கொக்கு பற… பற…

Image

பாரம்பரிய விளையாட்டு


குழந்தைப் பருவத்தில் சமூகத்தில் உரையாடல், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் மற்றவர்களுடன் ஒத்துழைக்கவும், சவால்களைச் சமாளிக்கவும் கற்றுக்கொடுப்பதே விளையாட்டு ஆகும். பாரம்பரியம், தமிழர்கள், இயற்கை இந்த மூன்றையும் அவ்வளவு எளிதாகப் பிரித்துவிட முடியாது. இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்றாகப் பின்னிப்பிணைந்திருக்கின்றன.

பாரம்பரியத்தைத் தேடிய பயணம், தமிழர்களின் விளையாட்டில் கலந்தது. அதன்பின் இயற்கையோடு வளர்ந்தது. பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று கொக்கு பற.. பற… இது, சிறு குழந்தைகள் விளையாடும் விளையாட்டு. இந்த விளையாட்டில் விளையாட எண்ணிக்கை தேவையில்லை. அனைவரும் சேர்ந்து விளையாடக்கூடிய இந்த விளையாட்டை, ஒரே இடத்தில் அமர்ந்து விளையாடலாம். இந்த விளையாட்டுக்கான தலைவரைத் தேர்ந்தெடுத்த பிறகு விளையாட்டைத் தொடங்கலாம். இந்தப் போட்டிக்கெனத் தேர்வு செய்யப்பட்ட தலைவர் வட்டத்திற்கு நடுவில் நின்றுகொள்ள வேண்டும்.

வட்டமாய் அமர்ந்திருக்கும் அனைவரையும் நடுவில் நின்றபடியே தலைவர், ஒரு சுற்று சுற்றிப் பார்க்க வேண்டும். பிறகு, உட்கார்ந்திருப்பவர்களில் சட்டென யார் முன்பாவது கையை நீட்டி, ‘கோழி பற… பற…’ என்று தலைவர் சொல்ல வேண்டும். தலைவர் கையை நீட்டிய இடத்தில் யார் இருக்கிறார்களோ அவர்கள்,  ‘கோழி பற… பற…’ என்று உடனடியாகத் திரும்பச் சொல்ல வேண்டும். பிறகு, உட்கார்ந்திருக்கும் எல்லோரும் ஒருமுறை  ‘கோழி பற… பற…’ என்று சொல்ல வேண்டும்.

பிறகு தலைவர்  ‘வாத்து பற… பற…’ என்று சொல்ல, அனைவரும் வாத்து பற… பற… என்று சொல்ல வேண்டும். பிறகு தலைவர்  ‘மைனா பற… பற…’ என்று சொல்ல, அனைவரும் ‘மைனா பற… பற…’ என்று சொல்ல வேண்டும். பறவைகளின் பெயர்களைச் சொல்லி,  ‘பற… பற…’ என்று சொல்ல, அனைவரும் திரும்பச் சொல்ல வேண்டும். இப்படி வேகமாக விளையாடிக் கொண்டிருக்கும்போதே, திடீரெனத் தலைவர் யாரிடமாவது,  ‘நாய் பற… பற…’ என்று சொல்ல, கேட்டவரும்  ‘நாய் பற… பற…’ என்று சொல்லிவிட்டால், அவர் ‘அவுட்’. அதாவது, நாய் பறக்காது என்பதால் அவர் அவுட்.

இப்போது, ‘அவுட்’ ஆனவர் தலைவராக நின்று, மற்றவர்களிடம் இந்த விளையாட்டை நடத்த வேண்டும். இதில், பறவையின் பெயரைச் சொல்லும்போது  ‘பற… பற…’ என்றும், விலங்குகளின் பெயரைச் சொல்லும்போது  ‘வர… வர…’ என்றும் சொல்லி விளையாட வேண்டும். பறக்காத ஒரு பொருளின் பெயரைச் சொல்லி,  ‘பற… பற…’ என்றாலோ (எ.கா: பூனை), நடக்காத ஒரு பொருளின் பெயரைச் சொல்லி  ‘வர… வர…’ என்றாலோ (எ.கா: பேனா ), உடனே சுதாரித்துக்கொள்ள வேண்டும். அதைச் சொல்லமால் இருக்க வேண்டும். மீறிச் சொல்லிவிட்டால் ‘அவுட்’தான். உட்கார்ந்த இடத்திலேயே ஜாலியாக விளையாடும் இந்த விளையாட்டு மூலம் உடல் சுறுசுறுப்படையும். அறிவுத்திறன் வளரும்.

இன்றைய குழந்தைகள், அறிவுத்திறனை வளர்க்க அவசியம் பாரம்பரிய விளையாட்டை விளையாட வேண்டும்.

Leave a Comment