• Home
  • யாக்கை
  • உருளைக் கிழங்கு பெண்களுக்கு விடுதலை

உருளைக் கிழங்கு பெண்களுக்கு விடுதலை

Image

விளையாட்டை மறக்காதீங்க.

ஆண் பிள்ளைகளுக்கு இணையாக பெண் குழந்தைகளும் இன்று சுதந்திரமாகத் திரிகின்றன. உடல் வளைய வேலை செய்வதில்லை. இதனால் 16 வயதிலேயே குண்டு உருளைக்கிழங்கு போன்று மாறிவருகிறாகள்.  

இத்தகைய பெண் குழந்தைகள், பின்னாட்களில் பல உடல்நலப் பாதிப்புகளால் அவஸ்தைப்படுகின்றனர். குறிப்பாக, அதிக எடையினால் பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு தொந்தரவுகள் வரலாம். திருமணம் ஆனபின் குழந்தை பிறப்பதிலும் பல சிக்கல்கள் தோன்றலாம். இவை வராமல் தடுக்க பெண்குழந்தைகள் சிறுவயது முதலே உடற்பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம் என்கின்றனர், மருத்துவர்கள்.

முன்பெல்லாம் நன்கு ஓடியாடிய பெண் குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்துடனும் நோய் எதிர்ப்பு சக்தியுடனும் இருந்தார்கள். ஆனால், தற்போதைய பெண் குழந்தைகளை அதுபோல் அதிகம் பார்க்க முடிவதில்லை. அப்படியும் சில பெண் குழந்தைகள் விளையாண்டாலும், அதைச் செய்யாதே… இதைச் செய்யாதே எனப் பயமுறுத்தி கட்டுக்குள் வளர்க்கின்றனர். இதனால், அவர்களுக்குள் இருக்கும் கொஞ்சநஞ்ச ஆர்வமும் அவர்களை விட்டுச் சென்றுவிடுகிறது. இது ஒருபுறமிருக்க… மறுபுறம் பள்ளிக்கூடங்களில்கூட விளையாட்டுப் பிரிவுகள் சம்பந்தப்பட்ட பாடவேளைகளில்கூட, அந்த நேரத்தை ஏதாவது ஒரு பாடப்பிரிவுக்கு எடுத்துச் சென்றுவிடுகின்றனர்.
இதனால், இன்றைய பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, பிஸிக்கல் ஆக்டிவிட்டீஸ் குறையும்போது இளம்குழந்தைகள் உளவியல்ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் போன்ற பிரச்சினைகளும் அவர்களுக்கு ஏற்படுகிறது. உண்மையைச் சொல்லப்போனால், முறையான பயிற்சிகள் அற்றுப்போகும்போது வளரும் பெண் குழந்தைகளுக்கு இன்ட்யூரன்ஸ் லெவல் குறைந்துபோகும். அதாவது, தூரத்தில் நிற்கும் பேருந்தைக்கூட ஓடிப்போய் பிடிக்க முடியாத சூழ்நிலை உருவாகும். ஆகையால், வளரும் பெண் குழந்தைகள் இன்ட்யூரன்ஸ் லெவலை அதிகரிக்க உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.


அதுபோல், சிறுமிகள் வயதுக்கு மீறி வளர்வது மட்டுமல்ல, வயதுக்கும், உயரத்துக்கும் பொருந்தாத அதிகமான உடற்பருமனுடன் இருப்பதும் கவலைக்குரிய விஷயம். சிறுவயதில் ஏற்படும் உடற்பருமனுக்குக் காரணம் அதிகமான கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடுவதும், போதுமான உடற்பயிற்சி இல்லாததும்தான். உடலுழைப்பு தேவையில்லாத வாழ்க்கை முறை, போஷாக்கு இல்லாத ‘ஜங்க்’ உணவுகள் இவர்களை கோச் பொட்டோடா (couch potato) ஆக்குகின்றன. இதனால் இவர்கள் பலவித நோய்களுக்கு ஆளாகி மிகக் குறைந்த வயதிலேயே இறக்கும் அபாயம் இருக்கிறது என்கின்றனர், ஆய்வாளர்கள்.
அதற்கேற்றபடி இவர்களுடைய பெற்றோர்கள் பெரிய பதவியில் இருப்பதும், குழந்தைகளுடன் விளையாட அவர்களுக்குப் போதுமான அவகாசம் கிடைக்காததும் இந்தப் போக்குக்கு காரணம் என்கிறார்கள். அது மட்டுமின்றி, குழந்தை வளர்ப்பு பற்றிய அவர்களது கண்ணோட்டம் வேறுவிதமாக இருப்பதுடன், அவர்களே சுறுசுறுப்பு குறைந்தவர்களாக இருப்பதும் காரணம் என்கின்றனர்.

