பசியில் ஓடிய ஒலிம்பிக் கால்கள்

Image

மில்கா சிங் எனும் அற்புதம்


தடகளம் என்றாலே தள்ளாடும் இந்தியர்களுக்குள் நம்பிக்கை விதையை விதைத்தவர் மில்கா சிங். ஆசியப் போட்டிகளில் 4 தங்கம், தேசியப் போட்டிகளில் 3 தங்கம், 1 வெள்ளி, பிரிட்டிஷ் காமன்வெல்த் போட்டியில் 1 தங்கம் என அரை நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே பதக்க வேட்டையாடியவர் மில்கா சிங். ஆனால் 1960 ரோம் ஒலிம்பிக்கில், 0.1 விநாடியில் அவர் பதக்கத்தை இழந்தபோது ஒட்டுமொத்த இந்தியாவும் மில்கா சிங்மீது விமர்சன அம்புகளை வீசியெறிந்தது. ஆனாலும், தடகளம் வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டுமே சாதகமாக இருந்த சூழலில், அதை இந்தியாவின் கடைக்கோடி வரை ரசிக்கவைத்த பெருமை மில்காவையே சேரும்.


யார் இந்த மில்கா சிங்?


நாடு, பிரிவினைக்குத் தயாராகிக்கொண்டிருந்த சமயத்தில், நாலாபுறமும் வெடித்தது வன்முறை. அந்த சமயத்தில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கோவிந்த்பூரா கிராமத்தில் இந்துக்கள் உயிரை கையில் பிடித்தபடி இருக்க, கிராமத்துக்குள் புகுந்த கும்பல், கையில் கிடைத்தோரை எல்லாம் வெட்டி வீழ்த்தியது. அதிலும் குறிப்பாக, 15 சகோதர, சகோதரிகள்கொண்ட ஒரு வீட்டுக்குள் புகுந்த கும்பல் கையில் கிடைத்தவர்களை எல்லாம் வெட்டியது. பெற்றோர், இரு சகோதரிகள், ஒரு சகோதரன் என அனைவரும் ரத்தவெள்ளத்தில் பலியாகிக் கிடக்க, அந்தக் குடும்பமே சிதைந்துபோனது. எனினும், உயிர் பயத்தில் அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக இந்திய எல்லைக்குள் ஓடினான், ஒரு சிறுவன். பிற்காலத்தில் அவன் இந்தியாவுக்காகவே ஓடினான். அவன்தான் மில்கா சிங்.
சிறுவயதில் தன்னுடைய பெரும்பாலான நாட்களை ரத்தமும் சதையுமாகப் பார்த்த மில்கா சிங், இருப்பிடம் தேடி ஓடியது டெல்லிக்கு. அங்கு அகதியாய்த் திரிந்துகொண்டே, பசியைப் போக்க வேலை தேடி அலைந்தார். காலணிகளுக்கு பாலீஷ் போடுவதில் தொடங்கி ரப்பர் ஃபேக்டரியில் கைகளில் ரப்பர் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு வேலை பார்த்தார். ஆனாலும் வருமானம் போதவில்லை. பசியாறவில்லை.  
அந்த சமயத்தில் யாரோ ஒருவர் ராணுவத்தில் சேரச் சொல்ல, அதையே லட்சியமாகக் கொண்டார் மில்கா சிங். அதுவும், மூன்று வேளை உணவுக்காக. ஆனால், அந்த கனவும் இரண்டு முறை நிராசையாகிப் போனது. ஒல்லிய உருவம், வற்றிய உடலால் நிராகரிப்பட்டார் மில்கா. ஆனால், அவருடைய தொடர் முயற்சிக்கு பலன் கிட்டியது.

1952ல் ராணுவத்தில் சேர்ந்தார். அங்கு அவர் வயிறு நிரம்ப தொடங்கியதால், அவரது கால்கள் புழுதியில் பறக்கத் தொடங்கின. அந்த ஓட்டமே அவரை ஒலிம்பிக்கில் ஓடும் அளவுக்கு இழுத்துச் சென்றது.
முதல்முறையாக 1956ம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக்கில் ஓடினார். அந்த ஆமைவேக ஓட்டம் அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லவில்லை. ஆனால், அங்கு அவருடைய வெற்றிக்கான ஓட்டத்தை மற்றவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வைத்தது. அதனால்தான் 1958ம் ஆண்டு கார்டீஃப் காமன்வெல்த் போட்டியில் மில்காவால் தங்கம் வெல்ல முடிந்தது. என்றாலும், அடுத்த ஒலிம்பிக்கிலும் அவரால் தங்கத்தை வேட்டையாட முடியவில்லை. அதற்கு அதிர்ஷ்டமும் தேவையல்லவா?
அதேநேரத்தில், ரோம் ஒலிம்பிக் போட்டி முடிந்து இன்றுடன் 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒலிம்பிக் தடகளப் பதக்கம் தனக்குக் கைகூடவில்லை என்றாலும், என்றாவது ஒருநாள் ஓர் இந்தியன் ஒலிம்பிக்கில் தடகளத் தங்கத்தை வெல்வான் என மில்கா சிங் நம்புகிறார்.

அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக தனக்குத்தானே அவர் எழுதிக்கொண்ட கடிதத்தில்,  ‘நீ கண் மூடுவதற்குள் ஓர் இந்தியன் ஒலிம்பிக் தடகளத்தில் பதக்கம் வெல்வதைக் காண வேண்டும். லட்சியத்தில் விட்டுக்கொடுக்காதீர்கள்… இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டே இருங்கள். இந்த மில்காவால் சாதிக்க முடியாததை இளம் மில்கா சாதிப்பான். அதுவரை கண் மூடாதிருக்க, கடவுள் உனக்கு அருள்புரிய வேண்டும்’ என முடித்திருக்கிறார்.
இந்த கடிதம், நிச்சயம் மில்காவைப் போன்றே ஏதாவது ஒரு மூலையில் கனவுகளுடன் காத்திருக்கும் மற்ற மில்கா சிங்குகளை ஓடவைக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

Leave a Comment