பட்டம் போல பறக்கலாம்

Image

விளையாட்டு அறிமுகம்



உடலிலும், உள்ளத்திலும் புத்துணர்ச்சி ஊட்டுபவையே விளையாட்டுகள். இதை நம் முன்னோர்கள் பாரம்பரிய விளையாட்டு மூலம் சிறப்பாகக் கடைப்பிடித்தனர். பட்டம் விடுதலும் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும். பட்டம் விடுதல் என்றாலே குழந்தைகளுக்கு ஓர் உற்சாகம்தான்.
பட்டத்தை எல்லோரும் எளிய வகையில், விரைவாகச் செய்துவிடலாம். காகிதம், மெல்லிய குச்சிகள், பசை, நூல் கண்டு முதலியன இருந்தால் போதும். அடுத்த ஐந்து நிமிடத்தில் பட்டம் ரெடி. காகிதத்தின் எதிரெதிர் முனைகளைத் தொடும்படி ஒரு குச்சியைப் பசையால் ஒட்டவேண்டும். இன்னொரு குச்சியை அரைவட்டமாக வளைத்து, மற்ற இரு முனைகளைத் தொடும்படி ஒட்ட வேண்டும். பசை காய்ந்து, குச்சிகள் நன்றாக ஒட்டிக்கொண்ட பிறகு, இரு குச்சிகளும் சந்திக்கும் இடத்தில் நூலைக் கட்ட வேண்டும். வில் போன்று வளைக்கப்பட்ட பட்டத்தின் கீழ்ப் பகுதியில் 2 அடி நீளமுள்ள தாளை வால்போன்று ஒட்ட, முழுமையான பட்டம் கிடைத்துவிடும்.

இப்போது அந்த பட்டத்தை மைதானத்துக்கு எடுத்துச் சென்று காற்று வீசும் திசையை நோக்கி மேலே வீச வேண்டும். கையால் சுண்டி சுண்டி, கொஞ்சம் கொஞ்சமாகப் பட்டத்தை மேலே உயர்த்திப் பறக்க விட, அது பார்ப்பவரைக் கவர்ந்து இழுக்கும்.
பட்டம் இன்று பல வகைகளில் (பெட்டி, கொக்கு, டிராகன், பிராந்து, பல வண்ணங்களில் விற்பனைக்கு வர ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக இரும்பு, கம்பு, கலர்கலர் துணிகள் எனப் பலவற்றிலும் அற்புதமாக பட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அவை லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது ஒருபுறமிருக்க… மறுபுறம், உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆண்டுதோறும் பட்டத் திருவிழா நடத்தப்படுகிறது.

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் ஆண்டுதோறும் பொங்கல் நாள் அன்று  பட்டம் விடும் திருநாள் நடைபெறுகிறது. இதுதவிர தமிழகம் (கோவை), கோவா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பட்டம் விடும் திருவிழா நடைபெறுகிறது. இலங்கை, சீனா உள்ளிட்ட நாடுகளிலும் பட்டத் திருவிழா நடத்தப்படுகிறது. இலங்கையில் ஆண்டுதோறும் தைத் திருநாளையொட்டி வல்வெட்டித்துறையில் பட்டத் திருவிழா நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
இப்படி, இன்று விளையாட்டுக்காகப் பறக்கவிடப்படும் பட்டங்கள், 19ம் நூற்றாண்டில் விஞ்ஞான ஆய்வுகளுக்கும் 20ம் நூற்றாண்டில் ராணுவப் பயன்பாடுகளுக்கும் உதவியிருக்கிறது. 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டிலும் பட்டங்கள் ராணுவ ஒற்றர்களை ஏற்றிக்கொண்டு உயரப் பறந்திருக்கின்றன. முதல் உலகப்போரின்போது பிரித்தானிய, பிரெஞ்சு, இத்தாலிய மற்றும் ரஷ்ய ராணுவங்கள் பட்டங்களைக் கொண்டு எதிரிகளைக் கண்காணிக்கவும் செய்திகள் பரிமாறிக்கொள்ளவும் செய்தன. ஜெர்மானிய கடற்படை, நீர்மூழ்கிக் கப்பலில் ராணுவ வீரனைத் தூக்கிக் கொண்டு பறக்கும் பட்டங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது.  


இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கக் கடற்படையில் பட்டங்களின் பல்வேறு பயன்கள் நடைமுறையில் இருந்தன. ஹாரி சாவ்ல்லின் பேரேஜ் பட்டம், இலக்கிற்கு மிக அருகில் விமானங்கள் பறக்காமல் முன்னெச்சரிக்கையாகத் தடுத்தன. விமானி கடலில் காணாமல் போனால், கிப்ஸன்-கேர்ள் எனும் பெட்டிப் பட்டத்தைப் பறக்கவிட்டு உதவியை நாடினர். பால் கர்பர் பட்டத்தில், இயக்கும் தன்மையுடனான வைரம் இலக்காகப் பயன்படுத்தப்பட்டது. பிரெஞ்சு ராணுவப்பட்டங்கள் பட்ட ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலம். அதன் தூக்குதிறன் மற்றும் நிலைத்தன்மை மிக உயரப் பறப்பதற்கு ஏற்றவை. 1903 நவம்பரில் சாமுவேல் ஃப்ராங்க்லின் கோடி என்பவர் பட்டங்களால் செலுத்தப்பட்ட கப்பலில் இங்க்லிஷ் கால்வாயைக் கடந்திருக்கிறார்.  
விமானத்தின் அறிமுகம் இந்தப் பட்டங்களின் பயன்பாட்டைப் பழைமையாக்கிவிட்டன. அதன் பிறகுதான், பட்டம் விடுதல் வெறும் பொழுதுபோக்காயிற்று.

 கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் பொழுதுபோக்கு மிகவும் தீவிரமடைந்துள்ளது. நைலான், ஃபைபர் கிளாஸ், கார்பன் கிராஃபைட் போன்றவற்றைக் கொண்டு மிக உறுதியான பட்டங்களைச் செய்தனர். இவை குறைந்த எடையுடன் நீண்டநாள் உழைக்கும் தன்மை கொண்டவை. நவீன பட்டங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. பீட்டர் லின் என்பவர் 1980களில், நியூஸிலந்தில் ஒரு ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ பட்டத்தை உருவாக்கினார். இது இயந்திரத்துடன் கூடியது. 1999ல், ஒரு குழுவினர் பட்டத்தைக் கொண்டு வடதுருவத்தில் ‘ஸ்லெட்ஜு’களை இழுத்திருக்கிறார்கள்.

1991ல், பீட்டர் பவெல் என்பவர் பொழுதுபோக்குக்கு மட்டுமில்லாமல் தீவிர விளையாட்டாகவும் பட்டத்தை விடலாம் என்று கருதினார். அப்போதிலிருந்து பட்டங்களில் மாற்றங்களும் மேம்பாடுகளும் செய்யப்பட்டன. நுட்பமான வித்தைகள் செய்து காட்டினர். வேகமாகப் பறக்கவிட்டனர். பல போட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன. அதன்பிறகு, பட்டம் பறக்கவிடுவது என்பது சர்வதேச அளவில் திருவிழாவாக நடந்துகொண்டிருக்கிறது. இப்படி, பட்டம் பறக்கவிடும் விழாக்களில் வெளிநாட்டுப் பெண்கள் உற்சாகத்துடன் கலந்துகொள்கின்றனர். இத்தகைய பட்டத் திருவிழாக்களில் ரஷிய பெண்கள்தான் அதிக அளவில் பங்கேற்கிறார்கள். அதனை தங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக கருதுகிறார்கள். தினமும் பட்டம் விடுவதற்காக குறிப்பிட்ட நேரத்தை அவர்கள் செலவிடுகிறார்கள். அதுபோல், வெளிநாட்டில் புதிதாக ஒரு பொருளை உற்பத்தி செய்தாலோ அல்லது புதிய நிறுவனம் தொடங்கினாலோ அதை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த பட்டங்களைத் தயாரித்து பறக்கவிடுகிறார்கள். இந்தியாவில் அதனை பரிசோதனை முறையில் செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம்  மட்டுமே இருக்கிறது.
பொதுவாக, கடற்கரை பகுதிதான் பட்டம் விடுவதற்கு ஏற்ற இடம். அதிலும் நீளமான கடற்கரை கொண்ட பகுதிகளில் சந்தோஷமாக பட்டங்களை பறக்க விடலாம். பட்டம் பறக்கவிடுவதால், மனம் சந்தோஷமடைகிறது. கை, கால்களுக்கு உடற்பயிற்சியாக அமைகிறது. என்றாலும், ஆபத்துக்கும் வழிவகுக்கிறது. பட்டம் அறுந்து மின் பாதை, மின் கம்பம், மின் மாற்றி, துணைமின் நிலைய மின் சாதனங்களில் விழுந்து சிக்குகிறது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இது தொடர்ந்தால் மின் விபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. சாலைகளில் விழுவதால் போக்குவரத்துக்கும் இடைஞ்சலாகிறது. அதுபோல், மாஞ்சா நூல் மூலம் பறக்கவிடும் பட்டங்களும் ஆபத்தைத் தருகின்றன.


