நன்றாக வாழ்ந்து முடிந்த முதியவர்கள் மரணம் அடையும் தருணத்தில், அவரது குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து ஒப்பாரி பாடி, நடனம் ஆடி வழியனுப்புவது தமிழகத்தில் வழக்கமாக நடப்பதுதான்.
இதை யாரும் கலாச்சாரக் குற்றமாகப் பார்ப்பதில்லை. அதேநேரம், ரோபோ சங்கரின் மனைவி இறுதி ஊர்வலத்தில் ஆடிய நடனம் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இரண்டு பேரும் நடனக்குழுவில் சந்தித்துப் பழகி காதலித்து திருமணம் செய்தவர்கள். எனவே, தன்னுடைய கணவருக்குப் பிடித்த வகையில் நடனமாடி வழியனுப்பி வைக்கிறார் என்றே இதனை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் எந்த தவறும் இல்லை.
மரணத்தைக் கொண்டாடி வழியனுப்புதல் ஒரு மரபு. எல்லா ஊர்களிலும் இந்த வழக்கம் இப்போதும் இருக்கிறது. இன்பத்தையும் துன்பத்தையும் எந்த வடிவத்தில் கையாள்வது என்பதை யாரும் யாருக்கும் பாடம் நடத்த தேவையில்லை.
மனைவியின் நடனத்தின் மூலம் ரோபோ சங்கரின் மரணம் சர்ச்சையாவதை விட வேறு வகையில் இந்த மரணம் பேசப்பட வேண்டும்.
உடற்பயிற்சிகள் செய்து இரும்பு போன்று உடம்பை பராமரித்து வைத்திருந்த ரோபோ சங்கர், மதுவுக்கு அடிமையாகி உடம்பை உடலை எப்படி கெடுத்துக்கொண்டார் என்று பேசவேண்டும்.
தீவிரமான நோய் பாதிக்கும் நேரத்தில் மாற்று மருத்துவம் மீது நம்பிக்கை வைக்கும் அறியாமை குறித்து பேச வேண்டும்.
பிரபலங்களின் மரணத்தை வருமானமாக்கும் மீடியாக்களின் கோரப்பிடியில் இருந்து தப்புவது குறித்து பேச வேண்டும்.
பிறப்பைக் கொண்டாடுவது போன்று இறப்பையும் கொண்டாடுவதும் ஒரு கலை. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.