சைதை சா.துரைசாமி, முன்னாள் மேயர்,
பெருநகர சென்னை மாநகராட்சி
1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசியல் வரலாற்றில் தனிநபர் கட்சியை விட்டு நீக்கப்பட்ட காரணத்திற்காக பொதுமக்களின் போராட்டத்தால் தமிழகமே நிலைகுலைந்தது. காரணம் திமுகவில் சொத்துக்கணக்கை கேட்டதற்காக எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்ற செய்தி 10ம் தேதி வெளியானதும் தமிழகம் முழுக்க தன்னெழுச்சியாக கொந்தளிப்பு உருவானது. கடைகள் அடைக்கப்பட்டன. மாணவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள், ரிக்ஷா தொழிலாளர்கள், பொதுமக்கள் எல்லாம் கூட்டம் கூட்டமாக ஊர்வலம், ஆர்ப்பாட்டம், தர்ணா, போராட்டத்தில் இறங்கினார்கள்.
‘எம்.ஜி.ஆர்.வாழ்க’ என்று எழுதப்பட்ட வாகனங்கள் மட்டுமே செல்ல முடிந்தது. பல்வேறு இடங்களில் மோதல், வன்முறை நிகழ்ந்து ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆண்களும், பெண்களும் குமுறிக்குமுறி அழுதபடி, எம்.ஜி.ஆரை காண குடும்பம் குடும்பமாக சென்னையில் வந்து குவிந்தனர்.
உடுமலைப்பேட்டையில் இஸ்மாயில் என்ற ரசிகர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதையும், பலர் தீக்குளிப்பதையும் அறிந்த புரட்சித்தலைவர் அதிர்ந்துபோனார். உடனடியாக, ‘என்னை கழகத்திலிருந்து நீக்கியதற்காக தீக்குளிப்பு போன்ற உயிர்த்தியாக நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள், முதலில் என்னைத் தீ வைத்துக் கொளுத்திவிட்டு அதன்பிறகுதான் தங்களுக்கு விருப்பமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்’என்று கடுமையான அறிக்கை வெளியிட்டார்.
இதையடுத்து, தொண்டர்களைக் கட்டுப்படுத்தி முறைப்படுத்தவும், திமுக தலைமையின் அராஜகத்துக்குப் பதிலடி கொடுப்பதற்கும் தூய்மைப் போராட்டக் குழுவை உருவாக்கி, அதன் தலைவராக அனகாபுத்தூர் சி.ராமலிங்கம் நியமிக்கப்பட்டார்.
ஒவ்வொரு நாளும் எம்.ஜி.ஆருக்கு மக்கள் ஆதரவு பெருகியது. ரசிகர்கள் தாமரைப்பூ கொடியை ஏற்றினார்கள். தன்னெழுச்சியாக ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு பெயர்களில் எம்.ஜி.ஆர் ஆதரவு அமைப்பை உருவாக்கினார்கள்.
இதனை முறைப்படுத்துவதற்கு தூய்மைப் போராட்டக்குழுவின் தலைவர் அனகாபுத்தூர் ராமலிங்கம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக கழகத் தோழர்கள் மேற்கொள்ள வேண்டிய பணி திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஆதரவு உள்ளதை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் கிளைக் கழகங்களின் பெயரை, ‘அண்ணா திமுக’ என்று மாற்றியமைத்து, தீர்மானங்களை நிறைவேற்றி தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், எனக்கும் மற்றும் பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்’என்று கேட்டுக்கொண்டார்.
திமுகவுக்கு மாற்றாக, ஊழலற்ற ஆட்சியைக் கொடுப்பதற்கு எம்.ஜி.ஆரா, காமராஜரா என்ற கேள்வி எழுந்தபோது பொதுமக்களின் பேராதரவு எம்.ஜிஆரின் தர்மயுத்தத்திற்கு கிடைத்ததால், அக்டோபர் 17-ஆம் தேதி மக்களால் உருவாக்கப்பட்ட அண்ணா திமுக இயக்கத்திற்கு தலைமை ஏற்றார் புரட்சித்தலைவர்.
நானே போடப் போறேன் சட்டம் பொதுவில் நன்மை பயக்கும் திட்டம்’ என திரைப்படங்களில் எம்.ஜி.ஆர். சொன்னதை, ஆட்சியில் அமர்ந்து செய்து காட்டினார். சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாமல் வாழ்ந்து காட்டினார்.
முதல்வராகப் பதவியேற்று முதல்வராகவே மறைந்தார். தான் சம்பாதித்த சொத்துகளை சமூகத்திற்கே வாரி வாரி வழங்கினார். எஞ்சிய சொத்துகளை ஊனமுற்ற குழந்தைகளின் பயன்பாட்டுக்கு அறக்கட்டளை அமைத்து தானம் வழங்கினார்.
புரட்சித்தலைவரின் நேர்மையும், சேவையும், அவருடைய திரைப்படத்தின் பாடல் வரிகள் மற்றும் வசனங்களின் கருத்து 9ம் வகுப்பு படிக்கும் காலத்திலேயே என் சிந்தையில் அழுத்தமாக பதிந்துவிட்டது. அன்றிலிருந்து புரட்சித்தலைவரின் கொள்கையை பின்பற்றி பொது வாழ்க்கையில் நேர்மையான சேவை அரசியலை செய்து வருகிறேன்.
ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாமல் ஐந்து ஆண்டு காலம், மேயருக்குரிய நியாயமான அரசு சலுகைகளைகூட பெறாமல் என் சொந்த செலவில் பணியாற்றினேன் என்றால், அதற்கு புரட்சித்தலைவரின் பாதையில் பயணிப்பதே காரணம். எம்.ஜி.ஆர் புகழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லவே அவரது பெயரில் மனிதநேய இலவச ஐஏஎஸ் கல்வி அறக்கட்டளை மூலம் இந்திய ஜனநாயகத்தைப் பலப்படுத்த நேர்மையான அதிகாரிகளை உருவாக்கிவருகிறேன்.
கழகம் 54வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில் அண்ணா திமுகவின் முதல் தியாகி என்று அழைத்த புரட்சித்தலைவரையும், மக்கள் நலத் தொண்டர் என அழைத்த புரட்சித்தலைவியையும் மேலும் அண்ணா தி.முக. இயக்கத்திற்காக, தர்மயுத்தம் நடத்திய புரட்சித்தலைவருக்காக தங்கள் உயிரையும் உடல் உறுப்புகளையும் இழந்து போராடிய பக்தர்களின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
