என்ன செய்தார் சைதை துரைசாமி – 418
டெங்கு நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் இல்லை என்றாலும், இயற்கை மருத்துவத்தில் தீர்வு இருக்கும் என்பதை மேயர் சைதை துரைசாமி நம்பினார்.
ஏனென்றால், ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே நம் நாட்டில் அலோபதி மருத்துவம் முக்கியத்துவம் பெற்றது. அதற்கு முன்பு வரை நம் மக்களுக்கு வந்த அனைத்து நோய்களையும் நமது சித்த மருத்துவர்களும், இயற்கை வைத்தியர்களுமே குணப்படுத்தினார்கள். அதனால் டெங்கு நோய்க்கும் நிச்சயம் சித்த வைத்தியத்தில் மருந்து இருக்கும் என்று நம்பினார்.
டெங்கு நோய்க்கு மருந்து குறித்து அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை சித்த வைத்தியர்களிடம் ஆலோசனை நடத்தினார். சித்த வைத்தியம் படித்த மருத்துவர்களும் சித்தவைத்தியர் வீரபாகுவும் மேயர் சைதை துரைசாமிக்கு மிகுந்த நம்பிக்கை கொடுத்தனர்.
சித்த வைத்தியத்தில் அனைத்து நோய்களுக்கும் மருந்துகள் உண்டு. டெங்கு நோய்க்கு ஒன்று அல்ல இரண்டு மருந்து இருக்கிறது என்று மேயர் சைதை துரைசாமிக்கு பெரும் நம்பிக்கை கொடுத்தார்கள். இதைக் கேட்ட பிறகே மேயர் சைதை துரைசாமிக்கு மகிழ்ச்சி வந்தது.
டெங்கு நோய் காரணமாக மக்களுக்கு இருக்கும் அச்சத்தைத் தீர்த்துவிட முடியும் என்பது மட்டுமின்றி, இதன் காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் சித்தவைத்தியப் புரட்சியே உருவாகும் என்று நம்பினார்.
அதேநேரம், டெங்குக்கு மருந்து இருப்பதை ஆங்கில மருத்துவர்களும், மக்களும் ஐயமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், அதை சாதித்துக் காட்ட வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு மேயர் சைதை துரைசாமிக்கு உருவானது.
- நாளை பார்க்கலாம்.