• Home
  • ஞானகுரு
  • வயதான நபர்களிடம் ஆசி வாங்குவதால் என்ன நன்மை?

வயதான நபர்களிடம் ஆசி வாங்குவதால் என்ன நன்மை?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : நீண்ட நாட்கள் வாழும் முதியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவது நன்மை தருமா..?

  • எஸ்.நல்லதம்பி, உறையூர்.

ஞானகுரு :

நீண்ட காலம் வாழ்வதால் மட்டும் யாருடைய ஆசிர்வாதமும் பலன் கொடுக்காது.  பலன் கிடைக்கும் என்றால் நூறாண்டுகள் தாண்டியும் உயிர் வாழும் மரங்களிடமும், ஆமையுடமும் தான் ஆசிர்வாதம் வாங்கவேண்டும். உண்மையில் செத்துப்போ என்று சொல்வதால் யாரும் செத்துவிட மாட்டார்கள். ஆயுஷ்மான் பவ என்பதால் யாரும் நீண்ட காலம் வாழ்வதும் இல்லை. ஒரு வகையில் நூறு ஆண்டுகள் வாழ்வது, வரமல்ல, தண்டனை. ஏனென்றால், அடுத்தவரை அண்டியே வாழவேண்டிய சூழல் வந்துவிடும்.

கேள்வி : ஊழல் செய்பவர்கள், கொலை செய்பவர்கள் என எல்லோரும் தான் செய்வதை சரி என்று நினைக்கிறார்களே, அது எப்படி..? 

  • ஏ.தேவிப்பிரியா, சூலூர்.

ஞானகுரு :

ஒவ்வொரு மனிதரும் அவருடைய செயலுக்கு வழக்கறிஞராக இருக்கிறார்கள். அதாவது, தன்னுடைய தேவைக்காக எது செய்தாலும் அதை நியாயம் என்று நிரூபிக்க காரணங்கள் வைத்திருக்கிறார்கள். அதனாலே ஆணவக்கொலைகாரர்களும், ஊழல்வாதிகளும் சிறைக்குச் செல்லும்போது கொஞ்சமும் கலங்குவதில்லை. இதே செயலை மற்றவர் செய்யும்போது, அதை குற்றம் என்று சொல்லும் நீதிபதிகளாக மாறிவிடுகிறார்கள். பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு தீமை நடந்துவிட்டது என்றால், கடவுள் தண்டனை, தனக்கு தீமை நேரும்போது கடவுள் தரும் சோதனை. இந்த சுயநலமே மனிதரின் நியாயம்.

Leave a Comment