பிறர் பொருளை எடுத்துக்கொள்ள ஆசை வருகிறதா..?

Image

பொறாமை அல்ல திருட்டு

’களவும் கற்றுமற’ என்று சொல்லப்படும் பழமொழியை, நிஜ களவு என்று நினைத்தோ என்னவோ, இன்று பலரும் திருட்டுக்கு அடிமையாக இருக்கிறார்கள். பிறருக்குச் சொந்தமானதை, அவருக்குத் தெரியாமல் எடுத்துக்கொள்வது திருட்டு.  அது சிறிதாக, பெரிதாக, பொருளாக, கருத்தாக என எதுவாக இருந்தாலும்,  சொந்தக்காரர்கள் அனுமதி இல்லாமல் எடுத்தால் அது திருட்டுத்தான்.  அது என்ன காரணத்திற்காக எடுக்கப்பட்டாலும், அது திருட்டுதான்.

இன்றைய உலகில் எல்லா இடங்களிலும் திருட்டுகள் நிரம்பியுள்ளன.  பணம்,  பொருளாகத் திருடுவதைத் தவிர மணல் திருட்டு, நீர் திருட்டு, மின் திருட்டு, இணைய திருட்டு, கதை திருட்டு, கருத்து திருட்டு,  மென்பொருள் திருட்டு என பெருகிவருகின்றன. அதுவும் இன்றைய காலத்தில் கணினி மற்றும் கைப்பேசி வழியாக தகவல்கள் திருடப்படுவது மிகப்பெரிய கொள்ளையாக இருக்கிறது.


திருட்டுப் பழக்கம் அரிதாக சிலருக்கு ஒருவகை மனநோயால் வருவதுண்டு. இதற்கு உளவியல் விஞ்ஞானம்,  க்ளிப்டோமேனியா என்று  பெயர் சூட்டியுள்ளது.  இந்த நோயுள்ளவர்கள் தங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்த இயலாதவர்கள். ஆனால், தொடர்ந்து மனநல ஆலோசனை பெறுவதன் மூலம் இந்த நோய்க்கு ஆட்பட்டவர்களும் திருந்தி வாழமுடியும்.

பெற்றோர் குழந்தைகளுக்கு உதாரணமாக வாழவேண்டும். அலுவலகத்தில் இருந்து பேப்பர், பேனா போன்றவற்றை எடுத்துவருவதும் திருட்டு என்பதை உணர்ந்து தவிர்க்க வேண்டும். அப்போதுதான், பள்ளியில் இருந்து பிள்ளைகள் எதையும் வீட்டுக்கு எடுத்துவராது. அப்படியே எடுத்துவந்தால், உடனே குழந்தையைத் தண்டிக்கக்கூடாது. திருட்டு தவறு என்று மீண்டும் மீண்டும் அழுத்தமாக மனதில் பதியவைத்து, அந்த பொருளை திரும்பக கொடுத்துவரச் செய்ய வேண்டும். அப்போதுதான் திருடும் எண்ணம் குழந்தைக்கு வராது.

இன்னும் சிலர் குடும்ப வறுமை, அவசரத் தேவைக்காக திருடுவதுண்டு. காரணம் என்னவாக இருந்தாலும், திருட்டு என்பது மாபெரும் குற்றம். ஏனென்றால், ஊனமுற்றவர்கள்கூட தங்கள் குடும்பத்தை வாழவைக்க, உழைத்துத்தான் சம்பாதிக்கிறார்கள். எனவே,  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பாடியதுபோன்று, ‘உழைத்து வாழ வேண்டுமே தவிர, பிறர் உழைப்பில் வாழக்கூடாது’.

திருட்டு என்பது மாற்றமுடியாத குணம் அல்ல. ஆம், திருடனாக இருந்து திருந்திய எத்தனையோ பேரின் சரிதங்கள் நமக்குத் தெரியும். ராமாயணம் என்ற ஆதி காவியத்தை எழுதிய வால்மீகியே திருடனாக வாழ்ந்தவர்தான். நம் வாழ்வில் பின்பற்றத்தக்க அத்தனை அறநெறிகளையும் படைத்த வால்மீகி, தொடக்க காலத்தில் திருடனாக வாழ்ந்தவர் என்பது விந்தைதான்.

பெரும்பாலோர் தெரிந்த வீட்டில், தெரிந்த நபர்களைத்தான் ஏமாற்றி திருடுகிறார்கள். இதன் அர்த்தம், அவர்கள் ஏமாந்துவிட்டார்கள் என்பது அல்ல, அவர்களின் நம்பிக்கையை நீங்கள் உடைத்துவிட்டீர்கள் என்பதுதான். ஆகவே, திருட்டில் இருந்து எப்போதும் விலகியே நில்லுங்கள்.

அதுசரி, ’களவும் கற்றும் மற’ என்றால் அர்த்தம் என்ன தெரியுமா? களவு என்பதன் அர்த்தம் காதல். இளம் வயதில் மனதில் வரும் காதல் அனுபவத்தை கற்றுக்கொண்டதும் மறந்துவிட வேண்டும் என்பதுதான்.

Leave a Comment