சின்ன விஷயத்தில் வேண்டாம் அலட்சியம்

ஆசிரியர் பார்வை


ஒரு சின்ன அலட்சியம் ஒரு நாட்டையே அழித்துவிடும் என்பார்கள். அதற்கு உதாரணமான கதை இது.

ஒற்றன் ஒருவன் எதிரி நாட்டில் ரகசியமாகத் தங்கியிருந்தான். அவனுடைய குதிரையின் லாடத்தை சீர்செய்ய வேண்டியிருந்தது. தேவைப்படும் நேரத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதியாக இருந்தான் ஒற்றன். எதிரி நாட்டுப் படை திடீரென தங்கள் நாட்டை தாக்குவதற்கு கிளம்புவது தெரியவந்தது. உடனடியாக குதிரையில் ஏறி தன்னுடைய நாட்டுக்கு தகவல் சொல்லக் கிளம்பினான். பாதி வழியிலே குதிரை நொண்டத் தொடங்கியது. என்னவென்று பார்த்தால், குதிரையின் பாதத்தில் இருந்து ரத்தம் சொட்டியது.

இனிமேல் அந்த குதிரையால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்து மிரண்டான். அவன் வேறு ஒரு குதிரையை தயார் செய்து கிளம்புவதற்குள், எதிரி நாட்டுப்படை அவனுடைய நாட்டுக்குள் நுழைந்து தோற்கடித்தே விட்டது.

ஒரு சாதாரண அலட்சியம், இதுபோன்ற  மோசமான விளைவுகளை கொண்டுவந்துவிடும். போராட்டங்களை அலட்சியம் செய்யும் அரசு, வன்முறையை எதிர்கொள்ள நேரிடும். பணியில் காட்டும் அலட்சியம் வேலை இழப்பில் முடியும். உடல் நலனில் காட்டும் அலட்சியம், உயிரையே போக்கிவிடும்.

இதற்கு உதாரணமாக நீரிழிவு நோயையும், மாதவிடாய் தொந்தரவுகளையும் சொல்லலாம். பொதுவாக நீரிழிவு ஆரம்ப கட்டத்தில் மிகப்பெரிய பின்விளைவுகள் எதையும் உருவாக்குவதில்லை. சர்க்கரை அளவு 200தான், 300தான் என்று அசட்டையாக கண்டுகொள்ளாமலே இருப்பார்கள். இதெல்லாம் நம்மை எதுவுமே செய்யாது என்றுதான் நினைப்பார்கள். ஆனால், திடீரென கண் பார்வை மங்குதல், கை, கால் மரத்துப் போதல், காலில் புண் ஆறாத நிலை ஏற்பட்டு காலை வெட்டி எடுக்கும் சூழல் போன்ற அபாயம் ஏற்பட்டுவிடலாம்.

அதேபோன்று மாதவிடாய் தொந்தரவு அதிகரிப்பதை பல பெண்கள் கண்டுகொள்வதே இல்லை. இப்படித்தான் தொந்தரவு செய்யும் என்று அலட்சியம் காட்டுவார்கள். இதனை உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை என்றால் கருப்பை அகற்றுவது தொடங்கி புற்றுநோய் வரையிலும் ஏற்படலாம். ஆகவே, சிறிய பிரச்னையாக இருக்கும்போதே உடல் நலனை கவனித்துக்கொள்வதில் அதிக அக்கறை செலுத்தவேண்டும். நாம் காட்டும் அலட்சியம் மிகப்பெரிய நோய்க்கு நம்மை கொண்டுசெல்லும். அத்துடன், பணம் செலவழித்தும் நிம்மதியை இழக்கும் நிலை உருவாகலாம்.

லட்சியம்,  அலட்சியம் ஆக இரண்டிற்கும் ஓர் எழுத்து மட்டுமே வித்தியாசம். அதைச் சரியாகப் புரிந்துகொள்பவர்கள் வாழ்வில் முன்னேறிக்கொண்டே செல்கிறார்கள். அலட்சியமாக இருப்பவர்கள், வாழ்நாள் முழுவதும் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். எனவே, எதையும் சின்ன விஷயம்தானே என்று அலட்சியம் செய்ய வேண்டாமே…  

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment