மண்டியிடாத வீரம்..!

Image

தி கிரேட் முகமது அலி

குத்துச்சண்டை என்றவுடன் நினைவுக்கு வருபவர், முகமது அலிதான். 70களின் நாயகன் என்றாலும், இன்றும் குத்துச்சண்டை வீரர்களின் ஆதர்ஷ நாயகன் அவர்தான்.

1942-ம் ஆண்டு அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் லூயிஸ்வில்லி என்ற இடத்தில் முகமது அலி பிறந்தார். அவருக்கு கேசியஸ் கிளே ஜீனியர் என்று அவரது தந்தை பெயர் வைத்தார். முகமது அலியின் தாத்தா ஹெர்மன் அடிமை சட்டத்தை ஒழித்திட பாடுபட்டவரின் நினைவாக தனது மகனுக்கு கேசியஸ் கிளே என்று பெயர் வைத்தார். சமூகச் சூழல் அவனை முகமது அலியாக மாற்றியது.

கேசியஸ் கிளே 18 வயது நிரம்பிய நேரத்தில் ரோம் நகரில் நடைபெற்ற கோடை கால ஒலிம்பிக் போட்டியில், குத்துச்சண்டையில் ஐக்கிய அமெரிக்க குடியரசு சார்பில் கலந்து கொண்டு, முதன்முதலாக தங்கப்பதக்கத்தை பெற்றார். ரோமிலிருந்து உற்சாகத்துடன் திரும்பி வந்தார். தனது கழுத்தில் அணிவிக்கப்பட்ட தங்கப்பதக்கத்தை கழற்றாமலேயே விமான நிலையத்தில் இறங்கி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.

அவர் அமெரிக்க குடிமகனாக இருந்தாலும், தேசத்திற்காக பதக்கம் பெற்றாலும் நிறவெறி அவரை நிலைகுலையச் செய்தது. அடுத்த வினாடியே கழுத்தில் தொங்கிய பதக்கத்தை கழற்றி ஓடிக்கொண்டிருந்த ஒஹியோ ஆற்றில் வீசினான்.முகமது அலியின் இந்த செயல் கருப்பின இளைஞர்களுக்கு எழுச்சியூட்டியது. வெள்ளை நிறவெறியர்கள் சீறினர்.

இன்றைக்கு ‘கதம்பத் தற்காப்புக் கலை’களில் (Mixed Martial Art) வீரர்கள் வீசத் துடிக்கும் நங்கூரக் குத்தின் (Anchor punch) பிதாமகன் முகமது அலி. கிட்டத்தட்ட தலையில் கொட்டுவது போன்ற பாவனையில் நேராக வீசப்படும் குத்து. முதன்முதலில் இந்தக் குத்தினை முகமது அலியிடமிருந்து  தாடையில் வாங்கி வீழ்ந்தவர் சன்னி லிஸ்டன். ஆண்டு 1965.
எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதான தோற்றத்தை உண்டாக்கி எதிரியை அழைத்து, எதிரி தாக்குவதற்கு வந்தவுடன் அதிவேகமாக எதிரியைத் தாக்கி வீழ்த்தும் வியூகம் இது.  இந்த வீச்சில் முகமது அலி, அவரேகூட தனது குத்து இத்தனை வேகத்தில் வீசப்பட்டிருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை, காரணம், தான் குத்தினை வலக்கரத்தால் வீசிய பின் தனது எதிராளி (சன்னி லிஸ்டன்) வீழும்போது தன்னுடைய இடக்கரத்தால் இன்னொரு குத்தினையும் வீசிவிடவேண்டும் என்னும் முனைப்புடன் சன்னி லிஸ்டன் வீழும் திசையில் தனது இடக்கரத்தை வீசினார், ஆனால், அது காற்றில்தான் வீசப்பட்டது.

அலியின் அடுத்த குத்தும் சன்னியின் தாடையும் சந்திப்பதற்குள் சன்னி வீழ்ந்துவிட்டார். முதலில் வீசப்பட்ட குத்தில் அத்தனை வேகம். நேரில் இந்தக் குத்துச்சண்டையைப் பார்த்தவர்கள் முகமது அலி வீசிய குத்தினைப் பார்க்கவில்லை என்று பதிவு செய்திருக்கிறார்கள். நொடியின் தசமப் பகுதிகளுக்கும் குறைவான வேகம். பின்னர் ஒரு குத்துச்சண்டையில் இப்படியான வீச்சினை வீசி முகமது அலி வென்றிருந்தாலும், வல்லுனர்கள் அதனை நங்கூரக் குத்தென ஏற்கவில்லை. இந்த வெற்றியுடன் ‘உலக ஹெவி வெயிட்’ (world heavyweight champion) விருதை பெற்றபோதுதான் குத்துச் சண்டையில் ஒரு புதிய சகாப்தம் துவங்கியது.  1964 முதல் 1967 வரை உலக குத்துச் சண்டை நாயகன் இவர்தான்.

1966-ம் ஆண்டு அமெரிக்க இராணுவம் முகமது அலியை அழைத்து இராணுவத்தில் சேர உத்தரவிட்டது. அமெரிக்காவில் இராணுவ சேவை சட்டப்பூர்வமானது. எனவே, படையில் சேர்ந்து வியட்நாம் சென்று சண்டையிட அழைத்தது. அப்போது அவர், “எனக்கு வியட்நாமியர்களுடன் எந்த விரோதமும் இல்லை. என்னை நீக்ரோ என்று எந்த வியட்நாமியரும் அழைக்கவில்லை’ என்று மறுப்பு தெரிவித்தார்.. இது இராணுவத்தினருக்கு அதிர்ச்சியூட்டியது.

