மருத்துவ விழிப்புணர்வு
மரணம் எந்த ரூபத்திலும் வரலாம் என்பதற்கு உதாரணமாக அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது. மருத்துவ விழிப்புணர்வாக எடுத்துக்கொள்வோம்.
மயங்கி விழுபவர்களின் உயிரை தண்ணீர் கொடுத்து காப்பாற்றலாம் என்று சொல்வார்கள். அதேநேரம், அதிக தண்ணீர் குடிப்பது ஆபத்தாகவும் மாறும் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவில், ஆஷ்லி சம்மர்ஸ் (35) என்ற பெண் ஒருவர், விடுமுறையின்போது கடுமையான கோடையில் பீச்சில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். கடுமையான வெப்பத்தில் தாகம் தணிக்க ஆஷ்லி, 20 நிமிடங்களுக்குள் சுமார் 2 லிட்டர் (நான்கு அரை லிட்டர் பாட்டில்கள்) தண்ணீரைக் குடித்துள்ளார்.
இதற்குப் பிறகு அவருக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, அவர் ஹைப்போநாட்ரீமியா (Hyponatremia) என்று அழைக்கப்படும் water poisoning காரணமாகவே இறந்துள்ளார். உடல் நலனுக்கும், நரம்புகளின் சிக்னலுக்கும் சோடியம் எனும் உப்பு மிக முக்கியம். இது குறிப்பிடத்தக்க அளவுகளில் ரத்தத்தில் இருக்கவேண்டியது அவசியம்
ரத்தத்தில் அதிகப்படியான தண்ணீர் கலக்கும்போது, சோடியத்தின் செறிவு (Concentration) குறைந்துவிடுகிறது. நமது உடலில் சோடியம், நீரின் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சோடியம் குறையும்போது, இயல்புக்கு மாறாக, இரத்தத்தில் உள்ள நீர் மூளை செல்களுக்குள் பாய்கிறது. இதனால் மூளை செல்கள் வீங்கிவிடுகின்றன.
மூளையின் இந்த வீக்கம் (Cerebral Edema) இரத்த ஓட்டம் மற்றும் செயல்பாட்டைப் பாதித்து, மரணத்தை ஏற்படுத்தும்.
எவ்வளவு தண்ணீர் ஆபத்தானது?
பொதுவாக ஆரோக்கியமான சிறுநீரகம் ஒரு மணி நேரத்தில் 0.8 முதல் 1 லிட்டர் தண்ணீரை மட்டுமே வெளியேற்ற முடியும். ஒருவர் அதற்கும் மேலாக, குறுகிய நேரத்தில் அதிக அளவில் தண்ணீர் குடித்தால், அது உடலில் சேர்ந்து, ரத்த சோடியம் அளவைக் குறைக்க ஆரம்பிக்கும்.
ஆஷ்லி சம்மர்ஸ், சிறுநீரகத்தால் வெளியேற்ற முடியாத அளவிற்கு, 20 நிமிடங்களில் சுமார் 2 லிட்டர் தண்ணீரைக் குடித்ததே மரணத்திற்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
