பெண்களுக்கு வரும் ஆசை அழைப்புகள்…

எம். கோமதி எம்.பில், எம்.எஸ்சி. (ஆலோசனை உளவியல்),

நூலகர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகம், அரும்பாக்கம் 

சென்னை 106. தொடர்புக்கு ; 9840738048

சமூகவலைதளத்தில் உலவும் பெண்களுக்கு எத்தனை மகிழ்ச்சி கிடைக்கிறதோ, அதைவிட அதிக சிக்கலும் இருக்கின்றன.

பெண்கள் அனைத்து துறைகளிலும் தொடர்ந்து பல சாதனை படைத்துவருகிறார்கள். குடும்பப் பொறுப்புகளை சுமக்கிறார்கள். ஆண்களுக்கு இணையாக சம்பாதிக்கவும் செய்கிறார்கள். அதேநேரம், சமூகவலைதளத்தைப் பயன்படுத்துவதில் இன்னமும் போதிய விழிப்புணர்வு இல்லாமல் எக்கச்சக்க சிக்கல்களில் சிக்கிக்கொள்கிறார்கள்.

இன்ஸ்டா, ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூகவலைதளப் பயன்பாடுகளை யாருமே தவிர்க்க முடியாத அளவுக்கு வாழ்க்கையில் அவை ஒன்றிணைந்துவிட்டது. இந்த சமூகவலைதளப் பயன்பாடுகளில் நுழையும்போதே கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்துகொண்டால் பல்வேறு பிரச்சனைகளில் சிக்காமல் தப்பிவிட முடியும்.

பெண்கள் முதலில்  தங்கள் இருப்பிடம், தங்களுடைய தொலைபேசி எண்கள் தங்களுடைய உண்மையான புகைப்படம் போன்றவற்றை சமூகவலைதளங்களில் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்.

தனிப்பட்ட தொலைபேசி எண்ணை, வீட்டு முகவரியை பகிரங்கமாக இணையதளத்தில் வெளியிடுவது பல பெண்களுக்கு, பிரச்சனைகளை கொண்டு வருகிறது. அதேபோல் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் தொலைபேசியில் தேவையில்லாமல் பதில் சொல்லவேண்டிய தேவையில்லை. அவர்களாகவே பேசினாலும் பேச்சை தொடர்வது நமக்கு நல்லதல்ல. குடும்பத்தினர் நெருங்கிய உறவினர் நெருங்கிய நட்பு வட்டங்கள் தவிர மற்றவர்களிடம் யோசித்து விழிப்புணர்வுடன் பேசுவதும் பழகுவதும் நல்லது. இணையதள புது நண்பர்களுடன் பழகும்போது, ஒரு அளவோடு நிறுத்திக்கொள்வது பெண்களுக்கு பாதுகாப்பை தரும். 

நேரில்  பேசுவதற்கும் இணையதளத்தில் முன் பின் தெரியாத நபருடன் நட்பு பாராட்டும் போது பேசுவதற்கும் உள்ள வேறுபாட்டை பெண்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இணையதளத்தில் தன்னுடன் பேசுபவர் நல்லவரா கெட்டவரா, என்பது எதுவுமே தெரியாமல், ஆபத்தை உணராமல் அவர்களுடன் தொடர்ந்து நட்பு ஏற்படுத்திக் கொள்வதால் பெண்களுக்குப் பிரச்சனைகள் உண்டாவதை அன்றாடம்  செய்திகளில் வருவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

 எனவே மிகுந்த விழிப்புணர்வோடு பெண்கள் இணையதளத்தில் பதிவுகள் செய்ய வேண்டும்.  சொந்த தகவல்களை முன் பின் தெரியாத நபர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. பெண்களிடம் பணம் இல்லையென்றாலும் உடல் இருக்கிறது. எனவே, அதற்காகவும் வலை வீசுவார்கள். எனவே, யாரையும் நம்பக்கூடாது.

முக்கியமாக குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியாமல் இணையத்தில் பழகிய நண்பர்களை நம்பி வெளியில் செல்லக்கூடாது. ஏனெனில் இதனால்  பல இளம் பெண்கள் கொடூரமான ஆபத்தை சந்திக்கின்றனர் என்பதை ஊடகங்கள் மூலமாக நாம் அறிகிறோம்.

எனவே எவ்வளவுதான் திறமையான பெண்ணாக இருந்தாலும் இந்த சமுதாயத்தில் மிகவும் விழிப்புணர்வுடன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும்.

ஆசை வார்த்தைகள், தூண்டில்கள் விழுந்துகொண்டே இருக்கும். முகம் தெரியாதவர்கள் நல்லவர்களாகவும், அள்ளித்தரும் வள்ளல்களாகவும் பேசுவார்கள். ஆனால், இலவசம் என்பது எதுவும் இல்லை என்பதை புரிந்துகொண்டால் மட்டுமே  தேவையில்லாத பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். நம்முடைய நிம்மதி மற்றும் பாதுகாப்பு நம் கையில் தான் உள்ளது.

எண்ணம் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தால், யாரும் நம்மை எளிதில் ஏமாற்ற முடியாது.! வாழ்க்கையும் வெற்றிகரமாக அமையும்.

பாதுகாப்பு கருதி பெண்கள் தவிர்க்க வேண்டியவை..

  • முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீட்டில் தனியாக இருப்பதை (எந்த வயதினராக இருந்தாலும்) பாதுகாப்பு கருதி சொல்லக்கூடாது. 
  • அறிமுகம் ஆகி சில நிமிடங்களுக்குள் தனது மொபைல் போன் நம்பரை யாரிடமும் தரக்கூடாது.
  • பிரச்சனை ஏற்படக்கூடிய பாதுகாப்பற்ற இடங்களுக்கு (முக்கியமாக அறிமுகம் இல்லாதவர்களை தனியாக சந்திக்கக்கூடாது. 
  • வீடு வீடாக தகவல் சேகரிக்க வருபவர்கள் உண்மையான அடையாள அட்டை  வைத்திருந்தால் மட்டுமே அவர்கள் கேட்கும் தகவல்களை கொடுக்க வேண்டும்.
  • வெளியில் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுது முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் கொடுப்பதை உடனே  சாப்பிடக்கூடாது. முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. அல்லது வீட்டிற்கு சென்று சாப்பிடுகிறேன் என்று கூறி கையில் வாங்கிக் கொள்ள வேண்டும். 
  • யாரேனும் அவசரத்திற்கு தங்கள் மொபைல் போனை கொடுங்கள் என்று கேட்டால் கொடுக்கக் கூடாது. சூழ்நிலையை பொறுத்து, நானே போன் போடுகிறேன் என்று நீங்களே உதவி செய்யலாம். மற்றவர்கள் கையில் போனை கொடுக்கும் பொழுது அவர்கள் போனில் என்ன செய்கிறார்கள் என்று நமக்கு தெரியாது. 
  • அலைபேசியில் ஆபாசமாக அல்லது தொல்லை கொடுக்கும் நபர்கள் பற்றி வீட்டில் உள்ளவர்களிடம் தயங்காமல் கூறிவிட வேண்டும். அப்படி கூறும் பொழுது உங்களுக்கு பிரச்சனை அதிகமாகாமல் தடுக்க முடியும். 

இப்படி பெண்கள் ஒவ்வொரு விஷயத்திலும் பாதுகாப்பாக இருந்தால் அவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளில் இருந்து எளிதாக தப்பிக்கலாம். வாழ்க்கையை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் வாழலாம்….

Leave a Comment