கால்பந்து புரட்சியாளன் மரடோனா

Image

மரடோனா என்றால் அர்ஜென்டினா

தங்கள் மனம்கவர்ந்த விளையாட்டு வீரர்களின் ஆட்டத்தைக் கண்டுகளிப்பதற்கு இன்று தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. இந்த டிஜிட்டல் யுகத்திற்கு முன்பு  ரேடியோ வாயிலாகவே கோடிக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர்,  அர்ஜென்டினாவின் கால்பந்து பிதாமகனான மரடோனா.

வேகமான, விவேகமான, நளினமான ஆட்டத்தால் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைகொண்ட மரடோனா, கடந்த 2020ல் உடல் நலக்குறைவு காரணமாக பியூனஸ் அயர்சில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து, அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ரத்த உறைவு அகற்றப்பட்டது. ஒருவாரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற அவர், வீடு திரும்பிய நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. அவரது திடீர் மறைவு கால்பந்து ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


யார் இந்த மரடோனா?


அர்ஜென்டினாவின் பியூனோ ஏர்ஸ் அருகே உள்ள வில்லா ஃபியோரிடா என்ற ஊரைச் சேர்ந்தவர் மரடோனா ஓர் ஏழைக் குடும்பத்தில் 4வது பிள்ளையாகப் பிறந்தார்.  3 வயதான மரடோனாவுக்கு உறவினர் ஒருவர் கால்பந்து ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். அந்த வயதில் பந்தை எட்டி உதைக்கத் தொடங்கிய மரடோனாவுக்கு, பின்னாட்களில் அதுவே தன் உலகமாக மாறிப்போனது. வறுமையிலும் தன் தாயின்மீது அளவற்ற பிரியம் கொண்டிருந்தார், மரடோனா.


அனைவருக்கும்  போதிய உணவு இருக்காதாம். இதை உணர்ந்து அவரது தாய்,  ‘தனக்கு வயிற்று வலி. ஆகையால், எனக்கு உணவு வேண்டாம். நீங்களே சாப்பிட்டு விடுங்கள்’ என்று தாம் உண்ணாமல் அனைவருக்கும் கொடுத்துவிடுவாராம். எங்களுக்கு வயிறு நிரம்பவே அவர் இப்படிச் செய்தார் என எனக்குத் தெரிந்தபிறகுதான் அவர்மீது இன்னும் அதிகம் பற்றுக்கொள்ள முடிந்தது’ என மரடோனா ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.


சிறுவயது முதல் கால்பந்தாட்டம் மீது வெறிகொண்டு களமாடத் தொடங்கிய மரடோனா, தனது எட்டாவது வயதில் அர்ஜென்டினா ஜூனியர்ஸ் கால்பந்தாட்ட குழுவில் இடம்பெற்று விளையாடினார். பின்னர், 15வது வயதில் அர்ஜென்டினாவின் ஜூனியர்ஸ் அணியிலும், 16வது வயதில் அர்ஜென்டினா தேசிய அணியிலும், 17வது வயதில் சீனியர் தேசிய அணியிலும் இடம்பிடித்தார்.  


கால்பந்து விளையாட்டு மீதிருந்த பற்றும் ஆர்வமும் மரடோனாவை தனிப்பெரும் வீரராக உலகிற்கு அடையாளம் காட்டியது. மைதானத்தில் பந்தை உருட்டிக்கொண்டு செல்வதில் மரடோனாவின் கால்கள் நாட்டியமாடும் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு மிக லாவகமாக விளையாண்டு கோல்களை ஈட்டிக்கொடுப்பார். அங்கிருந்த மிகப்பெரிய அரங்குகளில் மாபெரும் அரங்கேற்றம் நிகழ்த்தினார், அவர். ஒவ்வொரு டிரிபிளும் ரசிகர்களை பிரமிக்கவைத்தன. எதிரணி வீரர்களை நிலைகுலையவைத்தன.


