• Home
  • பணம்
  • மருத்துவக் காப்பீடு எடுக்கலைன்னா ஏழை ஆகிடுவீங்க….

மருத்துவக் காப்பீடு எடுக்கலைன்னா ஏழை ஆகிடுவீங்க….

Image

பணமே ஆரோக்கியம்

ஒரே ஒரு நோய் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தை ஏழையாக்கிவிடும். ஏனென்றால் நடுத்தர வர்க்கத்தினரிடம் மிகப்பெரும் சேமிப்புகள் இருப்பதில்லை. அறுவை சிகிச்சை, வேலைக்குப் போக முடியாமை போன்றவை சட்டென அவர்களுடைய சேமிப்பு, நகைகள் எல்லாவற்றையும் அழித்துவிடும். இதில் இருந்து தப்புவதற்கு சரியான வழி, ஹெல்த் இன்சூரன்ஸ்.

இன்றைய தேதியில் மருத்துவச் சிகிச்சை செலவுகள், மருந்து, மாத்திரை செலவுகள், மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம், அறுவைசிகிச்சை கட்டணம் ஆகியவை மிகவும் அதிகம். எந்த நேரத்தில் எப்படிப்பட்ட நோய் வரும் என்பதே தெரியாது. நோயைத் தடுக்க நம்மால் முடியாது என்றாலும், மருத்துவச் செலவை ஓர் அளவுக்குள் கட்டுப்படுத்த முடியும். அதற்கு மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகிறது.

 திடீர் விபத்து, தீவிர உடல் நலக்குறைவு போன்றவற்றால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் லட்சக்கணக்கான மருத்துவச் செலவை சமாளிக்க உதவும், நிதி பாதுகாப்புதான் (Financial Protection) மருத்துவக் காப்பீடு.

விபத்து, மாரடைப்பு போன்றவற்றால் திடீர் மருத்துவச் செலவு ஏற்பட்டால், மாதச் சம்பளம் வாங்கும் பலரால் உடனடியாகப் பெருந்தொகையைத் திரட்ட இயலாது. உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்குபவர்கள், சொத்து, நகைகளை அடமானம் வைத்து நிலைமையை சமாளிப்பவர்களும் சேமிப்பு பணத்தை மருத்துவ செலவுக்குப் பயன்படுத்துபவர்களுக்கு மீண்டு வர பல ஆண்டுகள் ஆகின்றன. மருத்துவ காப்பீட்டை குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரிலும் கட்டாயம் எடுக்க வேண்டும்.

மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் பல்வேறு மருத்துவமனைகளுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றன. இதனால், அவர்களின் பாலிசிதாரர்கள் அந்த மருத்துவமனைகளில் ரொக்கமில்லா சிகிச்சை (Cashless Treatment) எடுத்துக்கொள்ள முடியும். காப்பீடு நிறுவனத்தின் நெட்வொர்க்கில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்குச் சேரும்போது பணம் எதுவும் கட்ட வேண்டியதில்லை. காப்பீடு நிறுவனத்தின் மூன்றாம் தரப்பு நிர்வாகிக்கு (TPA) தகவல் தெரிவித்து அவர்களின் அனுமதியுடன் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற முடியும். எனவே, காப்பீடு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ள மருத்துவ மனைகளின் நெட்வொர்க்கை பார்க்க வேண்டும். அதிக எண்ணிக்கையிலான மருத்துவமனைகள் இருந்தால் நல்லது. மேலும்,உங்கள் வீட்டின் அருகில் அது போன்ற நெட்வொர்க் மருத்துவமனைகள் இருக்கின்றனவா என்பதை கவனித்து எடுப்பது நல்லது. கையிலிருந்து செலவு செய்துவிட்டு பின்னர் இழப்பீடு தொகை பெறுவது ரீஇம்பேர்ஸ்மென்ட் முறை ஆகும்.

காப்பீடு எடுக்கும்போது வீண் செலவாக தோன்றலாம். ஆனால், எதிர்பாராத மருத்துவ செலவுகளை எளிதாக எதிர்கொள்ள காப்பீடு அவசியம். எனவே, மருத்துவக் காப்பீட்டை மறக்காதீங்க.

மாநில அரசு, மத்திய அரசும் இப்போது காப்பீட்டை மக்களுக்கு வழங்கிவருகிறது. தமிழக அரசின் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பற்றி நிறைய பேருக்குத் தெரியும். அதிகம் பேர் அறியாத மத்திய அரசின்  ஆயுஷ்மான் பாரத் திட்டம் பற்றி பார்க்கலாம்.

இதுவொரு தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம். வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு  5 லட்ச ரூபாய் வரை காப்பீடு வழங்குகிற திட்டம் இது.  இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்  சிகிச்சை பெறலாம். இத்திட்டத்தில் இணைந்துள்ள சில   தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம்.

‘ஆயுஷ்மான் பாரத் திட்டம்’ காப்பீடை எஸ்சி, எஸ்டி பிரிவினரும், குடும்பத்தின் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்தைத் தாண்டாத குறைந்த வருமானப் பிரிவினரும் பெறலாம். இத்திட்டத்தின் இன்னொரு அம்சம், பிரதான் மந்த்ரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டமாகும். 70 வயது நிறைவுற்ற முதியவர்களின் வயிற்றில் பால் வார்க்கும் திட்டம் இது.  எந்தவிதப் பொருளாதாரப் பின்னணியும் சமூகப் பின்னணியையும் கொண்ட, அனைத்து மக்களும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.  ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும். கிடைக்கிறது. இத்திட்டத்தில் நாடு முழுவதும்  29 ஆயிரம் மருத்துவமனைகள்  இணைத்துக் கொண்டுள்ளன.   அறுவை சிகிச்சை, பொது மருத்துவம், இதய சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை  போன்ற 127 பிரிவுகளில் சிகிச்சைகளைப் பெறமுடியும்.

இத்திட்டத்தில் பதிவு செய்துகொண்ட உடனேயே சிகிச்சைக்கான காப்பீடு பெறும் தகுதி கிடைத்துவிடும் என்பதும் இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.   தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தாலும், PM-JAY திட்டத்திலும் கூடவே பயன்பெறலாம். 

PM-JAY அட்டைகளை ஆன்லைன் மூலமே பெற முடியும்.  இதற்கான வலைதளம்: http://www.pmjay.gov.in திட்டங்கள் தொடர்பான மேல் விவரங்களை பெற கீழே உள்ள கட்டணமில்லா எண்களை அணுகலாம்.

PM-JAY: 14555, CMCHIS: 1800 425 3993

Leave a Comment