ஞானகுரு பதில்கள்
கேள்வி : இன்றைய சூழலில் அதிக பண வசதியுடன் வாழ்வது அரசு அலுவலர்களா… அரசியல்வாதிகளா..?
- பி.மாடசாமி, சாத்தூர்.
ஞானகுரு :
எல்லா காலகட்டத்திலும் செல்வத்தில் புரள்வது வியாபாரிகளும், தொழில் அதிபர்களும்தான். அவர்களுடைய வேலைக்காரர்களே அரசு அலுவலர்கள். தொழில்முறை கூட்டாளிகள் அரசியல்வாதிகள்.
கேள்வி : சேவை செய்ய அரசியலுக்கு வருவதாகக் கூறும் அரசியல்வாதிக்கு சம்பளம் தேவையா… ஏன்..?
- பி.மாடசாமி, சாத்தூர்.
ஞானகுரு :
எல்லா மனிதருக்கும் வயிறு இருக்கிறது. எல்லா மனிதருக்கும் குடும்பம் இருக்கிறது. சேவை செய்ய விரும்புபவரின் அடிப்படைத் தேவைகளை சம்பளம் மூலம் பூர்த்தி செய்யவில்லை என்றால், அவரே எடுத்துக்கொள்வார்.
கேள்வி : இளைஞர்களை வழிநடத்துவது கடினமாக இருக்கிறதே..?
- சி.கலைச்செல்வி, என்.ஜி.ஓ. காலனி.
ஞானகுரு :
இளைஞர்கள் கொண்டாட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அவர்களுக்கு பணத்தின் மதிப்பு தெரியாது. எதிர்கால அச்சமும் இருக்காது. ஆகவே, யார் பேசினாலும் அவர்கள் காதில் நுழையாது. காலம் கனியும்போது அவர்களே வந்து வழி கேட்பார்கள். அப்போது, கை கொடுங்கள். அதுவரை காத்திருங்கள்.