ஒருமுறை ரியல் மாட்ரிட்டுக்கு எதிரான போட்டியில் கோல் கீப்பர் அகஸ்டின், டிஃபண்டர் ஜுவான் ஜோஸ் இருவரையும் பீட் செய்துவிட்டு, பந்தை கோல் அடிக்காமல் ஓர் இடத்தில் நிறுத்திவைத்துவிட்டார், மரடோனா. இதைப் பார்த்து எதிரணி ரசிகர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். எதிரணி ரசிகர்களிடம் இருந்து இப்படி பாராட்டு பெற்ற வீரர்களில் மரடோனாவும் ஒருவர்.


கால்பந்து விளையாடப்படாத இடங்களில்கூட தன் கால்தடத்தைப் பதித்தார், மரடோனா. குறிப்பிட்ட நாடு என்றில்லாமல் உலகம் முழுவதும் மரடோனாவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை கேரளா மற்றும் நாகலாந்தில் மரடோனா பேன்ஸ் கிளப்களே உள்ளன. 1986ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியின் கேப்டனாக இருந்த மரடோனா, உலக கால்பந்து அரங்கில் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு நிகராகப் பார்க்கப்பட்டவர். 4 உலகக் கோப்பை போட்டிகளில் (1982, 1986, 1990, 1994) பங்கேற்றவரான மரடோனா, அர்ஜென்டினா அணிக்காக 91 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34 கோல்கள் அடித்துள்ளார்.


ஒட்டுமொத்தமாக மரடோனா 300 கோல்களுக்கும் மேல் அடித்திருந்தாலும், 1986 உலகக் கோப்பை காலிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக, நான்கு நிமிட இடைவெளியில் அடித்த அந்த இரண்டு கோல்கள்தான் காலத்துக்கும் பேசப்படுகிறது.  ‘முதல் கோல், கடவுளின் கையின் உதவியால் அடிக்கப்பட்டது’ என மரடோனா விளக்கமளித்தார். இரண்டாவது கோல்,  ‘இங்கிலாந்தின் பாதி வீரர்களை டிரிபிள் செய்து, அடித்த கோல். அது இந்த நூற்றாண்டின் சிறந்த கோல்’ எனப் பாராட்டு பெற்றது.


மேலும், பார்சிலோனா, நபோலி, செவில்லா உள்ளிட்ட கிளப் அணிகளுக்காகக் களம் கண்டிருந்த அவர் மொத்தம் 491 கிளப் போட்டிகளில் ஆடி 259 கோல்கள் அடித்திருந்தார். கால்பந்து விளையாட்டு மூலம் எப்படிச் சிகரத்தை அடைந்தாரோ, அதேபோல் அந்த விளையாட்டுமூலம் இவர் சிக்காத சர்ச்சைகளே இருந்திருக்க முடியாது. மனநல பிரச்சனை, ஊக்கமருந்து பயன்பாடு, செய்தியாளரை நோக்கிச் சுட்டது என இவரைச் சுற்றி ஏராளமான சர்ச்சைகளும் சுழன்றடித்தன.

மரடோனா ஊக்கமருந்து பயன்படுத்துவர் என்ற குற்றச்சாட்டு உண்டு. அதை அவர் மறுக்கவில்லை.  ‘நான் ஊக்கமருந்து பயன்படுத்தினேன், பயன்படுத்துகிறேன், பயன்படுத்துவேன். ஊக்கமருந்து பயன்படுத்துபவன் ஒவ்வொரு நாளும் வாழ்வதற்குப் போராடிக்கொண்டிருக்கிறான்’ என வெளிப்படையாகவே கருத்து சொன்னார்.
1997ம் ஆண்டு விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற மரடோனா, கொக்கைன் தவறாக பயன்படுத்தியதன் விளைவாக மோசமான உடல்நிலை மற்றும் அதிகப்படியான உடல் எடையினால் பாதிக்கப்பட்டார். இருப்பினும், அவை அனைத்தையும் கடந்து பல இளைய தலைமுறையினருக்கு கால்பந்தாட்டத்தின் சூட்சுமங்களை இறுதிக்காலம் வரை கற்றுக்கொடுத்து வந்தார்.

அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணிக்கும் வெகுகாலம் பயிற்சியாளராக இருந்துள்ளார். மரடோனா ஓய்வுபெற்றபின் அவர்  அணிந்து விளையாடிய 10ம் நம்பர் எண்ணை, வேறு யாரும் அணிந்து விளையாட அனுமதிக்கக் கூடாது என ஃபிஃபாவிடம் (சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு), அர்ஜென்டினா கால்பந்து அமைப்பு வேண்டுகோள் விடுத்தது. ஆனால், ஃபிஃபா அதை ஏற்கவில்லை.


2000ம் ஆண்டில், மரடோனாவை நூற்றாண்டின் கால்பந்து வீரராக ஃபிஃபாவால் அங்கீகரித்தது. அதேநேரத்தில், 2010ம் ஆண்டு ஃபிஃபாவில் ஊழல் நேர்வதாகப் புகார் எழுந்தபோது,  ‘ஃபிஃபா இயக்குநர்கள் என்னைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு, கால்பந்தை எப்படி நடத்துவது எனச் சிந்திக்க வேண்டும். ஏனெனில், என்னை உங்களால் கட்டுப்படுத்த முடியாது’ என்றார் காட்டமாக. மேலும், அந்த ஆண்டு உலகக் கோப்பையில் அர்ஜென்டினா தோற்று, வெளியேறியபின் மெஸ்ஸி மீது விமர்சனம் எழுந்தது. அப்போது மரடோனா, ‘மெஸ்ஸி உலகக் கோப்பையில் ஜொலிக்கவில்லை எனச் சொல்பவர்கள் முட்டாள்கள்’ என்றார்.


அர்ஜென்டினா பயிற்சியாளராக மரடோனா சோபிக்க தவறியபோது மற்றொரு கால்பந்து வீரரான பிலே, ‘இது மரடோனா தவறு இல்லை. அவரை அந்த இடத்தில் வைத்தவர்களின் தவறு’ என்றார். இதற்கு மரடோனா, ‘பிலேவை மியூஸியத்தில் அமர்த்திவைக்க வேண்டும்’ எனப் பதிலடி கொடுத்தார். அதுபோல், ஜெர்மனியில் 2006ல் நடந்த உலகக் கோப்பை தொடக்கவிழாவில் பங்கேற்க மறுத்துவிட்டார், மரடோனா. அதற்கு அவர், ‘பிலே அங்கும் இங்கும் நடந்துகொண்டிருப்பார். அதைப் பார்க்க நான் இங்கு வரவில்லை’ எனச் சொன்னார்.


 ‘மரடோனா ஒரு கால்பந்து வீரராக இல்லையெனில், ஒரு புரட்சியாளராக உருவெடுத்திருப்பார்’ என்றார், திரைப்பட இயக்குநர் கஸ்டுரிகா. ஆம், உண்மைதான், அவர் புரட்சியாளர் சே குவாரா மீதிருந்த பிரியத்தின் காரணமாகக் கையில் அவரையும், கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவையும் இடது காலிலும் பச்சை குத்தியிருந்ததுடன், புரட்சியாளராகவும் வாழ்ந்தார். கொடை வள்ளலாகவும் திகழ்ந்தார்.  இப்படி கால்பந்து களத்தில் மட்டுமல்ல… வாழ்விலும் பல புதுமைகளையும், புரட்சிகளையும் புகுத்திவிட்டுச் சென்ற ஜாம்பவானைத்தான் இந்த உலகம் இன்று இழந்துநிற்கிறது.

இவரது மறைவு குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ‘எனது ஹீரோ மறைந்துவிட்டார்’ என்றார், ஒற்றைவரியில். மரடோனாவின் எதிரியாகக் கருதப்பட்ட பீலே,  ‘கால்பந்து மேதையை உலகம் இழந்துவிட்டது. ஒருநாள் வானில் நாங்கள் இருவரும் ஒன்றாகக் கால்பந்து விளையாடுவோம்’ என்று உருகியுள்ளார். எதிரியைக்கூட உருக்கியிருக்கும் மரடோனாவின் மரணம், எல்லோர் இதயத்தையும் ரணமாக்கியுள்ளது. உயிரை வெல்லும் எந்த மரணங்களும் அதன் நினைவுகளையும், நிகழ்த்திய சுவடுகளையும் வெல்ல முடியாது. ஆம், மரடோனாவின் மரணமும் அதில் தோற்றுவிடும்.