அப்போது அமெரிக்காவில் யுத்த எதிர்ப்பு இயக்கம் நடைபெற்று கொண்டிருந்தது. வியட்நாமிலிருந்து அமெரிக்காவை வெளியேறு இயக்கம் வேகம் பிடித்திருந்த காலம். இந்த இயக்கம் இப்போது முகமது அலியின் இந்த வார்த்தைக்கு பின்னால் அணி வகுத்தது. முகமது அலி மன்னிப்பு கேட்க, கையெழுத்துபோட, பணிந்துவிட வேண்டும் என பலர் கூறினர். ஆளும் நிறுவனங்கள் முகமது அலியை படுமோசமான தேச விரோதியாக சித்தரித்தன. ஆனாலும், முகமது அலி மண்டியிட மறுத்துவிட்டார்.

“நான் சொல்வதை கேளுங்கள், வியட்நாம் யுத்தம் எவ்வளவு நாள் நடக்கும் என்பது பிரச்சனை அல்ல. ‘ நான் வியட்நாமியர்களுடன் சண்டையிட மாட்டேன்’ என்ற பாடலை மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டே இருப்பேன்” என்று உறுதிபட கூறினார்.

1967-ம் ஆண்டு ஜீன் 19-ம் தேதி கீழை நீதிமன்றம் முகமது அலி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. படையில் சேர மறுத்ததற்காக 5 ஆண்டு சிறைத்தண்டனை, கடவுச்சீட்டு முடக்கம். அவரது சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. மூன்றரை ஆண்டுகள் அவர் குத்துச்சண்டையில் கலந்து கொள்ள முடியவில்லை.

ஆனாலும் அவர் உறுதியை இழக்கவில்லை. “நான் வியட்நாமுக்கு செல்லாததால் நிறைய இழந்துவிட்டேன் என்று கூறுபவர்களுக்கு ஒன்று சொல்வேன், எனக்கு மன நிம்மதி உள்ளது. எனது மனசாட்சிக்கு விலங்கு பூட்டப்படவில்லை. நான் தெளிவாக உள்ளேன். மகிழ்ச்சியுடன் தூங்கி எழுகிறேன். எனது  முடிவில் நான் பெருமை கொள்கிறேன். என்னை சிறைக்கு அனுப்பினாலும் மகிழ்ச்சியுடன் சிறை செல்வேன்” என்றார்.

இக்காலத்தில் முகமது அலியின் பேச்சுக்கள் அமெரிக்க கொள்கைக்கு எதிராகவும், யுத்தத்திற்கு எதிராகவும், இன, நிறவெறிக்கு எதிராகவும் அமைந்திருந்தது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் ஏராளமான இளைஞர்களை அலியின் பேச்சு ஆகர்ஷித்தது.

1970-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க நாடுகளின் உச்சநீதிமன்றம் கருப்பின மக்கள் நலன், உயர்வுக்காக என காரணம் சொல்லி முகமது அலியை விடுதலை செய்தது. 31/2 ஆண்டுகளுக்கு பிறகு முகமது அலி மீண்டும் குத்துச்சண்டை வளையத்திற்குள் வந்தார். 1971-ம் ஆண்டு மேடிசானில் ’நூற்றாண்டின் சண்டை’  என்ற பெயரில் நடைபெற்ற போட்டியில் ஜோ-பிரேசியரிடம் தோல்வி அடைந்தார் முகமது அலி. போட்டி கடுமையாக இருந்தது. 15 வது சுற்றில் பிரேசியர் வென்றார். இருவரையும் சிகிச்சைக்கு அனுப்பும் அளவிற்கு காயம் அடைந்தனர். 1973-ம் ஆண்டு கென்னூர்ட்டனிடம் தோற்றார். மீண்டும் அவருடனேயே மோதி பட்டத்தை வென்றார். பிறகு மற்றொரு போட்டியில் தன்னை தோற்கடித்த ஜோ-பிரேசியரை தோற்கடித்து வெற்றி கண்டார் முகமது அலி.

1981-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி, தனது 39-வது வயதில் குத்துச்சண்டை போட்டியிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் அலி. தனது தொழில்முறை குத்துச்சண்டை போட்டியின் 21 ஆண்டு வாழ்க்கையில் 61 போட்டிகளில் 56-ல் வெற்றியும், 5-ல் தோல்வியும் தழுவி உள்ளார். இதில் 37 போட்டியில் நாக்அவுட் முறையில் வெற்றி பெற்றுள்ளார். மூன்று முறை உலக சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார். அரசு, நிறவெறி என பல்முனை தாக்குதலுக்கு மத்தியில் அலி தனது வெற்றிப் பயணத்தை நடத்தினார்.

The greatest என்ற திரைப்படம், இவரது கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான். 2016ம் ஆண்டு இவர் மரணம் அடைந்துவிட்டாலும், இவர் புகழ் என்றைக்கும் மறையவே செய்யாது.  

Leave a Comment

Image Not Found

கட்டுரை பகுதிகள்