இந்திரா காந்தி தவறு செய்ததை ஒப்புக்கொண்டது ஏன்..?

வெற்றிக்கு எளிய வழிகள்

சில நேரங்களில் தவறு செய்ததை ஒப்புக்கொள்ளும்போது தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. பணியில் இருந்து நீக்கப்படலாம், சம்பளம் குறைக்கப்படலாம் அல்லது சஸ்பெண்ட் செய்யப்படலாம். இதற்கு பயந்து உண்மையை சொல்லாமல் மறைப்பது சரியல்ல. ஏனென்றால் தவறு செய்தது யார் என்று நீங்கள் சொல்லாமல் இருந்தாலும் கண்டுபிடிக்கப்படலாம். அப்போது விளைவுகள் இதைவிட மோசமாக இருக்கலாம். அதனால் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதும், மீண்டும் அதேபோல் தவறு செய்யாமல் இருப்பதும்தான் வணிக வெற்றிக்கும் தலைமைக்குமான பண்பு. 

தவறு செய்தவர் மனதார மன்னிப்பு கேட்கும்போது நிச்சயம் மன்னிப்பு கிடைக்கும் என்பதற்கும் தலைமை ஏற்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கும் நல்ல உதாரணம் நம் மறைந்த பாரத பிரதமர் இந்திராகாந்தி.

ரேபரேலி தொகுதியில் இந்திராகாந்தி போட்டியிட்டு வென்றது செல்லாது என்று ராஜ்நாராயண் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகன்மோகன் சின்ஹா இந்திராகாந்தி வெற்றி பெற்றது செல்லாது என்று 1975ம் ஆண்டு தீர்ப்பு கூறினார். இந்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. உடனே உச்ச நீதிமன்றத்தை நாடினார் இந்திரா. பிரதமராக இந்திரா பதவியில் தொடரலாம் என்றாலும் ஓட்டுப் போடவோ, புதிய சட்டம் இயற்றாவோ கூடாது என்று இடைக்கால தடை கொடுத்தது உச்ச நீதிமன்றம். இந்த நேரத்தில் இந்திரா பதவி விலகும்வரை அவரது வீட்டுக்கு வெளியே முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக மொரார்ஜி தேசாய், ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்கள் திட்டம் தீட்டுவதாக இந்திராவுக்கு தகவல் கிடைத்தது. மேலும் போலீஸ், ராணுவம் போன்றவற்றையும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக வதந்தி பரவியது.

அதனால் இந்த நேரத்தில் இந்திரா காந்தி ராஜினாமா செய்தால் நாட்டில் குழப்பம் ஏற்படும் என்றும் அதனால் நெருக்கடி நிலை அமல்படுத்தி நிலைமையை சமாளிக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை சொன்னார்கள். மிகுந்த யோசனைக்குப்பிறகு நெருக்கடிநிலை அறிவிப்பதற்கு ஜனாதிபதி பக்ரூதின் அலியிடம் மசோதா அனுப்பப்பட்டு, இந்தியாவில் முதன்முறையாக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டது.

நெருக்கடி நிலையை எதிர்த்த தலைவர்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள், பத்திரிகைகள் முடக்கப்பட்டன. மக்களுக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை முடக்கப்பட்டதால், அடுத்துவந்த தேர்தலில் முதன்முறையாக காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. 

ஆனால் அடுத்துவந்த ஜனதா கட்சியின் ஆட்சி இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை. கட்சியில் இருந்த அத்தனை தலைவர்களுக்கும் பிரதமர் பதவியின் மீது ஆசையும் வெறியும் இருந்ததால் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் சூழல் உருவானது.

தேர்தல் தோல்வி இந்திரா காந்தியின் மனதை முழுமையாக மாற்றியிருந்தது. என்ன தவறு செய்தோம் என்பதை முழுமையாக உணர்ந்திருந்தார். அதனால் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் தயக்கமே இல்லாமல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அத்துடன் நில்லாமல், இனி நாட்டில் எந்த சூழலிலும் நெருக்கடி நிலை அறிவிக்கப்படாது என்றும் உறுதியாக தெரிவித்தார்.

