டாக்டர் என். ஆனந்தன் MS.FRCS, மலர் மருத்துவமனை, அடையார், சென்னை- 20
சிறுநீர் இயல்பாகக் கழியும் வரை யாரும் சிறுநீரகத்தைக் கண்டுகொள்வதே இல்லை. பிரச்னை என்று வந்துவிட்டால் ரொம்பவே பாடாய்படுத்திவிடும்.
எல்லோருடைய முதுகின் பின்புறத்திலும் ஒரு ஜதை சிறுநீரகம் உள்ளது. இவையே ரத்தத்திலிருந்து சிறுநீரை பிரித்தெடுத்து சிறு குழாயின் மூலம் சிறுநீர்ப்பைக்கு அனுப்புகிறது.

இங்கு 300 மி.லி. நிரம்பும்போது சிறுநீர் போக வேண்டும் என்ற உணர்வு நமக்கு ஏற்படும். பிரயாணம், சுற்றுப்புறச் சூழல் காரணமாக சிறுநீரை வெளியேற்றாமல் போனால் 500 மி.லி வரை தாக்குப் பிடிக்கும். பொதுவாக சிறுநீர் வெளியேறாமல் இருக்க நமது உடலில் சிறப்பு சதை அமைப்புகள் பணிபுரிகின்றன. சிறுநீர்ப் பையிலிருந்து வரும் சிறுநீர் குழாய் (Urethera) பெண்களுக்கு பல மடங்கு குட்டையாக உள்ளதால், அவர்களுக்கு சிறுநீர் செல்வதில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.’’
சில பெண்களுக்கு சிறுநீர் அடிக்கடியும், அவசரமாகவும் போக வேண்டியிருப்பது ஏன்?
பொதுவாக நாம் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் போகிறோம். அதிகமாக நீர் குடித்தாலும், குளிர்சாதன அறையிலேயே இருந்தாலும், குளிர் பிரதேசத்தில் வாழ்ந்தாலும் அடிக்கடி செல்வோம்.
பொதுவாக ஒவ்வொரு முறையும் 300 முதல் 500 மி.லி வரை வெளியேறும். ஒரு சிலருக்கு 10 முதல் 30 நிமிடத்திற்கு ஒருமுறையும் மேலும் கழிப்பறை செல்லும் முன்பே சிறுநீர் வெளியேறும். வெளியே எங்கும் செல்லமுடியாத நிலை ஏற்படும். இதற்கு சிறுநீர்ப்பையில் புண் (காச நோயால் ஏற்படும்), வீக்கம் (சிறுநீர் பையில் புற்றுநோய்), சிறுநீரகக் கற்கள் போன்றவை காரணமாக அமையும். சிலருக்கு சிறுநீர் பையில் சிறுநீர் சிறிதளவு சேர்ந்தாலும், சிறுநீர் சதைகள் மிகவும் தூண்டப்பட்டு சுருங்கி விரிவதால் சிறுநீர் அவசரமாக வெளியேறும். ஹார்மோன் குறைவு காரண மாகவும், சிறுநீர் குழாய் குறுகலாக இருந்தாலும் இந்த தொந்தரவு ஏற்படலாம்.’’
இந்த பாதிப்பினை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?
நோயாளிக்கு ரத்தப் பரிசோதனை, வயிற்று ஸ்கேன், சிறுநீர் பரிசோதனை, எக்ஸ்ரே போன்றவை செய்யப்பட வேண்டும். சிறுநீர் பையை தொலைநோக்கி கருவி மூலம் (Cystoscopy)சோதனை செய்யும்போது காச நோய், புற்று நோய், சிறுநீரகக் கற்கள், சிறுநீர்ப் பாதையில் அடைப்பு போன்றவற்றில் ஏதேனும் ஒரு குறைபாடு இருப்பதைக் கண்டறியலாம். மேற்கண்ட வியாதி களுக்கு சிகிச்சை செய்யும்போது, இக் குறைபாட்டிற்கு தீர்வு காணலாம். சிறுநீர்ப்பை பணி செய்யும் முறையை ஒரு சிறப்பு சோதனை மூலம், சிறு நீர்ப்பை நரம்பின் கோளாறு காரணமாக அடிக்கடி சுருங்குவதை அறியலாம்.’’
அடிக்கடி சிறுநீர் போகும் பிரச்சினையுள்ள பெண்களுக்கு… பொதுவான அறிவுரை கள் என்ன?
1. நீர் உறிஞ்சும் ஆடை அணிந்து கொள்ளலாம்.
2. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.
3. பருகும் நீரின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.
சிறுநீர்ப்பை அடிக்கடி சுருங்கு வதைத் தடை செய்ய மருந்துகள் பயன் உள்ளதாக இருக்கும். பாதையின் அடைப்பு இருந்தால் அதை சரிசெய்தல் பயன் அளிக்கும். சிலருக்கு சிறுநீர்ப் பையின் அளவை பெரிதாக்க அறுவைச் சிகிச்சையும் தேவைப்படலாம்.’’
சிலருக்கு தன்னையறியாமல் சிறுநீர் வெளிப்படுவது ஏன்?
சிலருக்கு சிறுநீர்ப்பை சுருங்கி விரிவதில் தளர்ச்சி ஏற்பட்டாலும், சிறு நீர்பை நரம்புத் தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், சிறுநீர்க் குழாயில் அடைப்பு ஏற்பட்டாலும் சிறுநீர்ப்பையில் சிறுநீர் கழித்தப் பின்னும் அதிக அளவு பையில் தங்கிவிடும்.
