புல்  படிப்புக்கு இவ்வளவு சம்பளமா..?

புதுசா வேலைவாய்ப்புகள்



போட்டி நிறைந்த உலகில், விளையாட்டு வீரர்களும் போட்டியாளர்களாகவே மாறிவருவதுதான் வியப்புக்குரிய விஷயம். விளையாட்டு உலகில் நீடிக்க வேண்டுமானால், திறமையை நிரூபிப்பது அவசியம். திறமையை நிரூபிக்கத் தவறுபவர்கள் விளையாட்டிலிருந்தே விடைபெறும் சூழலுக்குத் தள்ளப்படுவர்.
ஆகையால், விளையாட்டுத் துறையை தேர்வு செய்பவர்கள், போட்டிகளில் பங்கேற்பது தவிர, அந்த துறை சார்ந்த பிற விஷயங்களை அறிந்து வைத்திருப்பது அதே துறையில் தங்கள் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ள பெரிதும் உதவும்.

உதாரணமாக கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் ஒருவர், பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் இரண்டில்தான் பயிற்சி பெறவும் சாதிக்கவும் முடியும் என்பதல்ல. விளையாட்டு பயிற்சியாளர், உடற்கல்வியாளர், மைதான பராமரிப்பாளர், புள்ளிவிவர நிபுணர், விளையாட்டு இதழாளர், வர்ணனையாளர், விளையாட்டு எழுத்தாளர், விமர்சகர் எனப் பலமுகங்களில் சாதிக்க முடியும்.


குறிப்பாக விளையாட்டுத் துறையை தேர்வு செய்தவர்களுக்கு படித்து முடித்தவுடன் வேலையில் அமர்வதற்கும், படித்த படிப்பைக் கொண்டு சொந்தமாக தொழில் தொடங்குவதற்கும் பல படிப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் டர்ப் மேனேஜ்மென்ட். புல் தரையை மேலாண்மை செய்வது பற்றிய படிப்பான இது, ஆடுகளத்தின் தன்மையை நன்கு உணர கற்றுத் தருகிறது. ஆடுகளத்தின் தன்மை விளையாட்டின் போக்கை தீர்மானிக்கக்கூடியது. ஆடு களத்தின் தன்மை அறிந்து வீரர்களை பயன்படுத்தும் அணி வெற்றியை எளிதில் வசமாக்கிக்கொள்ளும். விளையாட்டு வீரர், டர்ப்மேனேஜ்மென்ட் பற்றி அறிந்திருப்பது விளையாட்டில் சாதிக்க உதவுவதுடன், அந்த துறையில் வேலைவாய்ப்பையும் உறுதி செய்யும்.


கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து என பல்வேறு விளையாட்டு மைதானங்களும் பச்சைப்பசேல் என இருப்பதைக் காணலாம். அந்த பச்சைப்பசேல் புல்வெளியை உருவாக்க கற்று தரும் கல்விதான் டர்ப் மேனேஜ்மென்ட். இந்த பச்சைப்பசேல் புல்வெளிகள் விளையாட்டு மைதானம் மட்டுமல்லாமல் அலுவலக வளாகங்கள், பூங்காக்கள் எனப் பல இடங்களிலும் தற்போது அழகிற்காக வளர்க்கப்படுகிறது. இதனால் இந்த துறையில் வேலைவாய்ப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன.


அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் டர்ப் கிராஸ் சயின்ஸ் மற்றும் டர்ப் கிராஸ் மேனேஜ்மென்ட் என்ற பெயரில் பட்டப்படிப்புகளும், டிப்ளமோ படிப்புகளும் வழங்கப்படுகின்றன. ஏராளமான பல்கலைக்கழகங்களில் வகுப்பறை கல்வியாக இருக்கும் இந்தப் படிப்புகள், காலத்தின் தேவையாக இப்போது இணையக்கல்வியாகவும் கற்றுத் தரப்படுகிறது.


