குரூர மனிதர்களுக்குப் பலியான சாக்ரடீஸ்
எந்த ஒரு விஷயத்தையும் பெரும்பான்மையின் அடிப்படையில் தீர்மானிப்பது ஜனநாயகம் என்று கருதப்படுகிறது. பெரும்பான்மை மக்களின் விருப்பம் என்பது எல்லா நேரங்களிலும் நியாயமாகவும், உண்மையின் அடிப்படையிலும் இருப்பதில்லை என்பதற்கு உதாரணமே சாக்ரடீஸ் மரணம்.
2500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, “ஏன், எதற்கு, எப்படி என கேள்வி கேள், எதனையும் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டாம்’ என்று நியாயத்தின் பக்கம் நின்றவர் சாக்ரடீஸ்.
அவரது கேள்வி பழமைவாதிகளையும், மத அடிப்படைவாதிகளையும் மற்றும் ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களையும் ஆத்திரப்படுத்தியது. மேலும் இது அவர்களின் சுகபோக வாழ்வையே ஆட்டம் காணச் செய்யக் கூடியது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
கிரேக்க நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடக்கிறது. அவர் மீதான குற்றச்சாட்டு என்னவெனில் “சாக்ரடீஸ் தனது வசீகரமான பேச்சின் மூலம் மக்களையும் குறிப்பாக இளைஞர்களையும் மதத்திற்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும் செயல்படத் தூண்டுகிறார்” என்பதே ஆகும்.
அவருக்கு மன்னிப்பு வழங்குவதா அல்லது மரண தண்டனை வழங்குவதா என நடைபெற்ற வாக்கெடுப்பில் 281 பேர் அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும், 220 பேர் அவரை மன்னிக்கலாம் எனவும் வாக்களித்துள்ளார்கள்.
அபொழுது சாக்ரடீஸிடம் கேட்கப்படுகிறது. நீங்கள் மக்களை தன் பேச்சின் மூலம் தூண்டி, திசைதிருப்ப மாட்டேன் என உறுதியளித்தால் மன்னித்து விட்டு விடுவதாகக் கேட்கப்படுகிறது.
அதற்கு அவர், தன்னால் உண்மையை பேசாமல் இருக்க முடியாது என்று பதிலளிக்கிறார். சாவே வந்தாலும் தான் உண்மையை பேசுவதை தடுக்க முடியாது என வரலாற்றில் முத்திரை பதித்தவர். இத்தனைக்கும், சாக்ரடீஸ் கடவுள் மறுப்பாளரல்ல, ஆனால் கடவுள் மீது நம்பிக்கையுள்ள ஒரு பகுத்தறிவாளர் என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
சாக்ரடீஸுக்கு மரணதண்டனையை நிறைவேற்றும் விதமாக ஹெம்லாக் (HEMLOCK) என்ற கொடிய விஷம் கொடுக்கப்பட்டது. அந்த விஷத்தைக் குடித்தவுடன் அவரது கால் பகுதி முதலில் மறத்துப் போகும். பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக காலிலிருந்து மேல் நோக்கி அனைத்து பாகங்களும் மறத்துப் போய் உயிரை விட நேரிடும்.
இறக்கும் வரையிலும் புத்தக வாசிப்பை விடாமல் செய்த அந்த மாமேதை கிரேக்க தத்துவ ஞானிகளின் தந்தை என அழைக்கப்பட்டார் என்றால் மிகையாகாது. இப்படித்தான் பூமியே சூரியனை சுற்றிவருகிறது என்று சொன்ன கலீலியோவையும் உலகம் அப்படியே பார்த்தது.
இவை அனைத்தும் ஜனநாயக முறையில் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் தான் நடைபெற்றது என்பதுதான் வேடிக்கை. கூட்டமாக ஒன்று சேர்ந்து அநியாயம் செய்வதையும் ஜனநாயகம் என்றே சொல்வார்கள். உண்மையும் ஜனநாயகமும் ஒன்றல்ல.
எண்ணிக்கையில் ஆதரவாளர்கள் குறைவு என்றாலும் உண்மை என்றும் மாறாதது.