ஜனதா கட்சியின் கூத்துக்களை பார்த்து வெறுத்திருந்த மக்கள் ஒரு உறுதியான தலைவர் வேண்டும் என்றே எதிர்பார்த்தார்கள். ஏற்கெனவே தவறு செய்திருந்தாலும் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டதால், மக்கள் அவரை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.  

நாங்கள் தவறு செய்துவிட்டோம், அந்த தவறை உணர்ந்தும் விட்டோம். ஆனால் நான் உங்களுக்கு ஒரு உறுதிமொழி தருகிறேன், முன்பு செய்த தவறை இனி எப்போதும் செய்யமாட்டோம் என்று இந்திரா உறுதியாக சொன்னார். இந்திரா கேட்ட மன்னிப்பு மக்களின் மனதை தொட்டது. அதனால் மீண்டும் அவரை அசுர பெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் உட்காரவைத்தார்கள்.

மக்களிடம் மட்டுமின்றி ஜெயப்பிரகாஷ் நாராயணனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார் இந்திரா காந்தி. நீ திறமைசாலி, நல்லவள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீ பல்லாண்டு வாழ்ந்து நாட்டுக்கு பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்தி வழியனுப்பினார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். பூமிதான இயக்கத்தலைவர் வினோபாவை நேரில் சந்தித்து பகிரங்க மன்னிப்பு கேட்டார். தலைவர்கள் மட்டுமின்றி மக்களும் இந்திராவின் மன்னிப்பை மனதார ஏற்றுக்கொண்டார்கள். அதன் விளைவு தேர்தலில் தெரிந்தது. ஆம், மொத்தமுள்ள 525 இடங்களில் 351 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மீண்டும் பிரதம மந்திரியாக பொறுப்பேற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் இந்திரா காந்தி.

இந்த வெற்றி சொல்லவரும் கருத்து ஒன்றே ஒன்றுதான். தவறு செய்வது மனித குணம். தொழிலிலும் வியாபாரத்திலும் இது நடக்கவே செய்யும். ஆனால் தவறை உணர்ந்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டால் நிச்சயம் ஏற்கப்படும். மன்னிப்பு கேட்கும் குணமே ஒருவனை தலைவனாக உயர்த்தவும் செய்யும்.

மன்னிப்பு கேட்டதன் மூலம் மகத்தான தலைவியாக உருமாறிய இந்திராவின் பொன்மொழிகள் இதோ..

  • வாய்ப்புகள் தானாக வருவதில்லை, விடாமுயற்சி மற்றும் தைரியத்துடன் போராடியே வாய்ப்பை பெறவேண்டும்..
  • மாபெரும் வெற்றி பெற விரும்புபவர் முதலில் தன் மீது நம்பிக்கை வளர்க்க வேண்டும்.
  • நான் சந்தோஷமாக இருக்கும்போது சந்தோஷமாகவும் கோபம் வந்தால் கோபமாகவும் இருப்பேன். பிறர் என்ன நினைப்பார்கள் என்பதற்காக என் உணர்ச்சிகளை மறைப்பது எனக்கு தெரியாது.
  • வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க நினைத்தால் எல்லையை தாண்ட வேண்டும்.
  • மன்னிப்பு கேட்பதுதான் ஒருவரின் துணிச்சலான நல்லொழுக்கம்.
  • வாழ்க்கையின் நோக்கம் நம்பிக்கையுடன் காத்திருப்பதும் போராடி வெற்ரி பெறுவதும்தான்.
  • கடுமையாக உழைப்பவர்கள் மற்றும் பிறர் செய்த வேலைக்கு பெயர் வாங்குபவர்கள் என இரண்டு வகையான மனிதர்கள் உண்டு. முதல் வகை மனிதர்களுடன் இருக்கவேண்டும், அங்குதான் போட்டி குறைவாக இருக்கும்.
  • தியாகம் என்பது முடிவல்ல, நல்ல ஆரம்பம்.

Leave a Comment