காவலரை கட்டியணைத்தார்!


இந்திய சுற்றுப்பயணத்தின்போது விடுதி ஒன்றில் தங்கியிருந்த மரடோனா, வாசலில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலரின் சீருடையில் இருந்த பெயரைப் பார்த்து, அவரை இறுகக் கட்டியணைத்துள்ளார். அவரின் செய்கையால், காவலர் குழம்பிப்போக.. பிறகு காரணத்தைச் சொல்லியுள்ளார். ‘புரட்சியாளர் சே குவேராவைப்போல விடுதலைப் போராளி பிரபாகரனையும் எனக்கு மிகவும் பிடிக்கும். பிரபாகரன் ஓர் ஒப்பற்ற ஒரு புரட்சியாளர். அவர் பெயரை நீங்கள் வைத்து இருப்பதால்தான் உற்சாகத்தில் உங்களைக் கட்டி அணைத்தேன்’ என்றாராம்.



மற்ற வீரர்களைத் தெரியாதவர்கள்!


கேரி லினேகர் – சர்வதேச அளவில் மரடோனாவைவிட 11 போட்டிகள் குறைவாக விளையாடி 14 கோல்கள் அதிகம் அடித்தவர். மைக்கேல் பிளாடினி – மூன்று பாலன் டி ஓர் வென்றவர். கார்ல் ஹெய்ன்ஸ் ரம்மிஞ்சி – இரண்டு பாலன் டி ஓர் வென்றவர். மரடோனா பெயரைச் சொல்லும் நம் ஆட்களில் 90 சதவிகிதம் பேருக்கு இந்தப் பெயர்கள் தெரியாது. அவர்களும் அதே 1986 உலகக் கோப்பையில் விளையாடியவர்கள்தான்.



ஃபெளலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்!


உலகக் கோப்பையில் ஃபெளலால் அதிகம் பாதிக்கப்பட்ட வீரர் மரடோனாதான். 1986 உலகக் கோப்பையில் 53 முறை எதிரணி வீரர்கள் இவரை ஃபெளல் செய்தனர். அதிகபட்சமாக இத்தாலி அணி ஒரே போட்டியில் மரடோனாவை 23 முறை ஃபெளல் செய்தது.
—————-

மரடோனா என்றால் அர்ஜென்டினா!


மரடோனாவைப் பற்றிய புத்தகத்தில் உளவியல் நிபுணர் கஸ்டவோ பெர்னஸ்டீன், ‘எல்லாவற்றுக்கும் அர்ஜென்டின மக்கள் மரடோனாவைத்தான் அடையாளமாகச் சொல்கின்றனர். அவரைத் தவிர வேறு எதுவும் இந்தளவு பெருமை சேர்க்கவில்லை. அர்ஜென்டினா என்றால் மரடோனா; மரடோனா என்றால் அர்ஜென்டினா’ எனப் புகழ்ந்திருந்தார்.
——————

மரடோனாவின் சாதனை!
கால்பந்து வரலாற்றில், டிரான்ஸ்ஃபர் மார்க்கெட்டில் இரண்டு முறை புதிய சாதனை படைத்தவர் மரடோனா மட்டுமே. அதுபோல் மரடோனா, மெஸ்ஸி இருவர் மட்டுமே. ஃபிஃபா யூ-20 உலகக் கோப்பை, ஃபிஃபா உலகக் கோப்பை இரண்டிலும் கோல்டன் பால் விருது வென்றுள்ளனர்.
—————–

தன் சிலையை வைத்த மரடோனா!
கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மரடோனாவிற்கு சிலை திறக்கப்பட்டது. அவருடைய சிலையை, அவரே திறந்துவைத்தார். 1986 அர்ஜென்டினா அணிக்காக அவர் கால்பந்து உலகக் கோப்பை வாங்கிக் கொடுத்த புகைப்படம் சிலையாகச் செய்யப்பட்டது. இந்த சிலை 12 அடி உடையது. அதை பார்த்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டார் மரடோனா.

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்