சொர்க்கத்தில் கல்யாணம் – அத்தியாயம்: 2
டாக்டர் பதூர் மொய்தீன்
நமது பெண்கள் திருமணம் செய்துகொள்வதன் மூலமாக, ‘கணவனே கண்கண்ட தெய்வம்’, புல்லானாலும் புருஷன்’ என்று ஒருவனை நினைக்கிறாள். ஏன், அப்படி அவள் நினைக்கிறாள் என்பதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. ஒரு தேசத்தில் சட்டமும் சமூகமும் அவளுக்கு ஆதரவாக இருக்கிறது.
ஆனாலும், ஓர் ஆணை மட்டும் ஏன் முழுவதுமாக நம்பி, அவள் திருமணம் செய்துகொள்ள வேண்டும்? கடைசிவரை அவனுடேயே ஏன் வாழ வேண்டும்? அப்படி என்ன கட்டாயம்? அல்லது அவள் அந்த கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறாளா? அப்படி தள்ளப்பட்டால் எதற்கு தள்ளப்படுகிறாள் என்பதை எல்லாம் நுட்பமாகப் பார்க்க வேண்டும்.
சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு சுதந்திரம், பெண்ணுரிமை, சம உரிமை எல்லாம் இருக்கிறதுதானே? அப்படி சம உரிமை இருக்கும்போது, வாழ்நாள் முழுவதும் அவள் ஒருத்தனுக்கு ஒருத்தி’ எனும் கான்செப்ட்டுக்குள் சிக்கிக்கொள்ளத்தான் வேண்டுமா?
அப்படி அந்தப் பெண் நம்புவதற்கு என்ன காரணம்?

பொதுவாகவே, ஒரு பெண் தான் விரும்புவது போல் ஓர் ஆணுடன் பாலியல் இச்சைகளை, பாலியல் இன்பத்தைப் பகிர்ந்துகொள்ள சமூகம் அங்கீகரிப்பதில்லை. செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் திருமணம் செய்துகொண்டால் தான் இயலும் என்கிற நிலைதான் இருக்கிறது.
இதுதான் நியதி, இதுதான் இயல்பு என்று பெண்ணும் அப்படியே நினைத்துக் கொள்கிறாள். சமூகமும் அதையே உறுதிசெய்து வைத்துள்ளது. இதுவே நடைமுறையாக காலம் காலமாக பெண்களாலும் சமுதாயத்தாலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம் விதிகளை மீறி, கலாசாரத்தை மீறி கணவன் முறையில்லாத பிற ஆணிடம் செக்ஸ் வைத்துக்கொண்டால், அது கண்டனத்துக்குரியதாக கருதப்படுகிறது. சில நேரங்களில் அது தண்டனைக்குரிய குற்றமாகவும் ஆகிவிடுகிறது. அதுமட்டுமின்றி, அது அவமானகரமான விஷயமாகவும் சமூகத்தில் கருதப்பட்டு, அந்தப் பெண் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படவும் செய்கிறாள்.
இத்தகைய நிலையில்தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ எனும் வழியில் மேற்கொள்ளப்படும் திருமணம் புனிதமானது என்று கருதப்படுகிறது. அதே சமயம், அவள் யாருடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால், அவனையே திருமணம் செய்துகொண்டால்… அது நியாயம் என கருதப்படுகிறது. இந்நிலையில் அவள் புனிதப்பட்டு விடுகிறாள் என்றும் நம்பப்படுகிறது. திருமணம் என்பது ஒரு லைசென்ஸைப்போல கருதப்படும் நிலையை நாம் அறிய வேண்டும். முறைப்படி திருமணம் செய்துகொண்டவளையே சமூகம் ஏற்றுக் கொள்ளும் நிலைதான் இன்றும் உள்ளது.
நமது பெண்கள் திருமணம் என்கிற முறையை சகித்துக்கொள்ள வேண்டும் என்கின்ற நிலையை சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. எனவே, பல பெண்கள் திருமணம் எனும் முறையை காலம் முழுவதும் சகித்துக் கொள்கிறார்கள். அல்லது பெண்கள் சகித்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
ஆக, ஒரு பெண்ணுக்கு அவளது உடல் தேவைகளைப் பூர்த்திசெய்ய, அல்லது அவளை திருப்திபடுத்த ஓர் ஆண் தேவைப்படுகிறான். திருமணம் அல்லாத வகையில் அவள் உடல் தேவைகளைப் பூர்த்தி செய்பவன் அவளை மரியாதையுடன் நடத்துவானா? சமமாக எல்லா விஷயங்களிலும் பாவிப்பானா என்பதும் சந்தேகமே. எனவே, ‘தெரியாத தேவதையைவிட தெரிந்த சாத்தானே போதுமானது’ என்று அவள் திருமணத்தின் மூலம் பெறும் கணவன் எனும் உறவை சகித்துக்கொள்கிறாள்.
ஒரு பெண் ஓர் ஆண் தனக்குத் துணையாக இருப்பதையே பாதுகாப்பாக இன்றைக்கும் கருதுகிறாள். இதேபோன்ற பாதுகாப்பை திருமணம் அல்லாத முறையில் அவனுக்கு ஓர் ஆண் தருவானா என்பதும் சந்தேகமே. அப்படி உறவு வைத்துக்கொண்டால் இழிவுபடுத்தப்படுவோம் என்று அவள் நம்புகிறாள்.
