ஏஐ மாடலுக்கு மாறியாச்சா..?

மாற்றத்தை ஏற்பவரே ஜெயிக்க முடியும்



தொழிலில் ஒருவர் கொடிகட்டிப் பறந்தாலும், அதை நவீனகாலத்துக்குத் தக்கப்படி மாற்றிக்கொள்வது அவசியம். இல்லாவிட்டால், தொழில் நொடிக்கும் நிலைக்குப் போய்விடும். ஆம், டிஜிட்டல் என்பது தொழிலில் இருந்தால் நல்லது என்ற கட்டத்தைத் தாண்டி, அது இல்லையென்றால் தொழில் நடத்தவே முடியாது என்ற கட்டத்தில் வாழும் நிலைக்கு இன்றைய உலகம் முன்னேறிவிட்டது. இன்றைய காலத்தில் தொழிலை மேம்படுத்த ஏஐ தொழில் நுட்பம் அவசியம் தேவைப்படுகிறது. எழுத்து, ஓவியம், சினிமா, சட்டம், மருத்துவம் என்று எல்லா துறையிலும் ஏஐ சக்கைபோடு போடுகிறது.


தொழில் உலகமானது, இன்று ராட்சச வேகத்தில் பயணிக்கிறது. அதில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் ஏகத்துக்கும் எகிறியிருக்கிறது. போட்டியாளர்களின் அழுத்தம் கழுத்தை நெரிக்குமளவுக்கு வளர்ந்திருக்கிறது. இதில், இனி மெதுவாய்ச் செல்வதற்கு வாய்ப்பே இல்லை. அவர்களுடன் சமமாய்ப் பயணிப்பதைவிட, அதைவிட இரண்டு மூன்று அடி முன்னே சென்றால்தான் தொழில் போட்டியாளர்களால் ஜெயிக்க முடியும்.


அப்படியான தொழில் உலகத்தில் விரைந்து முடிவெடுப்பதுதான் முதல் யுக்தி. முடிவெடுப்பதை விரைவாக்கினால் மட்டுமே காலத்தின் வேகத்திற்கு ஏற்ப நம் தொழிலை ஈடுகொடுத்து பயணிக்க முடியும். இல்லாவிட்டால், பூஜ்யம்தான். இதற்குத் தேவையான  முடிவுகளையும், மாற்றங்களையும்  நாம் விரைவாகத் தொழிலில் செய்யும்போது அதுவே நமக்கு லாபத்தை இரு மடங்காக பெற்றுத் தரும். இதை செய்வது ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் அல்ல… அனைத்தையும் சில மணித்துளிகளில் செய்துவிடலாம். இதற்கு ஏஐ டிஜிட்டல் டெக்னாலஜி உதவுகிறது.


இன்று ஏஐ மூலமே அனைத்தும் இயங்கும் அளவுக்கு உலகம் தலைகீழாக மாறிவிட்டது. குறிப்பாக, கூகுள் மேப் மூலம் வழிதெரியாத இடத்துக்குக்கூட விரைந்து போக முடிகிறது. இந்த யுக்தியைப் பயன்படுத்தித்தான் சில கார் நிறுவனங்கள்கூட, பயணிகளை அழைத்துச்சென்று உடனே பணம் சம்பாதிக்கின்றன. அப்படியிருக்கும்போது, நம்முடைய தொழிலை ஏஐ ஆக்காமல் இருந்தால் நஷ்டம் நமக்குத்தான்.
தொழிலை ஏஐ மாற்றத்துக்கு மாற்றிக்கொள்வது காலத்தின் கட்டாயம். கொஞ்சம் திறமையற்று தொழில் செய்தால் அங்கு வில்லங்கம் வரவேற்கப்படும். குறிப்பாக, ஒருவர் தொழிலை  திறமையற்று நடத்தும்போது, ஆன்லைன் நிறுவனங்கள் தன் பொருட்களை தள்ளுபடி விலையில் விற்று நுகர்வோர்களை மயக்கிவிடுகின்றன. இதனால் அவருடைய லாபம் கபளீகரம் செய்யப்படுகிறது. அதுவும் கடைக்கு வராமலேயே வீடு தேடி பொருள் செல்கிறது.


