சொந்தம், பந்தம் எல்லாம் அவசியமா..?

Image

ஞானகுரு பதில்கள்

கேள்வி : தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்று சொல்கிறார்களே… ஏன்..?

  • எம்.வெண்ணிலா, சூலக்கரைமேடு.

ஞானகுரு :

வாட்டர் பாட்டில், கேன் வாட்டர் என்று பழகிவிட்ட இன்றைய மனிதர்களுக்கு, முந்தைய காலங்களில் தண்ணீர் கிடைக்காமல், விவசாயம் செய்ய முடியாமல் உயிர்விட்ட மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், செடி, கொடிகள் பற்றி புரியாது. எந்த ஒரு தருணத்திலும் தண்ணீரை வீணாக்கவும், அவமதிக்கவும் மனிதர்களுக்கு உரிமையில்லை என்பதை அழுத்தமாகச் சொல்லவே தாயை பயன்படுத்தியுள்ளனர். ஏனென்றால், யாரும் தாயை பொதுவெளியில் மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் காலம் வரும் என்று அந்த காலத்தில் யாரேனும் சொல்லியிருந்தால், மக்கள் நம்பியிருக்கவே மாட்டார்கள். ஆனால், இனி காற்றையும் விலை கொடுத்து வாங்கும் காலமும் வரத்தான் போகிறது.

கேள்வி : மரணத்தை வென்றிடலாம் என நினைப்பது அறியாமையா.. ஆசையா… ஆணவமா..?

  • பி.கோவிந்தராஜன், பாண்டியன் நகர்.

ஞானகுரு :

மரணத்தை வெல்லமுடியாது என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரியவே செய்யும். ஆனால், இப்போதைக்கு தனக்கு மரணம் வரவே வராது என்பதுதான், மனிதர்களின் பொய்யான நம்பிக்கை.

கேள்வி : சொந்தம், பந்தம், உறவு இப்படி எதுவுமே வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு துறவியாக முடியுமா..?

  • கே.கனகராஜன், வண்ணாரபேட்டை.

ஞானகுரு :

எதுவுமே வேண்டாம் என்று ஒதுக்கக்கூடிய துறவி என்றால், அவர் மனிதர்கள் கண்ணில் படாமல் காட்டுக்குள் அல்லது மலையில் வசிக்க வேண்டும். அப்படி தனிமையில் வாழும் தைரியம் எந்த மனிதனுக்கும் இல்லை.

Leave a Comment