அத்தகைய இழிவுகள் இல்லாமல் இருப்பதற்காகவே, ‘ஒருவனுடன் ஒருத்தி’ எனும் பந்தத்தை திருமணத்தின் மூலம் அவள் ஏற்படுத்திக் கொள்கிறாள். அல்லது சமூகம் அவளுக்கு ஏற்படுத்திக்கொடுக்கிறது. எனவேதான், திருமணம் என்கிற பந்தத்தின் மூலமாக உறவாக வரும் கணவனின் எல்லா குணங்களையும், சகித்துக்கொண்டு ஆயுள் வரை அவனுடனே வாழ அவள் முடிவு செய்கிறாள்.
பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமை தந்திருக்கிறோம். சுதந்திரம் கொடுத்திருக்கிறோம் என்று என்று சமூகம் கருதுகிறது. உண்மையில் அப்படிப்பட்ட சுதந்திரத்தையும் சம உரிமையையும் பெண்களுக்கு சமூகம் தந்திருக்கிறதா என்பது, ஒரு கேள்வியாகவே இன்றைக்கும் இருந்து வருகிறது.
பெண்களின் உடலமைப்பு, உள் அமைப்பு, உள அமைப்பு யாவற்றையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு பெண் ஓர் ஆணால் ஆளப்பட வேண்டிய அமைப்பு உடையவள்தான்.
இதில் இயற்கைக்கு மாறாக எந்த சந்தேகமும் எவரும் கொள்ளவேண்டியதில்லை. அப்படி ஆளப்பட வேண்டிய உடல்வாகு படைத்த பெண்ணை, உடல்ரீதியாக ஆள ஓர் ஆண் தேவைப்படுகிறான். எனவே, அவளுக்கு ஒரு துணை என்பது ஆயுள் முழுவதும் அவசியமாகிவிடுகிறது. அப்படி துணையாக வருகிறவன், தனது உணர்வுகளைப் புரிந்து கொள்பவனாக இருக்க வேண்டும் என எல்லா பெண்களுமே நினைக்கிறார்கள். அதுவும் நியாயமும்தானே?
ஒரு பெண் உறவில் ஈடுபடும்போது, அந்த ஆண் தன்னை ஆள்பவனாகவும், தன்னை வீழ்த்துபவனாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். அதே சமயம் தன்னை வாழ்நாள் முழுவதும் இடர்பாடுகளில் இருந்தும், துன்பங்களில் இருந்தும், துயரங்களில் இருந்தும் அவன் மீட்பவனாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். அப்படி தன்னை ஆள்பவனாகவும், தன்னை மீட்பவனாகவும் இருக்கும் ஒருவன், தான் அறிந்தவனாகவும் தன்னை அறிந்தவனாகவும் இருக்க வேண்டும் என்றும் பெண் நினைக்கிறாள்.
அப்படி தன்னை அறியாதவன் இடத்தில் பாசம், உணர்வு, உறவு, விட்டுக்கொடுத்தல், உரையாடுதல், பகிர்ந்துகொள்ளுதல், பாலியல் இன்பம், வாழ்வியல் என் ஒவ்வொன்றையும் கற்றுக் கொடுப்பது என்பது ஆயாசம் மிகுந்தது. கற்றுக்கொடுத்து கற்றுக் கொடுத்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ முயற்சிப்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். அது நடைமுறை சாத்தியமும் இல்லை. எனவே, தன்னை புரிந்தவனிடத்தில் தெரிந்தவனிடத்தில் தன்னை ஒப்படைப்பது மிகவும் இலகுவானது, ஆயாசமற்றது என்று பெண் நினைக்கிறாள் அல்லது நம்புகிறாள்.
இப்படி ஓர் ஆண் தன்னை ஆள்வதை, தன்னுடன் வாழ்வதை, தன்னுடன் இன்பமாக உறவுகொள்வதை பகிரங்கமாக வெளியே பிறரிடத்தில் எந்த நிலையிலும் சொல்லாதவனனாகவும் அந்த ஆண் இருக்க வேண்டும் என்று பெண் கருதுகிறாள். இந்த நினைப்பு நியாயமானதுதான். ’அந்தரங்கம் புனிதமானது’ என்பது மட்டுமல்ல. ‘அந்தரங்கம் ரகசியமானதும்’கூட.
எனவேதான், தன்னை அறிந்தவனை தன்னைப் புரிந்தவனை திருமணம் என்கின்ற பந்தத்தின் மூலமாக கணவனாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று பெண் நினைக்கிறாள். சமூகமும் அப்படியே நினைக்கிறது. தன்னை அறிந்தவன், முழுமையாக புரிந்தவன் கணவனாக வருகின்றபோது அவர்களுக்குள் இருக்கிற உடல்ரீதியான வாழ்க்கை உட்பட்ட ரகசியங்கள் பாதுகாக்கப்படுவதாகவும், அவள் நினைக்கிறாள்.
எப்போதுமே, எந்தத் தேசத்திலும் தன்னை அறியாதவனிடத்தில் தன்னை புரியாதவனிடத்தில் தனது உடல் தேவைகளை கேட்டுப் பெற்று, திருப்தி அடைவதை என்றைக்குமே ஒரு பெண் அவமானகரமான விஷயமாகவே கருதுகிறாள்.
இப்படியான நிலையில் ஒரு பெண் உடல்ரீதியாக, பொருளாதாரரீதியாக ஓர் ஆணை தனக்கு இவன் ஏற்புடையவன் என்றும், வாழ்நாளெல்லாம் தன்னோடு மகிழ்ச்சியாக உறவுகொண்டிருப்பான் என்று எப்படி முடிவு செய்து, ஏற்றுக் கொள்வது? அதற்கு என்ன உத்தரவாதம் நம் சமூகத்தில் இருக்கிறது…?
- தொடரும்…
- தொடர்புக்கு : பாத்திமா நர்சிங் ஹோம், சென்னை. 9003414537