• Home
  • பணம்
  • சொகுசு வாழ்வுக்குத்தானே ஆசை..?

சொகுசு வாழ்வுக்குத்தானே ஆசை..?

Image

பணமே மந்திரம்

இருபது ரூபாய் கீரைக்கட்டை பதினைந்து ரூபாய்க்கு பேரம் பேசுகிறீர்கள். அந்த நேரத்தில் ஒருவர் கீரைக்கட்டுக்கு பேரம் பேசாமல் பணத்தைக் கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்.

அந்த தருணத்தில் உங்கள் வாழ்க்கையைப் என்ன நினைப்பீர்கள்..?

நம்மிடமும் நிறைய பணம் இருந்தால் இப்படி பேரம் பேசாமல் எல்லாவற்றையும் வாங்கலாம் என்று நினைப்பீர்களா..? உங்கள் வாழ்க்கை அவரை விட மோசமாக இருக்கிறது என்று அவமானப்படுவீர்களா..?

பக்கத்து பங்களாவில் பெரும் கோடீஸ்வரர் வாழ்கிறார். உயர் ரக கார், பார்ட்டி என்று கொண்டாட்டமாக வாழ்கிறார். திடீரென ஒரு நாள் அந்த குடும்பத்தில் அத்தனை விஷம் குடித்து மரணம் அடைந்துவிட்டதை அறிகிறீர்கள். காரணம் கடன் தொல்லை.

இந்த தருணத்தில் உங்கள் வாழ்க்கையைப் பற்றி என்ன நினைப்பீர்கள்..?

ஆடம்பரத்துக்குக் கடன் வாங்கியதால் பக்கத்து வீட்டுக்காரர் செத்துப் போனார். நல்லவேளை நாம் அதிகம் கடன் வாங்கவில்லை என்று பெருமூச்சு விடுவீர்களா அல்லது பணத்தை நன்றாக அனுபவித்துவிட்டு செத்துவிட்டார் என்று நினைப்பீர்களா..?

கடன் வாங்கியாவது ஆடம்பர வாழ்வு வாழ வேண்டும் என்பதே இன்று நிறைய பேருக்கு ஆசையாக இருக்கிறது. ஆடம்பர வாழ்க்கை அமையாத ஒவ்வொரு நபரும் தங்களை ஏழையாக நினைக்கிறார்கள்.

இத்தனைக்கும் பெரும்பாலோர் வீட்டில் கிட்டத்தட்ட அனைத்து வீட்டு வசதி சாதனங்களும் இருக்கின்றன. கடன் வாங்கி வீடு வாங்குகிறார்கள். கடன் வாங்கி கார் வாங்குகிறார்கள். டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என்று கடன் வாங்கியாவது வாங்குகிறார்கள். எத்தனை இருந்தாலும், இன்னமும் தங்களிடம் நிறைவாக எதுவும் இல்லை என்றே நினைக்கிறார்கள்.

அதாவது, தங்களிடம் போதிய பணம் இல்லை என்று நினைக்கிறார்கள். நிறைய பணமிருந்தால் பிடிக்காத வேலையைச் செய்ய வேண்டாம், பிடிக்காதவர்களுடன் பழக வேண்டாம், வாழ்க்கையை நம் இஷ்டத்துக்கு அனுபவிக்கலாம் என்றே நினைக்கிறார்கள்.

அதாவது ஒரு கார் வைத்திருப்பவர், அதை விட பெரிய காருக்கு ஆசைப்படுகிறார். வீடு வைத்திருப்பவர், அதைவிட பெரிய வீட்டுக்கு ஆசைப்படுகிறார்கள். நல்ல வேலையில் இருப்பவர், அதைவிட நல்ல வேலைக்கு ஏங்குகிறார்.

எத்தனை சம்பாதித்தாலும் மூன்று வேளை மட்டுமே உணவு உண்ண முடியும். ஒரு காரில் மட்டுமே போக முடியும். ஒரு படுக்கையில் மட்டுமே படுக்க முடியும். ஆனாலும், இதைவிட பெரிதாக, அதைவிட பெரிதாக என்று ஆசைப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

அதனால் யாராவது ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு வாட்ச் வாங்கினேன். புதிய செல்போன் 2 லட்சம் ரூபாய் என்று காட்டும்போது, அவர்களுக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கையை அலுத்துக்கொள்கிறார்கள். அவர்களை ஒப்பிடுகையில் மிகவும் கேவலமான ஒரு வாழ்க்கை வாழ்வதாக நினைக்கிறார்கள். தங்களிடம் எது இல்லையோ, அதையே உயர்வாக நினைக்கிறார்கள். அதோடு, அதை அடையவில்லை என்றால் வாழ்க்கை முழுமையடையாது என்று நினைக்கிறார்கள். எனவே, திருப்தி இல்லாத ஒரு வாழ்க்கையை அலுத்துக்கொண்டு வாழ்கிறார்கள்.

ஒரு கோடி மதிப்பிலான கார், பிரைவேட் ஜெட், கடற்கரை வீடு, கெஸ்ட் ஹவுஸ், வெளிநாடு சுற்றுலா அனுபவிக்கவில்லை என்றால், இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்றே நினைக்கிறார்கள். எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால், யாராவது கை கொடுத்தால் இவற்றை எல்லாம் அடைந்துவிடலாம் என்றும் நினைக்கிறார்கள்.

இதற்குத் தேவை பணம் என்று நினைக்கிறார்கள்.

உண்மை என்ன தெரியுமா..? இவர்களுக்கு ஒருபோதும் மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கவே செய்யாது. ஒரு பிரைவேட் ஜெட் வாங்கும் ஆசை நிறைவேறியதும், அடுத்ததாக அதை விட பெரிய சொகுசு விமானம் வாங்கும் ஆசை வரும். எனவே, ஆசைகளுக்கு முடிவுகள் கிடையாது.

ஆகவே, என்ன இருக்கிறதோ அதை அனுபவியுங்கள். உங்கள் வீட்டு ரோஜா அழகாகப் பூக்கும் போது, அடுத்தவீட்டு மல்லிகையைப் பார்த்து ஏங்குவதில் என்ன கிடைத்துவிடப் போகிறது.

எனவே, கனவை நிறைவேற்றுவதற்கு கடன் வாங்காதீர்கள். அது சுதந்திரத்திற்கு கொடுக்கப்படும் விலை.  

Leave a Comment