அன்பும் ஆயுதம் – டார்க் சைக்காலஜி

Image

 மோகன் பாலகிருஷ்ணா, மன நல ஆலோசகர்

உளவியல் வித்தியாசமானது. எது சரி என்று நினைக்கிறோமோ, அதுவே தவறாக இருக்கவும் வாய்ப்பு உண்டு. படித்துப் பாருங்கள்.

நம் எல்லோருக்குள்ளேயும் ஒரு சின்ன ஆசை இருக்கும். அதாவது, எப்போதும் மற்றவர்களை தன்னுடைய கண்காணிப்பிலும் கண்ட்ரோலிலும் வைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிற ஆசைதான் அது.   அப்படியான எண்ணம்  தவறு என்று  தோண்றும். ஆனால், அதிகார போதை கொண்டவர்கள், தான் மூத்தவன் என்கிற எண்ணம் கொண்டவர்கள், பணிபுரியும் இடங்களில் உயர் நிலையில் உள்ளவர்கள், சில ஆண்கள் எப்போதும் மற்றவர்களை தன்னுடைய கண்காணிப்பிலும் கண்ட்ரோலிலும் வைத்துக்கொண்டிருக்கவே ஆசைப்படுவார்கள். இதற்கு அவர்கள் அறிந்தோ, அறியாமலோ சில தந்திரங்களை மற்றவர்களிடத்தில் கையாள்வார்கள். இதற்குத்தான்  Dark Psychology என்று  பெயர்.

அதாவது எப்போதும் அன்பை பொழிவது போல பேசுவார்கள். சின்ன சின்ன உதவிகள் செய்வார்கள். பரிசுப் பொருட்களை வழங்குவார்கள். இதை எல்லாம் மற்றவர்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்துகொண்ட யுத்திகளாகும். வெளிப்படையாக கண்டறிய முடியாத வினோத குணாம்சம்தான் டார்க் சைக்காலஜி எனப்படுகிறது.

இந்த தந்திரங்கள் எல்லா மனிதர்களிடமும் உண்டு. வெவ்வேறு சதவீதத்தி இருக்கும். இந்த தந்திரத்தை கண்டரிந்துவிடுபவர்கள், ‘’என்ன எனக்கு சோப்பு போடுற?’’ என்று வெளிப்படையாகக் கேட்டுவிடுவார்கள். சில எஜமானர்கள் தனக்குக் கீழ் வேலைபார்ப்பவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளாமல், நைஸாகப் பேசி காரியத்தை சாதித்துக்கொள்வார்கள். இதுவும் டார்க் சைக்காலஜியின் அம்சம்தான். சில மனவிகள் கணவரிடம் ஓதும் தலையணை மந்திரம் கூட இதில் அடங்கும் என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்.

 மனிதர்களை கட்டுப்படுத்தும் 5 உளவியல் தந்திரங்களைப் பார்க்கலாம்.

சிலர் முதலில் ஒரு சின்ன உதவி கேட்பார்கள். அந்த உதவி கிடைத்ததும், அடுத்து கொஞ்சம் பெரிய உதவியை கேட்பார்கள்.   சின்ன உதவி செய்தவர்கள் பெரிய உதவி செய்ய  வாய்ப்பு இருப்பதை அறிந்துகொள்வது உளவியல் நுட்பம். இதுதான் டார்க் சைக்காலஜி,

யாரையாவது ஒரு செயலை செய்ய வைக்க நினைத்தால்,  அவர்களை  குற்ற  உணர்வுக்கு ஆழ்த்திப் பாருங்களேன். அதாவது, ‘எனக்காக இதைக் கூடவா செய்ய மாட்டே?” என்று  பேசுவதும் இதில் அடங்கும்.

சில நேரங்களில் நீங்கள் ரொம்பவும் கஷ்டப்படுவது மாதிரி,  உதவி தேவைப்படுவது மாதிரி  நடித்தால் மற்றவர்கள் உங்களுக்கு உதவ அதிக வாய்ப்பு இருக்கு. இது ஒரு வகையான அனுதாபத்தை தூண்டும் முறையிலான டார்க் சைக்காலஜி.

ஒருவரை நீங்கள் உங்க கண்ட்ரோலில் கொண்டுவர வேண்டும் என்று நினைத்தால் அவங்களுக்கு நிறைய அன்பையும், கவனத்தையும் கொடுத்துப் பாருங்கள். அவர்கள் உங்களிடம் ரொம்பவும் நெருக்கமாகி விட்டார்கள் என்றால், நீங்கள் சொல்வதை எல்லாம் அவர் கேட்க அதிக வாய்ப்பு இருக்கு. இதுவும் டார்க் சைக்காலஜியின் ஒரு கூறுதான்.

ஒரு விஷயம் ரொம்ப குறைவாக இருந்தால், அல்லது விரைவில் முடிந்துவிடும் என்றால், அதை அடைய எல்லோரும் ஆசைப்படுவார்கள். இது, வியாபாரத்தில் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு தந்திரம். ’இன்று மட்டும்தான் இந்த ஆஃபர்’ என்பதுகூட இந்த தந்திரத்தில்  சேரும்.

ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்…  இதெல்லாம் மற்றவர்களுடைய உணர்வுகளுடன் விளையாடுவது ஆகும். ஒருவேளை நீங்கள் நீங்கள் இந்த டார்க் சைக்காலஜியை பயன்படுத்த முயற்சித்தால்…அதற்கு முன் ஒரு நிமிஷம் யோசித்து செயல்படுங்கள். யாரையும் கஷ்டப்படுத்தாமல் நல்ல விதமாக நடந்துகொள்வதுதான்  நல்லது. 

டார்க் சைக்காலஜி எனும் இந்த உளவியல் தந்திரங்களை தெரிந்து வைத்துக்கொள்வதும் நல்லதுதான். ஆனால் அதை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்தினால் நல்லது.

நிஜமாகவே அன்பாக இருப்பது, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல், பரோபகாரம், இரக்கப்படுவது, நல்லது செய்வது, தானம் வழங்குவது, தர்மம் செய்வது, அறிவுரை செய்வது, ஆலோசனை வழங்குவது, இனிமையா உரையாடுவது, சொல் பேச்சு கேட்பது என்பதை எல்லாம் டார்க் சைக்காலஜி என்று நினைத்து குழம்பிவிடாதீர்கள். அப்படி தெளிவின்றி குழம்பினால்… மற்றவர்கள் ’நின்னா குத்தம் உட்காந்தா குத்தம்’னு சொல்ல ஆரம்பித்துவிடுவீர்கள்.  

Leave a Comment