ஆகையால், நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலளவில் சுறுசுறுப்பாக இருப்பது மிக முக்கியம். எனவே, பெண் குழந்தைகளை சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி செய்ய வைக்கவேண்டும். பல பெண் குழந்தைகளுக்கு ஓய்வு நேரத்தில் உடற்பயிற்சி செய்ய போதுமான உற்சாகம் இருப்பதில்லை. அதைக் கருத்தில்கொண்டு பள்ளிகளும் பெண் குழந்தைகளின் உடற்பயிற்சிக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.    

உடற்பயிற்சி செய்வது வகுப்பறையில் அவர்களது கவனத்தை அதிகரிக்கும். அவர்களது நடவடிக்கைகளும் மேம்பாடு அடையும். பெற்றோர்களும் பெண் குழந்தைகளுடன் விளையாட நேரம் ஒதுக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது அவர்களுக்கு உற்சாகத்தையும், ஈடுபாட்டையும் ஏற்படுத்தும்.
சிறுமிகளுக்கு 8 வயது ஆகும்போதே அவர்களது சுறுசுறுப்பு குறைந்து விடுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் போக்கை மாற்ற, சிறுமிகளை பெண் விளையாட்டு வீராங்கனைகளை தொலைக்காட்சியில் பார்க்கவும் அவர்களை இவர்களின் ‘மாதிரிப் பெண்மணி’களாகக்  கொள்ளவும் உற்சாகப்படுத்த வேண்டும். மேலும் பள்ளிகளிலும் உடலுழைப்பு அதிகமுள்ள விளையாட்டுக்களை அறிமுகப் படுத்த வேண்டும். 5 வயதிலிருந்து  18 வயது உள்ள பெண் குழந்தைகள் குறைந்தபட்சம் 1 மணி நேரம் மிதமான அல்லது தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. விளையாட்டு, சைக்கிளிங், நடனம், விறுவிறுப்பான நடை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அவர்கள் தினமும் செய்ய வேண்டும்.

தசைகளையும், எலும்புகளையும் சுறுசுறுப்பாக்கும் உடற்பயிற்சிகளான ஸ்கிப்பிங், ஜிம்னாஸ்டிக்ஸ், சிட்-அப்ஸ் முதலியவற்றை வாரத்திற்கு 3 முறை செய்ய வேண்டும். அதுபோல் வசதியுள்ளவர்கள் ஜிம் மையங்களுக்குச் சென்று உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். அங்கே அவர்கள் வயதுக்கேற்றபடி பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பிஸிக்கல் ஆக்டிவிட்டி இல்லாத பிள்ளைகளுக்கு அதற்கேற்றாற்போல் பயிற்சிகள், தொப்பையுடன் இருக்கும் குழந்தைகளுக்கு வயிற்றுத்தசை பயிற்சிகள் கற்றுத் தரப்படுகிறது.

மேலும், அவர்களுடைய வளர்ச்சிக்காக ஸ்கிப்பிங், ஜம்பிங் பயிற்சிகளும், உடலை வலுவாக்கும் பயிற்சிகளும், த்ரெட் மில், சைக்கிளிங் போன்ற ப்ளோர் கார்டியோ ஒர்க் அவுட் பயிற்சிகளும், யோகா, ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகளும் கற்றுக்கொடுக்கப்படுகிறது.

இதன்மூலம் அவர்களுக்கு எனர்ஜி லெவல் அதிகரிக்கிறது. அவர்களது உடலில் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகிறது. நல்ல ஃபிட்னஸ் கிடைப்பதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியும் கூடுகிறது. இதுபோன்ற பயிற்சிகளை இன்றைய பெண்கள் ஜிம்மில் மேற்கொள்ளும்போது, அது அவர்களுடைய உடல்நலத்தைப் பாதுகாப்பதுடன் மனநலத்திற்கும் சிறந்ததாக இருக்கிறது. மேலும் இன்றைய பெண் குழந்தைகள், அதிக கொழுப்புள்ள ஆகாரங்களையும்,‘ஜங்க்’ உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

பொதுவாக, பெண் குழந்தைகளை கேலி கிண்டல் செய்யாமல், உடல்நலம் குறித்த செய்திகளை விளக்கி, அதனால் வரும் தீமைகளை நிதானமாக எடுத்துச் சொல்லி உடற்பயிற்சி செய்ய ஊக்கம் கொடுக்க வேண்டும். முக்கியமாக, அதிக எடை உள்ளவர்கள்தான் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்றில்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அவசியம் என்ற உணர்வை பெண் குழந்தைகளிடம் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர், மருத்துவர்கள்.
பெண் குழந்தைகளைப் பேணிக்காப்போம்!

Leave a Comment