ஸ்டீவ் ஜாப் போராட்டக் கதை
தான் உருவாக்கிய நிறுவனமே தன்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் என்பதை ஒரு போதும் ஸ்டீவ் ஜாப் நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆனால், அப்படித்தன் நடந்தது. அத தோல்வியையும் பரிசாக நினைத்து அடுத்த முன்னேற்றத்தை எட்டிப்பிடித்த காரணத்தாலே, இன்றும் டிஜிட்டல் கடவுளாக மதிக்கப்படுகிறார் ஸ்டீவ்.
வறுமையான குடும்பத்தில் பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ் 56 வயதில் மரணத்தைத் தழுவியபோது, அவரது சொத்துமதிப்பு சுமார் 2 லட்சம் கோடிகள். ஆனால் இவர் ஆரம்ப காலங்களில் வெற்றிகளைவிட தோல்விகளையே அதிகம் சந்தித்தவர் என்பதுதான் உண்மை.
பிறந்தவுடனே ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு பிரச்னை தொடங்கியது எனலாம். ஆம், வறுமை காரணமாக ஸ்டீவ் ஜாப்ஸ் வேறு ஒரு தம்பதியருக்கு தத்து கொடுக்கப்பட்டார். வளர்த்தவர்களும் ஏழை என்றாலும் அன்பு கொட்டி வளர்த்தார்கள். என்னதான் அன்பு காட்டினாலும் தத்துப்பிள்ளை என்ற சங்கடத்துடனே வளர்ந்தார் ஸ்டீவ்.
எலக்ட்ரானிக்ஸ் படிப்பில் பெருவிருப்பம் இருந்தாலும் வளர்த்தவர்களால் படிப்புக்கான பணம் கட்டமுடியாத சூழல் என்பதை அறிந்ததும் தானாகவே படிப்பைத் துறந்தார். ஒரே நண்பனின் அறையில் தங்கினால் வாடகை கொடுக்கவேண்டி வரும் என்று பல்வேறு நண்பர்களின் அறைகளில் தங்கினார். ஒரு கட்டத்தில் ஸ்டீவ்விற்கு வாழ்க்கையே வெறுத்துப்போனது. அதனால் ஹிப்பி போன்று மாறி, நீண்ட முடி வளர்த்துக்கொண்டு மனம் போன போக்கில் வாழத் தொடங்கினார். திடீரென முளைத்த ஆன்மிக தேடல் காரணமாக நாடோடியாக இந்தியாவிற்கு வந்த ஸ்டீவ், இமயமலை அடிவாரத்தில் தங்கினார்.
கடுமையான புயல், மழையை அனுபவித்தார். இந்திய உணவு, சுற்றுசூழல் எதுவுமே ஸ்டீவிற்கு ஒத்துவரவில்லை. இந்திய ஆன்மிகவாதிகள் ஆளுக்கு ஒரு கருத்து சொல்லவே, குழம்பியே போனார் ஸ்டீவ். அதனால் ஆன்மிக வாழ்க்கை ஒத்துவராது என்று மீண்டும் தாய்நாடு திரும்பினார்.
அமெரிக்காவில் வீடியோ கேம் தயாரித்துவந்த ஒரு நிறுவனத்தில் ஸ்டீவ் வேலைக்கு சேர்ந்தார். அங்கு பணியாற்றியபோதுதான், ஸ்டீவ் மற்றும் ஸ்டீபன் வாஸ்னிக் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டர் தயாரிக்க திட்டம் தீட்டினார்கள். கம்ப்யூட்டர் உருவாக்குவதற்கு பணம் இல்லையென்றாலும் தன்னுடைய திறமை காரணமாக, எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களிடம் கடன் வாங்கி கம்ப்யூட்டர்கள் தயாரிக்கத் தொடங்கினார்கள். அதுவரை கம்ப்யூட்டர் மானிட்டர்கள் கருப்பு வெள்ளையாக மட்டுமே இயங்கிவந்தன. கலர் மானிட்டர் தயாரிப்பதற்கு முயற்சி எடுத்தார் ஸ்டீவ். இதற்காக எத்தனையோ வங்கிகளுக்கு ஏறி இறங்கினார். ஆனால் அத்தனை வங்கிகளும் கடன் தராமல் ஸ்டீவ் ஜாப்பை விரட்டியடித்தன.
தன்னுடைய கனவு நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்துகொண்டே இருந்த நேரத்தில்தான் மைக் மர்குலா என்பவரை சந்தித்தார். ஸ்டீவ் மற்றும் வாஸ்னிக் இருவரிடமும் தேர்ந்த திறமை இருப்பதை அறிந்தார் மர்குலா. அதனால் பணம் முதலீடு செய்வதற்கு ஒப்புக்கொண்டார். மூவரும் பங்குதாரர்களாக ஆப்பிள் இங்க் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனம் தயாரித்த கலர் கம்ப்யூட்டர் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஏராளமான ஆர்டர்கள் குவிந்தன. லாபமும் அதிகரித்தது. மீண்டும் ஒரு புதிய முயற்சியாக கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய மாக் கம்ப்யூட்டரை ஸ்டீவ் அறிமுகம் செய்தார். இதே நேரத்தில் ஐபிஎம் நிறுவனம் வெளியிட்ட கம்ப்யூட்டர் மாபெரும் வெற்றி பெறவே, மாக் கம்ப்யூட்டர் தோல்வியை தழுவியது. அனைவரும் தோல்விக்கு ஸ்டீவ் ஜாப் மட்டுமே காரணம் என்று சுட்டிக்காட்டினார்கள்.
