கண்டுபிடிக்க வழி இருக்கு
மலர்ந்த முகமே மனிதனுக்கு அழகு என்பார்கள். அப்படிப்பட்ட முகத்தை ஒருவன் பெற வேண்டுமானால், கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஆம், கோபம் கொண்டவருக்கு அகமும், புறமும் அழகாக இருப்பதில்லை.
ஒருவரது கோபத்தினால், அவர் குடும்பத்தினர் அவதிப்படுவதுடன் நண்பர்கள், உறவினர்களை இழக்க வேண்டிவரும். மேலும் நிம்மதியான வாழ்க்கை, பொருளாதார முன்னேற்றமும் போய்விடும். ஒருவர் கோபப்படும் நேரத்தில் சுரக்கும் ஹார்மோன், இதயத்தைப் படபடப்பாக்கி ஆயுளைக் குறைத்துவிடுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
வாழ்வில் பயனற்ற ஏழு பாவங்களில் கோபமும் ஒன்று என விவேக சிந்தாமணி நூல் பட்டியலிடுகிறது. அதற்காக கோபமே வரக்கூடாது என்பதில்லை. ஆம், வரும் கோபத்தை எப்படி கையாள்வது என்பதில்தான் வெற்றி இருக்கிறது. ஆம், கோபத்தை சாஸ்திரம் நான்கு வகையாகப் பிரிக்கிறது.
முதல்தர மனிதர்களிடத்தில் ஒரு நொடிப்பொழுதும், இதற்கடுத்த (மத்தியம) தரத்திலுள்ளோர் இரண்டு கடிகை அளவும் (48 நிமிடம்), கடைத்தரத்திலுள்ளோர் ஒருநாள் முழுவதும், பாபிகளோ வாழ்நாள் முழுவதும் கோபம் கொண்டிருப்பர் என அது குறிப்பிடுகிறது. மேலும், கோபத்திலிருந்துதான் அவதூறு, வன்செயல், தீய எண்ணம், பொறாமை, வருத்தம், பொருட்களை அழித்தல், சுடுசொற்கள், தாக்குதல் என எட்டுவகையான தீய குணங்கள் பிறப்பதாகவும் குறிப்பிடுகிறது.
ஒரு மனிதன், தனக்கு வரும் கோபத்தை நியாயமானது என்று நினைப்பான். உண்மையில் நியாயமான கோபம் என்று எதுவும் இல்லை. அதனால், கோபத்தை நாம்தான் கையாள வேண்டுமே தவிர, அது நம்மை கையாளும் அளவிற்கு இருக்கக் கூடாது. அப்படியே கோபம் வருமாயின், அது நொடிப்பொழுதில் மறைந்துவிடுவதாக இருக்க வேண்டும்.
கோபம் ஏன் வருகிறது என்று தெரியுமா? தன்னம்பிக்கை குறையும்போதும், நாம் எதிர்பாராதது நடக்கும்போதும் கோபம் வருகிறது. தன் மீது நம்பிக்கை உள்ளவர் பிறரிடம் கோபம் கொள்வதற்கு அவசியமே ஏற்படாது. அதேபோன்று, பிறரை நம்பி இருக்கும்போதுதான் ஏமாற்றம் ஏற்பட்டு கோபம் வருகிறது.
கோபத்தினால் வெறுப்பு, பேராசை, பொறாமை, தாழ்வு மனப்பான்மை, இயலாமை போன்றவை உருவாகி உடலுக்குள் தீ எரிகிறது. அது, உடல் உள்ளுறுப்புகளை பலவீனமடையச் செய்வதால், நோய்கள் விரைவில் பற்றிக்கொள்கின்றன. ஒவ்வொரு முறை கோபம் அடையும்போதும், மரணம் நெருங்குகிறது என்றுதான் அர்த்தம்.
கோபத்தை அகற்ற பல வழிகள் உள்ளன. அதில், அமைதிக்குத்தான் முதல் இடம். அமைதியாக இருப்பவரையும் வளைந்து கொடுப்பவரையும் கோபத்தினால் அசைத்துவிட முடியாது. காலையில் கண் விழித்ததும், இன்று எதற்காகவும் கோபம் கொள்வதில்லை என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். வீட்டுக்குள் நுழையும்போதும், வெளியே கிளம்பும் போதும் கோபத்தை தூக்கிப் போடுங்கள்.
உலகமே அன்புமயமாக காட்சிதரும்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்