பொதுவாக ஒரு லிட்டர் அளவு தங்கிவிடும். இதுபோன்ற குறைபாடு இல்லாததால் மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தொட்டியில் நீர் தொடர்ந்து வழிவது போல முதலில் இரவிலும் பிறகு பகலிலும் சிறுநீர் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கும்.
மருத்துவப் பரிசோதனையில் இதனை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். ரத்த, சிறுநீர் சோதனைகளுக்கு பின், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து சிறுநீரகத்தில் வீக்கம் உள்ளதா என்று அறியப்படும். ஒரு பிளாஸ்டிக் குழாய் செலுத்தி அடைப்பட்டு உள்ள சிறுநீரை முழுமையாக வெளியேற்றுவோம். இதன் மூலம் தற்காலிகமாக நீர் வெளியேறுவதைத் தடுக்க முடியும்.
சிறுநீர்க் குழாயில் அடைப்பு உள்ளதை சரி செய்தல் வேண்டும். இதை ஒரு மெடிக்கல் டெலஸ்கோப் கருவி உதவியுடன் செய்து விடலாம். சிறுநீர்ப்பையின் சதைகள் நன்கு சுருங்கி விரிய மாத்திரைகள் மிகவும் பயன் அளிக்கும். சிலருக்கு தான் சிறிய பிளாஸ்டிக் குழாய் மூலம் சிறுநீர் நிரம்பியவுடன் வெளியேற்ற பயிற்சி அளிக்கப் படும்.’’
இருமல் வரும்போது நடக்கும்போது சிலருக்கு சிறுநீர் வெளிப்படுவது ஏன்?
சிலருக்கு பளு தூக்கும்போதும், வேகமாக நடக்கும் போதும், இருமலின் போதும், சிரிக்கும்போதும் அதாவது வயிற்றின் அழுத்தம் சிறுநீரை வெளிப்படுத்துகிறது. இது மிகவும் அசௌகரியத்தையும், ஆடையை நனைத்து அவமானத்தையும் அளிக்கிறது. இவர்கள் சுய கௌரவத்தை இழந்து கூண்டுக்கிளி போல அடைந்து கிடப்பார்கள்.
அடிவயிற்றில் உள்ள சிறப்பு சதைகள் அங்கு உள்ள சிறுநீர்பை, சிறு நீர் குழாய், கர்பப்பை, மலம் தங்கும் குடல் அவைகளை இறுக்க வேண்டிய நிலையில் வைக்கின்றன. இந்த சதைகள் வலு இழந்தால் மேற்கூறிய உறுப்புகள் சிறிது கீழே இறங்கிவிடுகின்றன. இதனால் வயிற்று அழுத்தம் அதிகரிக்கும்போது சிறுநீர் வெளிப்படும்.
சிறுநீர்ப் பாதையில் அமைந்த சிறப்பு சதைகள் சுருங்கி திறப்பதால் இருமல், பளு தூக்கும்போது சிறுநீர் வெளிப்படும். நோயாளியை சிறுநீர்பை நிறைவாக இருக் கும்போது இருமச் சொல்லி சிறுநீர் வெளியேறுகிறதா என்று பார்க்கவேண்டும். அப்படி வெளியேறினால் அவர்களுக்கு மேற்படி குறை உள்ளது என்று தீர்மானிக்கப்படும்.’’
தன்னை அறியாமல் சிறுநீர் கழிப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமா?
பருமனாக இருப்பவர்கள் உடல் எடை குறைத்தல் நல்லது. சிறப்பு சதைகளை உடற் பயிற்சியின் மூலமும், மின்சார சிகிச்சையின் மூலமும் ஓரளவு சீர்படுத்த, வலிமைப்படுத்த முடியும். இம்முறையில் பயன் ஏற்படவில்லையென்றால் அறுவை சிகிச்சைதான் செய்ய வேண்டும்.
கீழே இறங்கிவிட்ட சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாயை சீர் நிறுத்தி, மேலே நிற்கும் வகையில் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். கர்ப்பப்பை மிகவும் அடியிறங்கி பிறப்புறுப்பின் வெளியே வந்த நிலையில் இருந்தால் அதையும் அகற்ற வேண்டும்.’’
ஸ்லிங் ஆபரேஷன் என்றால் என்ன?
இந்த ஆபரேசன் பிறப்புறுப்பு அருகில் செய்யப்படுகிறது. ப்ரோலின் என்ற செயற்கை துணி கொண்டு சிறுநீர் பாதையை சீர்திருத்தப்படுகிறது. இந்த ஆபரேசனை ஆபரேசன் செய்யும் இடத்தில் மட்டும் ஊசி போட்டு செய்துவிடலாம். முழு மயக்கம் தேவையில்லை. அதிக வலி இருக்காது. மிகச் சிறிய வடுதான் ஏற்படும். மறுநாளே அவர்கள் வீட்டிற்குச் செல்லலாம்.
சிறுநீர் ஒழுக்கு மிகவும் வேதனை அளிக்கும் தொந்தரவு. தகுந்த சிகிச்சையின் மூலம் அதனை அவர்கள் குணப்படுத்திக்கொள்ள முன் வந்தால் உடன் நல்ல போது நிவாரணம் அளிக்க இயலும்.
