என்ன செய்தார் சைதை துரைசாமி – 398
பொதுவாக மேயர் பதவி அலங்காரப்பதவியாக மட்டுமே கருதப்படும். இதனால் மேயர் பதவிக்கு வருபவர்கள் தினமும் மாநகராட்சிக்கு வருவதில்லை. ஆலோசனைக் கூட்டம், மாமன்றக் கூட்டம் இருக்கும் நேரத்தில் மட்டுமே வருகை தருவார்கள். அப்படி வரும் நேரத்தில் அதிகாரிகள் ஆலோசனையின் படி செயல்படுவதும், அவர்கள் தரும் கோப்புகளில் கையெழுத்துப் போட்டுவிட்டுச் செல்வார்கள்.
இவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவராக மேயர் சைதை துரைசாமி விளங்கினார். அலுவலகப் பணிக்குச் செல்லும் அதிகாரிகள் போன்று காலையில் வந்துவிட்டு மாலை வரை மேயர் பணியாற்றினார். கையெழுத்துப் போட வேண்டிய கோப்புகளை எல்லாம் படித்துப் பார்த்து, அவற்றில் என்னென்ன திருத்தங்கள் தேவை, எப்படியெல்லாம் மேம்படுத்தலாம் என்று ஆலோசனை சொல்வார்.
அலுவலகக் கோப்பை எத்தனை கோணத்தில், எத்தனை விதமாகப் பார்க்கமுடியும், எப்படியெல்லாம் மேம்படுத்த முடியும் என்று சொல்லிக்கொடுத்த மேயரின் அனுபவ அறிவையும் விஞ்ஞானப் பார்வையைக் கண்டு அதிகாரிகளே திகைத்துப் போனார்கள். அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு மேயர் நடக்கும் பழக்கத்தை மாற்றிவிட்டு, மேயர் வழியில் அதிகாரிகளை அழைத்துச்சென்றார்.
இந்த விஷயத்தில் யாரும் செய்யாத ஒரு புதுமையைச் செய்தார் மேயர் சைதை துரைசாமி. அதாவது, மாநகராட்சியில் நிலுவையில் இருக்கும் நிறைவேற்றாத பணிகள் குறித்து, மாநகராட்சி கமிஷனருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பி பதிவு செய்யும் நடைமுறையை மேயர் சைதை துரைசாமி கொண்டுவந்தார். ஒரு மேயர் அந்த மாநகராட்சியின் கமிஷனருக்கு கடிதம் அனுப்புவதா என்று பலரும் ஆச்சர்யப்பட்டாலும், இதையடுத்து நடந்த திருப்பங்கள் முக்கியமானவை.
கடிதத்துக்குப் பதில் அளிக்கும் வகையில் நிலுவையில் இருக்கும் பணிகளை எல்லாம் விரைந்து முடிக்கவேண்டிய கட்டாயத்துக்கு அதிகாரிகள் உள்ளானார்கள். இதனால் எல்லா வேலைகளும் வேகவேகமக நடந்தன. மேயர் சைதை துரைசாமிக்கு முன்னேயும், பின்னேயும் யாரும் மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் எழுதிய நடைமுறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
- நாளை பார்க்கலாம்.