டாக்டர் முத்துச்செல்லக்குமார்
***
மார்பகத்தில் தோன்றும் கட்டிகளைதான் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாக மக்கள் நினைக்கிறார்கள். இந்த கட்டிகளைத் தவிர்த்து வேறு சில அறிகுறிகளையும் நவீன மருத்துவம் சுட்டிக்காட்டுகிறது.
உலகளவில் அதிகமாக காணப்படும் புற்றுநோய்களில் ஒன்று, மார்பகப் புற்றுநோய். இது மார்பக திசுக்களில் உள்ள செல்கள் கட்டுப்பாடின்றி வளரும்போது ஏற்படுகிறது. பெண்களுக்கு அதிகமாக இருந்தாலும், ஆண்களுக்கும் ஏற்படலாம்.
மார்பகப் புற்றுநோய் வர காரணங்கள்: குடும்ப வரலாறு (அ) மரபணு மாற்றங்கள், வயது மூப்பு, ஹார்மோன்கள் மாறுபாடுகள், அதிகக் கொழுப்பு, மதுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை போன்ற வாழ்க்கை முறைகளாலும் வரலாம்.

இந்நோயைக் சுய பரிசோதனை, மாமோ கிராம் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனை மூலம் ஆரம்பத்தில் கண்டறிய முயற்சிக்கலாம். நோயை உறுதிசெய்ய பையோப்ஸி, அல்ட்ரா சவுண்ட், எம்.ஆர்.ஐ. போன்ற பரிசோதனைகள் அவசியம்.
மார்பகத்தில் கட்டி உருவாவவது மிகவும் அறியப்பட்ட அறிகுறியாகும். அதற்கு அப்பாற்பட்டு மார்பகத்தில் முழுமையாக அல்லது பகுதியளவில் வீக்கம் இருப்பது. சருமத்தில் குழி விழுதல், சுருக்கம் ஏற்படுதல் போன்றவை கட்டியைவிட வேறு முக்கிய அறிகுறிகள் ஆகும்.
அதேபோல் மார்பகத்தில் இருந்து பால் அல்லாத பிற நீர்த்திரவம் வெளியேறுவது, மார்பகத்தின் உள்ளே நிப்பு (nipple inversion) திரும்பிக் கொள்வது அல்லது வலி எற்படுவது, மார்பகச் சருமத்தில் சிவப்பு சிவப்பாக தடிப்பது, உலர்ந்து காணப்படுவது, தடிப்பு தடிப்பாக வருவது, கைமுட்டிக்குக் கீழே வீக்கம் அல்லது கட்டிகள் ஏற்படுவதும் மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளாக இன்றைய நவீன மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.
சிகிச்சை: மார்பகப் புற்றுநோயின் வகை மற்றும் அதன் கட்டத்தைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். லம்பெக்டோமி எனும் அறுவை சிகிச்சை. கீமோதெரபி எனும் கதிர்வீச்சு சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை மூலம் இந்த பாதிப்பை குணப்படுத்தலாம்.
சிகிச்சைக்குப் பின் காய்கறி, முழுதானியம், குறைந்த கொழுப்பு கொண்ட புரதச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மார்பகப் புற்று நோய் வந்துவிட்டால் அவ்வளவுதான் வாழ்க்கை என்று துயர் சுமக்க வேண்டாம். இன்றைய நாளில் மார்பகப் புற்றுநோயை நிச்சயமாக குணப்படுத்தலாம்.