விளையாட்டு அறிவோம்!
விலங்குகளை போக்குவரத்துக்கு பயன்படும் வகையில் வளர்த்த காலம்போய் இன்று, போட்டி வைத்து பணம் சம்பாதிக்கும் காலம் பிறந்துவிட்டது. மனிதன் விலங்குகளை வைத்து நடத்தும் பந்தயங்களில் குதிரைப் பந்தயமும் ஒன்று.
ஒருகாலத்தில் குதிரைப் பந்தயம் என்பது மிகவும் புகழ்பெற்ற ஒரு சூதாட்டமாக இருந்தது. சென்னையில் உள்ள கிண்டி, குதிரைப் பந்தயங்களுக்குப் பெயர்போன இடமாக இருந்துவந்துள்ளது. இங்கு, தனிப்பட்ட குதிரைகளின் ஓட்டப்பந்தயத் திறனை வைத்து போட்டி நடத்தப்படும். அதை இயக்குவதற்கு என்று தனியாக ஆட்கள் இருப்பர்.
அதேபோன்று, குதிரையை வைத்து வண்டிப் பந்தயமும் நடத்தப்படுகிறது. இது, குதிரை வண்டிப் பந்தயம் அல்லது ரேக்ளா வண்டிப் பந்தயம் என அழைக்கப்படுகிறது. இவற்றுக்காகப் பராமரித்து வளர்க்கப்படும் குதிரைகளும் பந்தயக்குதிரைகள் என்றே அறியப்படுகின்றன. அரசர்கள் காலத்தில் குதிரைப் பந்தயங்கள் நடைபெற்றதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
ராஜசூய யாகத்தின்போது குதிரைப் பந்தயம், ரதம் ஓட்டும் பந்தயம் நடைபெற்றதாகக் குறிப்புகள் உணர்த்துகின்றன. சோழன் ராஜசூய யாகம் செய்ததை புறநாநூறு பாடுகிறது. இன்றும் சேலம், ஊட்டி, கரூர், திருச்சி, ஈரோடு ஆகிய ஊர்களில் குதிரைப் பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்தப் பந்தயத்துக்கான போட்டி தூரம் ஒன்றரை மைல் முதல் 2 மைல் வரை ஆகும். இந்தியா தவிர, உலகம் முழுவதிலும் குதிரைப் பந்தயங்கள் நடக்கின்றன.
இந்த போட்டிக்கான வண்டிகள் கனம் இல்லாத லேசான உலோகத்தால் கட்டமைக்கப்படுகின்றன. குதிரையை வண்டியுடன் பிணைக்கும் பெல்ட் மற்றும் தோல் வார் போன்றவை மாட்டுத்தோலால் குதிரையை உறுத்தாதவிதமாகச் செய்யப்படுகின்றன. குதிரையின் வலுவான கால்கள் சிறந்த உறுதியுடையவையாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன. சாதாரணமாகவே குதிரையின் உடல் அமைப்பு வேகமாக ஓடுவதற்கேற்றவாறு அமைந்துள்ளதும் கூடுதல் நன்மையாகும். இவற்றின் குளம்புகள் ஓடுவதற்கு இவற்றுக்கு உதவுகின்றன.
இப்பந்தயம், குதிரைகளின் உயரத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. குதிரைகள் நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொள்கின்றன. இவற்றுக்கு மருத்துவச் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. தனி மருத்துவரும் இதற்காக இருக்கிறார். மின் அதிர்ச்சி போன்ற பிரச்சனைகள் திடீரென்று குதிரைக்கு ஏற்படாதவண்ணம் மருத்துவரின் கண்காணிப்பு அமைக்கப்படுகிறது.
போட்டியில் கலந்துகொள்ளும் குதிரைகளுக்கு தினமும் காலையில் ஒரு மணிநேரம் நடைப்பயிற்சி, அரை மணிநேரம் நீரில் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின் கேரட், பீட்ரூட், கொள்ளு, வெள்ளை முள்ளங்கி ஆகியவை சேர்க்கப்பட்ட காலை உணவு வழங்கப்படுகிறது. தவிர, வாரம் மூன்று நாள்களுக்கு 15 கி.மீட்டர் ஓட்டப்பயிற்சி அளிக்கப்படுகிறது. மதிய உணவாக பாதாம், பிஸ்தா, திராட்சை, மூலிகைகள் கலந்த மருந்து உருண்டை கொடுக்கப்படுகிறது.
சிறு வயதில் சாதாரண குதிரையாக வாங்கப்பட்டு பந்தயக் குதிரையாக அறிவியல் முறைப்படி பழக்கி பயிற்சிகள் கொடுத்து பந்தயத்தில் வெற்றி காண்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள் சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இங்குள்ள குதிரைகளுக்குத்தான் அவர்கள் மேற்கண்ட பயிற்சிகளையும், உணவுகளையும் வழங்கி கூடுதல் விலைக்கு விற்கிறார்கள்.
இதில் பங்குபெறும் பந்தயக் குதிரைகளுக்கு, கோடிக்கணக்கில் பணம் பரிசாகக் கிடைக்கிறது.
பொதுவாக, துருக்கிய குதிரைகள் உடல் வலுவானவை. அரேபியக் குதிரைகள் உடல் நேர்த்தியான வடிவமைப்புப் பெற்றவை. இங்கிலாந்து குதிரைகள் வேகமாக ஓடக்கூடியவை. இந்த மூன்று இன குதிரைகளின் மரபணுக்களையும் சிக்கலான முறையில் கலப்பு செய்து, தருப்ரெட் என்ற கலப்பின குதிரையை உருவாக்குகிறார்கள். மரபியல்ரீதியாக உருவாக்கப்படும் இந்தக் கலப்பினக் குதிரைதான் இன்று, உலக குதிரைப் பந்தய மைதானங்களில் அதிகமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
ஆண்டின் எந்த மாதத்தில் இந்த குதிரைகள் பிறந்தாலும் ஜனவரி முதல்தேதி பிறந்ததாகவே இவற்றுக்கு பிறப்புச் சான்று எழுதப்படுகிறது. இரண்டு ஜனவரிகள் கடந்த பின்னர் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. ஏழு ஜனவரிகளுக்குப் பிறகு விருப்ப ஓய்வு கொடுக்கப்படுகிறது. பொதுவாக, இந்தக் குதிரைகள் ஐந்து ஆண்டுகள் பந்தயத்தில் ஓடும். சிறப்பான சாதனைகள் செய்தால் அந்தக் குதிரைக்கு ராஜமரியாதை அளிக்கப்படும். பத்தாண்டுகள் ஓடியபின் இவற்றுக்கு அரசபோகமான வாழ்வு வழங்கப்படுகிறது. காயம், நோய் ஏதாவது ஏற்பட்டு உயிருக்குப் போராடினால், அனுமதி பெற்று கருணைக்கொலையும் மனிதனால் நடத்தப்படுவதும் உண்டு.
பந்தயங்களில் வெற்றி பெறவேண்டும் என்ற வேட்கையுடன் காற்றைக் கிழித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் இந்தக் குதிரைகள் பறந்து பாய்ந்து ஓடும்போது பார்ப்பவரை அந்தக் காட்சி மெய்சிலிர்க்கவைக்கும்.