எப்படி தவறு நடந்தது, அதனை எப்படி சரிசெய்வது என்று ஸ்டீவ் ஜாப் யோசனை செய்துகொண்டிருந்த நேரத்தில் மாபெரும் அதிர்ச்சி அவருக்கு ஏற்பட்டது. ஆம், நஷ்டத்துக்கு காரணம் காட்டி ஸ்டீவ் ஜாப்பை ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியே அனுப்பினார்கள். தான் உருவாக்கிய நிறுவனமே தன்னை வெளியே அனுப்பியதை ஜீரணிக்க முடியாமல் இருந்தார் ஸ்டீவ். நடந்ததை நம்பவே மடியாத அதிர்ச்சியில் ஸ்டீவ் உறைந்தே போனார்.
ஆனால் விரைவிலேயே அதிர்ச்சியில் இருந்து மீண்டு எழுந்தார் ஸ்டீவ். ஏற்கெனவே ஏராளமான தோல்விகளை தாண்டி வந்திருப்பதால், இதனையும் ஒரு தோல்வியாக, ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு மீண்டும் தன்னுடைய முயற்சிகளைத் தொடங்கினார். மீண்டும் வாழ்க்கையை முதலில் இருந்து ஆரம்பிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு ஆளானார் ஸ்டீவ்.
தன்னுடைய அத்தனை திறமையையும் கொட்டி, எதிர்காலத்தை துல்லியமாக கணித்து நெக்ஸ்ட் என்ற புதிய கம்ப்யூட்டர் நிறுவனத்தை ஸ்டீவ் தொடங்கினார். நிறுவனம் அபார வளர்ச்சி அடைந்தது. காலம் ஒரு நாள் மாறும் என்பது உறுதியானது. ஆம், ஆப்பிள் நிறுவனம் திடீர் சிக்கலில் விழுந்தது. வேறு வழியில்லாமல் ஸ்டீவ் ஜாப் ஆலோசனையை கேட்க வேண்டிய நிலைமைக்கு வந்தது ஆப்பிள் நிறுவனம். எந்த ஈகோவும் இல்லாமல் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆலோசகராக பணியாற்றினார் ஸ்டீவ். அதன்பிறகு நெக்ஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் வாங்கிக்கொண்டால்தான் வளர்ச்சி அடையும் என்ற சூழல் ஏற்பட்டது. அதுவும் அப்படியே நடக்கவே, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பு மீண்டும் ஸ்டீவ் வசம் வந்து சேர்ந்தது.
போட்டிகள் அதிகரித்தன. புத்தம்புதிய பொருட்கள் வந்து சேர்ந்தன. அத்தனைக்கும் ஈடுகொடுக்கும் விதமாக ஐ போன், ஐ பேட், ஐ புக் போன்றவற்றை அறிமுகப்படுத்தி சந்தையில் நம்பர் ஒன் இடத்தை ஸ்டீவ் எட்டிப்பிடித்தார். உலகிலேயே தரம் வாய்ந்த எலக்ட்ரானிக்ஸ் பொருள் என்றால் ஆப்பிள் நிறுவன தயாரிப்புதான் என்று மக்கள் முத்திரை குத்தியதற்கு காரணம் ஸ்டீவ் ஜாப்பின் அசராத உழைப்பும், தெளிவான கணிப்பும்தான். தொழில்துறையில் அதன்பிறகு ஏராளமான வெற்றிகளை அடைந்த ஸ்டீவ் ஜாப்ஸ், புற்று நோயிடம் தோற்றுப்போனார். வெற்றிகரமான தொழிலதிபராக கொடிகட்டிப் பறந்த ஸ்டீவ் 2011ம் ஆண்டு, அவரது 56வது வயதில் மரணத்தை தழுவினார்.
இப்போதும் தோல்விகளை கண்டு அசராமல் போராடி முதல் இடம் பிடித்த வெற்றியாளர்கள் பட்டியலில் ஸ்டீவ் ஜாப்பிற்கு முதல் இடம் இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதையும், அதில் இருந்து மீண்டு வந்த விதம் குறித்தும் ஸ்டீவ் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.
என் நிறுவனத்தில் இருந்து நான் வெளியேற்றப்படுவேன் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்தது உண்மைதான். ஆனால் அதுதான் எனக்கு கிடைத்த மாபெரும் பரிசு என்பதை பின்னர் உணர்ந்தேன். வெற்றி பெற்றவன் என்ற இடத்தில் இருந்து மீண்டும் தொழில் தொடங்குபவன் என்ற இடத்துக்கு வந்தேன். மீண்டும் தெளிவாக, நிதானமாக பரபரப்பு இல்லாமல் சிந்திக்கத் தொடங்கினேன். அதனால்தான் மீண்டும் என்னால் வலிமையாக எழுந்தரிக்க முடிந்தது – என்று பேசியிருக்கிறார்.
ஸ்டீவ் என்பது ஒரு நம்பிக்கையின் இலக்கணம்.
