அக்டோபர் 10 நினைவுகள் – சைதை சா.துரைசாமி, முன்னாள் சென்னை மேயர்
தமிழ்நாட்டில் அதிக ஆண்டுகள், அதாவது கிட்டத்தட்ட 31 வருடம் ஆட்சி புரிந்த அண்ணா திமுக எனும் கட்சிக்கு 1972ம் ஆண்டு அக்டோபர் 1 அன்று விதை ஊன்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் 8ம் தேதி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், ’திமுக மந்திரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற, ஒன்றிய, நகர, கிளைச் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கணக்கு காட்ட வேண்டும்’ என்று உரிமைக் குரல் எழுப்பினார். இதையொட்டி அக்டோபர் 10 அன்று நடந்த அரசியல் அதிர்வுகளை பகிர்ந்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
எம்.ஜி.ஆரின் ஆவேசமான பேச்சு அவரது ரசிகர்களுக்குத் தேனாக இனித்தது. தமிழக மக்கள் அனைவரும் நியாயமான பேச்சு என்று சான்றிதழ் கொடுத்தனர். மாற்றுக் கட்சியினரும், கட்சியின் பொருளாளர் என்ற ரீதியில் எம்.ஜி.ஆர். கணக்கு கேட்டதில் தவறு இல்லை என்றே கூறினார்கள்.
எம்.ஜி.ஆர். கணக்கு கேட்ட நாளில், அன்றைய முதல்வர் கருணாநிதி மதுரையில் இருந்தார். எனவே, ராமனாதபுரம் மாவட்டச் செயலாளர் தென்னரசு, மதுரை முத்து, திருச்சி மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர். மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பேச்சு பரவியது.
இதையடுத்து ‘செயற்குழு, பொதுக்குழுவில் பேசவேண்டிய பிரச்னைகளை பொதுமேடையில் பேசி கட்சிக்குள் குழப்பம் விளைவிக்கிறார்’ என்று எம்.ஜி.ஆர். மீது குற்றம் சுமத்தி முதல்வர் கருணாநிதி, பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரிடம் செயற்குழு உறுப்பினர்கள் புகார் மனு கொடுத்தனர். அதில் 12 மாவட்டச் செயலாளர்களுடன் எஸ்.ஜே.சாதிக்பாட்சா, சத்தியவாணிமுத்து, ப.உ.சண்முகம், என்.வீ.நடராசன், க.அன்பழகன், அன்பில் தர்மலிங்கம், மன்னை நாராயணசாமி உள்ளிட்ட 26 பேர் கையெழுத்துப் போட்டிருந்தார்கள்.
இந்த மனுவை கருணாநிதியும் நெடுஞ்செழியனை பரிசீலனை செய்தார்கள். இதையடுத்து அக்டோபர் 10ம் தேதி எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து விலக்கிவைக்கும் அறிவிப்பு வெளியானது.
நெடுஞ்செழியன் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘தலைமைக்கழக பொருளாளர் எம்.ஜி.ஆர். கழகத்துக்குக் களங்கம் ஏற்படும் வகையில் தொடர்ந்து செயல்பட்டுவருவதால், அவர் இன்று முதல் கழகப் பொருளாளர் பொறுப்பில் இருந்தும் மற்றும் கழகத்தின் சாதாரண உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டு இருக்கிறார்’ என்று கூறப்பட்டிருந்தது.
எம்.ஜி.ஆர். மீது எடுத்த நடவடிக்கை குறித்து கருணாநிதியிடம் கேட்டபோது, ’எம்.ஜி.ஆரின் சமீப நடவடிக்கைகள், பேச்சுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தலைமைக்கழக செயற்குழு உறுப்பினர்களும், முக்கியஸ்தர்களும் மனு கொடுத்தார்கள். அதன்படி தலைமைக் கழகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…’’ என்றார்.
இதனால் கழகத்துக்குப் பாதிப்பு ஏற்படுமா என்று கேட்டதற்கு கருணாநிதி, ’ஏற்கெனவே அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்துக்கணக்கை சட்டசபையில் காட்டி வருகிறார்கள். வட்டச் செயலாளர், கிளைக்கழகச் செயலாளர்கள் எல்லாம் சொத்துக்கணக்கு காட்ட வேண்டும் என்று அவர் இப்போது புதிதாக சொல்லியிருக்கிறார்.
