ஞானகுரு பதில்கள்
கேள்வி : குழந்தை இல்லை என்பது கவலையாக இருக்கிறது.. இது சாபமா..?
- என்.ராமலட்சுமி, அரவக்குறிச்சி.
ஞானகுரு :
மருத்துவ வளர்ச்சி உச்சம் அடைந்திருக்கும் நேரத்தில் குழந்தை இல்லை என்று கவலைப்படுவதற்கு அவசியமே இல்லை. உடலில் எப்படிப்பட்ட குறை இருந்தாலும் அதை சரி செய்து, சீர்செய்து அல்லது செயற்கை முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். மருத்துவத்தில் முடியாது என்றால் தத்து எடுத்துக்கொள்ள முடியும். இதற்கும் விருப்பம் இல்லை என்றால் குழந்தை இல்லை என்ற சோகத்தை விட மிகப்பெரும் சோகத்தில் வாழும் சில தாய்மார்களைப் பாருங்கள். அதாவது, மனவளர்ச்சி குன்றிய குழந்தையைப் பெற்ற தாயின் வேதனையை உற்றுப் பாருங்கள். அது, மிகமிகக் கொடுமையானது. அந்தக் குழந்தையை நல்லபடியாக வளர்க்கவும் முடியாமல் கைவிடவும் முடியாமல் வாழ்நாள் முழுக்க அவஸ்தைப்படும் பெண்கள் எக்கச்சக்கம். இவர்களை ஒப்பிடுகையில் குழந்தை இல்லாதது சாபமல்ல, வரம் என்று புரியும்.
கேள்வி : எங்களுக்கு ஒரே மகள். இவள் நன்மைக்காக இன்னொரு பிள்ளை பெறாமல் அன்பு கொட்டி வளர்த்தாலும் அவள் எங்களை மதிப்பதே இல்லை. அவள் நடவடிக்கையால் அழுகை வருகிறது… என்ன செய்வது..?
- ஜி.தெய்வலதா, தாராபுரம்
ஞானகுரு :
நீங்களே பிள்ளை பெற்றீர்கள், அவர் உங்களை பெற்றெடுக்குமாறு கெஞ்சவில்லை. இன்னொரு பிள்ளை வேண்டாம் என்பதும் உங்கள் முடிவு. உங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்யுங்கள் என்றும் அவர் கேட்கவில்லை. எனவே, இந்த காரணங்களுக்காக அவர் உங்களை மதிக்க வேண்டும், பாசத்தைப் பொழிய வேண்டும் என்று எதிர்பாப்பது நியாயம் இல்லை. நீங்கள் பெற்றெடுத்த கடமைக்கு அவரை நன்கு படிக்க வையுங்கள், நேர்மையுடனும் நிம்மதியுடனும் வாழ்வதற்கு வழி காட்டுங்கள். பருவ வயது வந்ததும் அவரது வாழ்க்கைப் பாதையை அவரே முடிவெடுக்கட்டும். அந்த முடிவுக்கு உதவி செய்யுங்கள். ஜெயித்தால் பாராட்டுங்கள், தோற்றால் ஊக்கம் கொடுங்கள். அதுவே, ஒரு நல்ல பெற்றோருக்கு அழகு. பிள்ளையிடம் பாசத்தை பிச்சை கேட்காதீர்கள். அவமானமே கிடைக்கும். இனியிருக்கும் வாழ்க்கையை உங்களுக்காக வாழுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சியானதை செய்யுங்கள்.