பண்டிகைகள் எல்லாமே லைட் தெரபி

மகிழ்ச்சிக்கு புதிய வழிகள்

மனிதர்களை குதூகலப்படுத்தவே பண்டிகைகள் வருகின்றன. எல்லா பண்டிகைகளின் ஒட்டுமொத்த குறிக்கோளும் மகிழ்ச்சி மட்டுமே. இந்தியாவின் ஒட்டுமொத்த பண்டிகைகளில் தீபாவளி ரொம்பவே ஸ்பெஷல்.

நரகாசுரன் கொல்லப்பட்ட நாளாக தென்னிந்தியர்கள் கொண்டாடுகிறார்கள். ராவணனை வதம் செய்து ராமன் அயோத்தி திரும்பிய நாளாக வட இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள். மஹாவீரர் வீடுபேறு அடைந்த நாள், அசோகர் பெளத்தம் தழுவிய நாள், குரு ஹர்கோவிந்த் சிறையில் இருந்து விடுதலையான நாள் என்று இந்தியா முழுக்க பல்வேறு காரணங்களுக்காக கொண்டாடப்படுகிறது.

இந்த காரணங்களில் உடன்பாடு இல்லாதவர்களும் தீபாவளியை வெளிச்ச தெரபி என்ற வகையில் கொண்டாடலாம். எத்தனை பெரிய இருட்டு என்றாலும், ஒரே ஒரு வெளிச்சத்தால் அதனை போக்கிவிட முடியும்.

வெளிச்சம் என்பது நம்பிக்கையின் சின்னம். சைக்காலஜியாகப் பார்க்கையில் மனிதர் மனதில் இருக்கும் துன்பம், மன அழுத்தம், மனச்சோர்வு ஆகியவற்றை தீபாவளி எனும் லைட் தெரபி விரட்டியடித்துவிடும்.

தீபாவளி உறவுகளுடன் கொண்டாடும் பண்டிகை. எனவே, பழைய கசப்புகள், ஈகோ, காலஇடைவெளி ஆகியவற்றை தூக்கி எறிந்துவிட்டு, மனதிற்குள் அன்பு, மகிழ்ச்சியைக் கொண்டுவாருங்கள்.

முகத்தில் புன்னகை வெளிச்சம் கொண்டுவாருங்கள். பழைய நண்பர்கள், மறந்துபோன உறவுகளுக்கு ஈகோ பார்க்காமல் வாழ்த்து சொல்லுங்கள். இதனால் மனதில் இருக்கும் கோபம், வெறுப்பு, மனஅழுத்தம் எல்லாம் இந்த தீப ஒளியில் கரைந்து போவதைக் காண முடியும். 

எத்தனை தீபம் ஏற்றினாலும் தீப ஒளி குறைவதே இல்லை. அப்படித்தான் எத்தனை பேருக்குக் கொடுத்தாலும் அன்பும், மகிழ்ச்சியும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

தீபாவளியை ஆனந்தமாகக் கொண்டாடுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.

  • SK Murugan, Talk therapist.

Leave a Comment