இந்த படிப்பில் புல் விதைப்பு, மேல்புறம் விரித்தல், நீர்ப்பாசனம், பூச்சி மற்றும் பூச்சி கட்டுப்பாடு, கருத்தரித்தல், அறுவடை, புல் நிறுவுதல் / சீரமைப்பு, புல்தொட்டி மற்றும் புல்கோபுரம் பராமரிப்பு என பல பாடங்கள் போதிக்கப்படுகிறது. இதனை கற்றறிவதன் மூலம் பல வேலைவாய்ப்புகள் உள்ளன அல்லது சுயமாகவும் புல்வெளி அமைப்பாளராக பணியாற்றலாம்.


புல்தரை மேலாண்மை படித்தவர்கள் தோட்டக்கலை மேலாளர் பணியில் சேர முடியும். விளையாட்டுத் துறை, கட்டுமானத் துறை, பொது நிறுவனங்கள், பண்ணை பராமரிப்பு, ரியல் எஸ்டேட் துறை, பத்திரப்பதிவுத் துறை எனப் பல்வேறு துறைகளிலும் இவர்களுக்கான பணி வாய்ப்புகள் கிடைக்கும். பணிக்கும், பதவிக்கும் அனுபவத்திற்க்கும் நல்ல ஊதியம் பெறலாம். ஆண்டிற்கு அதிகபட்சமாக சுமார் 50 லட்சம் வரை ஊதியம் பெறலாம். சுயதொழிலாக செய்பவர்கள், தங்கள் கலைவண்ணத்திற்கேற்ப கைநிறைய சம்பாதிக்கலாம்.


அமெரிக்காவின், தொழிலாளர் புள்ளியியல் அமைப்பு தகவல்படி, கடந்த 2014ல் மட்டும் 12.82 லட்சம் பேர் தரை பராமரிப்பு ஊழியர்களாக பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும், இந்தத் துறையில் வேலைவாய்ப்பு வளர்ச்சி 2014-2024ல் 8 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


டர்ப் மேனேஜ்மென்ட் வெளிநாடுகளில் முழுநேர கல்வி, பகுதி நேர கல்வி, இணைய வழிக் கல்வி என பல வகைகளில் வழங்கப்படுகின்றன. நம் நாட்டில் முழுமையான டர்ப் மேனேஜ்மென்ட் கல்வி இதுவரை இல்லை. ஆனால் டெல்லியில் விளையாட்டுப் பயிற்சி நிலையங்களில் மைதான அமைப்போடு சேர்த்து புல்வெளி அமைப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது. எனவே இந்த படிப்பை தேர்வு செய்ய இருப்பவர்கள், வெளிநாடு சென்றால் சிறந்த பயிற்சியுடன் நாடுதிரும்பி நல்ல வாய்ப்புகளை பெறலாம். அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் இணையதளம் வழியாகவும் இந்த கல்வியை பயில முடியும்.


புல் மேலாண்மைப் பாடத்தை கல்லூரியில் சேர்ந்து படிப்பவர்களாக இருந்தாலும், இணைய வழியில் படிப்பவர்களாக இருந்தாலும் களப் பயிற்சி, கள அனுபவம் அவசியமாக்கப்பட்டுள்ளது. புல் அறிவியல் பட்டங்கள் பெறுவதன் மூலம், நாம் பெறும் பட்டங்கள், பட்டயங்களுக்கு ஏற்ப, கோல்ப் மைதான கண்காணிப்பாளர், தடகள மைதான மேலாளர், புல்வெளி நிபுணர், இயற்கை நிலக்காட்சி பராமரிப்பு நிபுணர், தரை புல் தயாரிப்பு, தளவாடப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை பிரதிநிதி, தாவர மேலாண்மை, சுற்றுச்சூழல் ஆர்வலர், கல்லறை பராமரிப்பு மேலாளர், ஆராய்ச்சி உதவியாளர், சர்வதேச தரை புல் நிபுணர், தரைப் புல் விஞ்ஞானி என உலக அளவில் சுமார் 200 வகையான பணிகள் உள்ளன.

ஆகையால், விளையாட்டு வீரர்களும், வேலைவாய்ப்பு இல்லாதவர்களும் இத்தகைய படிப்பைப் படித்தால் நிச்சயம் வாழ்வில் பிரகாசிக்கலாம்.
விளையாட்டு மட்டுமல்ல, அதற்கான படிப்பும் ஒருபோதும் வீணாகாது.

Leave a Comment