இதற்கு அதன் டிஜிட்டல் சக்தி பெருந்துணையாக இருக்கிறது. இதை உணராத அவர், ஆன்லைன் நிறுவனம் தங்கள் வயிற்றில் அடிப்பதாக நினைத்துக்கொள்கிறார். அது உண்மையில்லை. ஏஐ தொழிற்நுட்பத்தை பயன்படுத்தாத தொழிலின் திறமையின்மையை அவர் உணராதனாலேயே இந்த நிலைமை அவருக்கு ஏற்படுகிறது.  உண்மையில், நீங்கள் உங்கள் தொழிலை டிஜிட்டலாக்கி திறமையாகச் செயல்படும்போது இந்த நிறுவனங்கள் உள்ளே வருவதற்கு வாய்ப்பே இல்லை. அதை உணராதபோதுதான் நாம் தொழிலையும், லாபத்தையும் இழக்கிறோம்.


ஆகையால், முதலில் டிஜிட்டலில் மாற முடிவெடுங்கள். அதற்கான வழிமுறைகளையும் கலாசார மாற்றத்தையும் பின்பற்றுங்கள். ஆன்லைன் மூலம் பொருட்கள் வீட்டுக்குச் செல்வதைப்போன்று, நீங்களும் அதற்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உங்கள் பணியாளர்கள் உங்களிடம் ஒவ்வொன்றையும் கேட்டு செய்யும் வகையில் நிறுவனம் இருந்தால் அதில் மாற்றம் அவசியம். உங்களை கேட்காமல் தாங்களே செய்து முடிக்கும் வகையில் பணியை அவர்களுக்கு விளக்கி அதை செய்து முடிக்கும் அதிகாரத்தை அளியுங்கள்.


அந்த அதிகாரத்தை சரியாய் பயன்படுத்தி தவறு நேர்ந்தால் அத் தவறை மன்னிக்கும் மனப்பக்குவம் பெறுங்கள்.  என்னதான் இயந்திரங்களும், கணிணியும் இருந்தாலும் உங்கள் தொழில் நடப்பது உங்கள் பணியாளர்களால் என்பதை மறக்காதீர்கள். ஆகையால், அவர்களிடம் கேட்காமல் அவர்கள் பணி செய்யும் வகையில் உங்கள் முறையை எளிதாக்குங்கள். அதுபோல், டிஜிட்டல் மாற்றம் செய்யும் போது தொழில் அமைப்பு பாதிக்கப்படலாம். ஒரு இடத்தில் செலவுகள் குறையும். இன்னொரு இடத்தில் லாபம் கூடும். இதனால் நம் வியாபார அமைப்பை மாற்றவேண்டியிருக்கும். மாற்றங்களுக்கேற்ப அதில் புதுமைகளை புகுத்தவேண்டியிருக்கும். அதைச் செய்யத் தவறாதீர்கள்.


மொத்தத்தில் அதிக செலவு செய்து உங்கள் தொழிலில் ஒரு தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தியிக்கிறோம் என்பதற்காக அதை மட்டுமே வைத்திராமல் காலத்திற்கேற்ப புதிய தொழிநுட்பத்தை புகுத்திக்கொண்டே இருப்பது தான் தொழிலுக்கு புதுப் பொலிவைத் தரும். இன்னும் சொல்லப்போனால், ஏஐ டிஜிட்டல் டெக்னாலஜி குறித்த விஷயங்கள் தெரியாதவர்களுக்குக்கூட அதுபற்றிய விளக்கங்களையும், குறிப்புகளையும் டிஜிட்டலே தருகிறது என்பதுதான் வியப்பான விஷயம். ஆகையால், ’இன்றைய அவசரடி தொழில் யுகத்தில் ஒரே இடத்தில் நின்றிருந்தால் உலகம் உங்கள் மீது ஏறி நசுக்கிவிட்டுப் போய்கொண்டிருக்கும்’ என்கிற பில் கேட்ஸின் வார்த்தையை நினைவில்கொண்டு டிஜிட்டலோடு பயணித்து தொழிலில் உச்சம் தொடுங்கள்.

Leave a Comment