அடையாறின் அணையாவிளக்கு
உலகில் எங்கு புற்றுநோய் ஆராய்ச்சிகள் நடந்தாலும், புதிய மருந்துகள், புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அடுத்த கணம் அது சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இருக்கும். அதற்கு காரணம், டாக்டர் சாந்தா. புற்றுநோய் மருத்துவத் துறைக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த சாந்தா, கடந்த 19ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருடைய மறைவு மருத்துவத் துறைக்கும் தமிழகத்திற்கும் பேரிழப்பாகும்.
மருத்துவர் சாந்தா 1927ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி சென்னையைச் சேர்ந்த விஸ்வநாதன் – பாலாபார்வதி என்ற தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன், இவரது தாத்தாவின் சகோதரர் ஆவார். இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற மற்றொரு விஞ்ஞானியான எஸ்.சந்திரசேகர், இவரது தாய்மாமா ஆவார். இதன்மூலம் சாந்தாவும் அறிவியல் துறையில் வரவேண்டும் என அவரது குடும்பம் விரும்பியது. ஆனால், அவரோ உயிர் காக்கும் மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுத்தார்.
பி.எஸ்.சிவசாமி பெண்கள் பள்ளியில், பள்ளிப்படிப்பை முடித்த சாந்தா, 1949ல் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனில் அதிக கவனம் செலுத்தினார். 1952ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மகளிர் மருத்துவத்தில் டிப்ளோமா படித்தார். அதனைத் தொடர்ந்து, 1955ல் மருத்துவத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். ஒரு வருடம் கனடாவில் பணிபுரிந்த அவர், பின்னர், மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் முன்னோடி பெண் மருத்துவருமான முத்துலட்சுமி ரெட்டி மூலமாகத் தொடங்கப்பட்ட புற்றுநோய் மருத்துவமனையின் நிலைய மருத்துவ அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். பணியில் சேர்ந்த தொடக்கத்தில், மூன்று ஆண்டுகள் எவ்வித ஊதியமும் பெறாமல் டாக்டர் சாந்தா பணியாற்றினார். பின் மாதம் 200 ரூபாய் ஊதியமும், மருத்துவமனை வளாகத்தில் தங்க சிறிய அறையும் தரப்பட்டது. 1955ல் தொடங்கி, அவரின் இறுதிநாள் வரை மருத்துவச் சேவையில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அவர், கடைசிவரை திருமணம் செய்துகொள்ளவேயில்லை.
மருத்துவர் சாந்தா பணிக்குச் சேர்ந்த காலத்தில், வெறும் 12 படுக்கைகளைக் கொண்ட சிறிய மருத்துவமனையாக அடையார் புற்றுநோய் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. பலரின் உதவியோடு அந்த மருத்துவமனையை, சர்வதேச அளவில் வளர்த்தெடுத்தவர் மருத்துவர் சாந்தா. புற்றுநோயியல் என்ற துறையில் ஆழ்ந்து படித்து, தனிப்பட்ட படிப்பாகவும், ஆராய்ச்சி படிப்பாகவும் மாற காரணமாக இருந்தவர், சாந்தா. 1980ம் ஆண்டு அந்த மருத்துவமனையின் இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டார். பின்னர், அந்த மருத்துவமனையை உலகளவில் பிரபலமான புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையமாகவும், இந்திய அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் பயன்பெறும் மையமாகவும் மாற்றினார்.
சுமார் 1,000 மருத்துவப் பணியாளர்களுடன் செயல்பட்டு வரும் அடையாறு மருத்துவமனையில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன்பெறும் இடமாக மாற்றியவர் அவர். தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும் இங்கு புற்றுநோய்க்காக சிகிச்சை பெற வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால், கொரோனா காலத்தில் புற்றுநோய் சிகிச்சை தடைபட்டபோதும், தொடர்ந்து சிகிச்சையளிக்க அரும்பாடுபட்டவர்.
உலக சுகாதார நிறுவனம் நடத்திய புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளில் இவரது பங்கு அளப்பரியது. தமிழக அரசின் திட்ட குழு உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மருத்துவச் சஞ்சிகைகளில் 90க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பதிப்பித்துள்ளார். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளையும், தமிழக அளவில் ஔவையார் விருதையும் பெற்றுள்ளார்.
அவருடன் பணியாற்றிய மருத்துவர்கள், ‘புற்றுநோயை முற்றிலும் ஒழிக்க பெரும் கனவு கண்டவர் டாக்டர் சாந்தா. அதற்காக 24 மணி நேரமும் சேவையாற்றியவர். ஏழை, பணக்காரர் என்பதைத் தாண்டி, அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளித்தவர்’ எனப் பாராட்டுகின்றனர்.
இப்படி இரவு பகலாய்ச் சேவையாற்றிய டாக்டர் சாந்தா, ‘மக்கள் தங்கள் உடல்நிலை, உணவு மீது அக்கறை செலுத்த வேண்டும். துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும். துவக்கத்திலேயே கண்டறிந்தால், நோயில் இருந்து தப்பிக்கலாம். இளைஞர்கள் புகையிலை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதைச் செய்தாலே, 40 சதவீத புற்றுநோயை தடுக்க முடியும்’ என அடிக்கடி அறிவுரை கூறிவந்தார்.
புற்றுநோய் சிகிச்சையில் அடையாறின் அடையாளமான டாக்டர் சாந்தாவின் இடத்தை, இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவர் ஆற்றிய சேவைகளும், சிகிச்சை முறைகளும் என்றும் அவரது நினைவைப் போற்றிக்கொண்டிருக்கும்.
ஆன்மிகத்தில் அதிக நாட்டமில்லாதவரான சாந்தா, அதிகாலை 4.30 மணிக்கு எழக்கூடியவர். ஆனால், இரவு 10 மணிவரை மருத்துவம் சார்ந்த பணிகளையே சிந்தனையாகக் கொண்டிருப்பார். தவிர, உதவும் மனங்கள்மீது அதிக மதிப்பும் நம்பிக்கையும் கொண்டிருப்பார். எளிமை, பணிவு, உழைப்பு ஆகியவற்றையே தன் இறுதிநாள்வரை முழுமூச்சாகக் கொண்டு வாழ்ந்த சாந்தா, அப்துல் கலாம் மீது அதிக அன்பு கொண்டவர். அவரைப் பற்றித் தன் உரைகளில் தவறாமல் குறிப்பிடுவார்.












