.

எனவே திரைகளில் ஜொலிக்கும் அழகு என்பது மிகைப்படுத்தப்பட்டது என்று புரிந்துகொண்டாலே போதும். ஒவ்வொரு பெண்ணும் பேரழகு என்பதை அறிந்துகொள்ள முடியும்.

Leave a Comment