27 ஆண்டு கால இனிய நண்பரான கலைத்துறை, தொழில்துறை, அரசியல் துறை ஆகியவற்றில் என்னுடன் பழகிய ஒருவரை காப்பாற்றுவதைவிட, என்னைக் காப்பாற்றிக் கொள்வதைவிட, நானும் அவரும் சார்ந்துள்ள கழகத்தைக் காப்பாற்ற முயற்சிப்பதுதான் அண்ணா கற்றுத்தந்த கடமையாகும். அதனால்தான் எவ்வளவோ வேதனைக்கிடையே நானும் நாவலரும் இத்தகைய முடிவு எடுக்கவேண்டியதாயிற்று’’ என்று கூறினார்.
இந்த அறிவிப்பு குறித்து எம்.ஜி.ஆரின் கருத்தை அறிய சத்யா ஸ்டூடியோவுக்கு போன் செய்த நிருபர்களிடம், ‘’நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் வரவில்லை. அது வந்தபிறகு என் கருத்தைத் தெரிவிக்கிறேன்’’ என்றார்.
‘’உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது, உங்கள் பதில் என்ன?’’ என்று கேட்டதற்கு எம்.ஜி.ஆர், ‘’நான் இப்போது பாயசம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன், நாளை இதுகுறித்துப் பேசுகிறேன்…’’ என்று சிம்பிளாக பதில் அளித்தார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எம்.ஜி.ஆர். எளிதாக எடுத்துக்கொண்டாலும், அவரது ரசிகர்களும், தொண்டர்களும், பொதுமக்களும் துடிதுடித்துப் போனார்கள். எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கிய செய்தி காட்டுத் தீ போல் தமிழகம் முழுக்க பரவியது.
எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து நீக்கியதை ஒரு கட்சிப் பிரச்னை என்று பார்க்காமல், தங்கள் சொந்தப் பிரச்னையாக நினைத்தார்கள். ஒவ்வொரு ரசிகரும் தன்னையே கட்சியிலிருந்து நீக்கிவிட்டதுபோல் கொதித்தார்கள். எனவே, மறியல், போராட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா என்று தமிழகமே இரண்டாம் சுதந்திரப் போராட்டம் போன்று கொதித்தெழுந்தது.
சாலைகள் எல்லாம் வெறிச்சோடின. ரோட்டில் எந்த வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு கிளர்ச்சிகள் தன்னெழுச்சியாக உருவாகின. ‘எம்.ஜி.ஆர். வாழ்க, கருணாநிதி ஒழிக’ என்று எழுதப்பட்ட வாகனங்கள் மட்டுமே உலாவர முடிந்தது.
திமுக கிளைக் கழகங்களுக்கும் எம்.ஜி.ஆர். மன்றத்தினருக்கும் இடையில் கடும் மோதல் நடந்தது. காவல் துறை மூலம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டது. இதன் உச்சபட்சமாக தீவிர ரசிகர்கள் சிலர் எம்.ஜி.ஆருக்காக தங்கள் உயிரையே பணயம் வைத்து தீக்குளித்தனர்.
இந்த செய்தி என் காதில் விழுந்ததும் தீயில் விழுந்தது போல் துடித்துப்போனேன். உடனடியாக என்னுடைய தலைமையில் ரசிகர்களும் தொண்டர்களும் இணைந்து சைதாப்பேட்டை முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தி கருணாநிதிக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வெளியிட்டோம். காவல் துறை எங்கள் எல்லோரையும் விரட்டியடித்து கைது செய்து சிறையில் போட்டது.
நேர்மையான அரசு வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர். எழுப்பிய புரட்சிக்குரல் தமிழகத்தை உலுக்கியெடுத்தது. இதன் நீட்சியாக அவருடைய லட்சியம், கொள்கைகளைப் பின்பற்றியே என்னால் பெருநகர சென்னை மேயராக ஊழலற்ற நிர்வாகத்தை என்னால் கொடுக்க முடிந்தது. புரட்சித்தலைவர் சொன்னபடி, ‘சுத்தமான சென்னை, கை சுத்தமான நிர்வாகம்’ என்று வாக்குறுதி கொடுத்து, அதை நிறைவேற்றவும் புரட்சித்தலைவரின் சிந்தனைகளே காரணம் என்பதை சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்.