மாஞ்சா நூல் ஜாக்கிரதை


வஜ்ரம் அல்லது சவ்வரிசி கலவையில், கண்ணாடி துகள்களை கலந்து செய்யப்படுவதே மாஞ்சா நூல். எதிராளியின் பட்டத்துடைய நூலை அறுக்க மாஞ்சா நூல் உதவுகிறது. ஒருகாலத்தில் வடசென்னை பகுதியில் காணப்பட்ட மாஞ்சா நூல் பட்டங்கள், இப்போது மத்திய மற்றும் தென் சென்னையிலும், புறநகர்ப் பகுதியிலும் அதிகமாகப் பறக்கவிடப்படுகின்றன. இதனால், இந்தப் பகுதிகளில் மாஞ்சா நூலினால் தினமும் விபத்துகள் ஏற்படும் நிலை அதிகரித்துள்ளது. சென்னையில் மாஞ்சா நூல் பட்டங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 200 விபத்துகள் வரை நேரிடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மாஞ்சா நூலில் சிக்கி, கழுத்து அறுபட்டு கடந்த 14 ஆண்டுகளில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதில்  உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், கொடூரமான விபத்துகள் மட்டுமே வழக்கு பதியப்படுவதாக புகார் கூறப்படுகிறது. இதனால், கடந்த 6 ஆண்டுகளில் சென்னையில் மாஞ்சா தொடர்பாக 134 வழக்குகள் பதியப்பட்டு 164 பேர் கைது செய்யப்பட்டனர். பட்டம் விடுவோரின் தேவையை அறிந்து மாஞ்சா நூல் தயாரித்து வழங்கும் நபர்களின் தொழிலும் வளர்ந்துள்ளது. இதற்காக, மாஞ்சா நூலை தங்களது வீட்டிலேயே தயாரித்து விற்கின்றனர். இவர்கள் 10 நூல் கண்டுகள் அடங்கிய மாஞ்சா நூலை ரூ.600 முதல் ரூ.800 வரை விற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டம் விடும் பெண்


கேரளா வடகரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணான மினி நாயர், உலக அளவில் நடைபெறும் பட்டத் திருவிழாக்களில் கலந்துகொண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துவருகிறார். ரேடியோ ஜாக்கியான மினி நாயர், இந்தியாவில் பட்டம் விடும் குழுவைச் சேர்ந்த அப்துல்லா என்பவரைச் சந்தித்ததன் மூலம் அதில் சிறகடிக்க ஆரம்பித்தார். அதுவே, அவருக்குள் பட்டம் விடும் ஆர்வத்தைத் தூண்ட, இன்கிரிடபிள் இந்தியா என்ற பெண்களுக்கான பட்டம் விடும் குழுவை உருவாக்கி மற்ற பெண்களையும் அதில் இணைத்தார். இந்த குழுவுடன் முதன்முதலாக பட்டம் விடும் திருவிழாவில் கலந்துகொள்ள குஜராத் சென்றார். போட்டி முடிவில் இவரது குழுவுக்கு ‘கைட் எக்செலென்ட்’ என்ற விருது கிடைத்தது. ராஜேஷ் நாயர் என்பவரின் வழிகாட்டுதலில் இவருடைய பட்டங்கள் புதுப்புது அவதாரங்களை எடுக்கத் தொடங்கின. முதல் பட்டத்தை 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த மினி நாயர், அதை உருவாக்க இரண்டு வாரம் எடுத்துக்கொண்டார். பெண்கள் மத்தியில் பட்டம் விடும் வழக்கத்தை அதிகப்படுத்துவதற்காக கிளப் ஒன்றையும் தொடங்கி இருக்கும் மினி நாயர், பட்டம் விடும் போட்டி எங்கு நடந்தாலும் அதில் கலந்துகொள்வதையே விருப்பமாகக் கொண்டுள்ளார்.

Leave a Comment