சொர்க்கத்தில் கல்யாணம் முதல் அத்தியாயம்

Image

டாக்டர் பதூர் மொய்தீன்

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்வார்கள். அது உண்மையோ இல்லையோ, திருமணம் நல்லபடியாக அமைந்துவிட்டால் வாழ்க்கை சொர்க்கமாக மாறிவிடும் என்பது மட்டும் உண்மை

திருமணம் ஒரு நாட்டின் கலாச்சாரம். ஒரு சமுதாயத்தின் மனநிலை அப்போதைய கலை மற்றும் கலாச்சாரங்கள், நடைமுறைகளை பிரதிபலிப்பதாகவே உள்ளது. திரைப்படங்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் எல்லாம் அபோதைய சமூக நடைமுறைகளை வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது.

கலாச்சாரம், நடைமுறைகள், சம்பிரதாயங்கள் போன்றவற்றை அளக்கக்கூடியதாக திரைப்படங்களும் இலக்கியங்களும் இருக்கின்றன. இவற்றின் மூலம் அந்தந்த காலகட்டத்தில் என்னென்ன நாட்டில் நடைமுறையில்  இருந்தன என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள முடியும்.

உதாரணத்துக்கு 70 மற்றும் 80ம் ஆண்டுகளில் வெளிவந்த திரைப்படங்களை கணக்கில் எடுத்துக்கொள்வோம்.  ஏனெனில், திரைப்படங்கள் என்பது ஒரு முக்கிய கால அளவுகோலாகவே இருக்கிறது. அந்த சமயத்தில் மக்களின் மனநிலை, உடை மற்றும் நாகரிகம் எப்படி இருந்தது என்பதை தெளிவாக காட்டும் கால கண்ணாடியாக திரைப்படங்கள் இருக்கின்றன.

80களில் வந்த படங்களைப் பார்த்தால், கதாநாயகன் நன்கு படித்த, தெளிந்த அறிவுடையவனாக இருப்பான். வீரத்துடன் விவேகத்துடன் ஒழுக்கசீலனாக, தர்ம சிந்தனையுடையவனாக இருப்பான்.  வசீகர உடல்வாகும் சுத்தமாக தன்னை அலங்கரித்துக்கொள்பவனாக நாகரிகமாக இருப்பான். நல்ல வேலையில் இருப்பான். கை நிறைய ஊதியம் பெறுவான். அவனுக்கு எந்த தீயப் பழக்கங்களும் துளியும் இருக்காது.

80களில் வந்த படங்களில் காட்டப்பட்ட வில்லன்களை எடுத்துக்கொண்டால், கோரமான தோற்றம், கிடா மீசை, அகங்காரமாக இருப்பார்கள். குரல் கொக்கரிக்கும். புகை பிடிப்பார்கள். சூதாடும் பழக்கம் இருக்கும். எல்லா தீயப் பழக்கங்களுக்கு அடிமையானவர்களாக இருப்பார்கள். முகத்தில் வடு அல்லது மச்சம் இருக்கும். ஒழுக்கமற்றவர்களாக காட்டப்படுவார்கள்.

கதாநாயகி அழகான, அறிவான ஒழுக்கமான கதாநாயகனை மட்டுமே விரும்புவாள். இதற்கு எதிர்மாறாக வில்லனை பெரிதும் வெறுப்பாள். இப்படி அன்றைய திரைப்படத்தில் காட்டப்பட்டது, அன்றைய சமுதாய நிலையை பிரதிபலிப்பதாகவே இருந்தது.

இன்றைய நாளில் வெளிவரும் சில திரைப்படங்களில் நாயகன் நாகரிகமாக, வெளிநாட்டில் படித்துவிட்டு, நல்ல உத்தியோகத்தில் இருப்பவனாக, பெருந்தொழிலதிபராக இருப்பான். அவனுக்கு நல்ல குடும்பப் பின்னணியும் இருக்கும்.  ஒரு தொழில் ஸ்தாபனத்தை நிர்வகிப்பவனாக இருப்பான். கதாநாயகி அவனை விரும்ப மாட்டாள். எனவே அந்த கதாநாயகன் வில்லன்கள் செய்யும் வேலைகளில் ஈடுபட ஆரம்பிப்பான்.

இன்று வெளிவரும் பல படங்களில் நாயகன், தந்தை பெயர் தெரியாதவனாக இருப்பான். ஒழுங்காக பள்ளிக்கூடத்துக்கு போகாதவனாக இருப்பான். நாகரிகத்துக்கும் அவனுக்கு நீண்ட இடைவெளி இருக்கும். அவனது உடை நாகரிகமாக இருக்கவே இருக்காது. எண்ணெய் காணாத பரட்டை தலை, சவரம் செய்யாத முகம், பெரும்பொழுதை குட்டிச்சுவரில் கழிப்பான்.  கதாநாயகிக்கு அவன் மீது பெருங்காதல் ஏற்படும். மருகுவாள். உருகுவாள். தன்னம்பிக்கையற்றவனாகவும் இருப்பான். அவன் மீதான அவளுடைய காதல் அவனை துணிச்சல் கொண்டவனாக மாற்றும். அவளிடம் இருந்து அவன் தைரிய மின்சாரம் தயாரித்துக்கொள்வான்.

இன்னும் சில படங்களில் கதாநாயகனை அயோக்கியனாகவும், கூலிப்படை தலைவனாகவும் காட்டுகிறார்கள்.  அவன் கதாநாயகியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதாகவும் சித்தரிக்கப்படுவான். அவ்விதம் தன்னை பாலியல் வன்முறை செய்தவனையே அவள் திருமணம் செய்துகொள்வதாகவும் காட்டுகிறார்கள். அத்தகைய படங்கள் வெள்ளிவிழா காணும் வெற்றிப்படங்களாகவும் அமைந்துவிடுகின்றன.  பெண்களின் அமோக ஆதரவினைப் பெற்ற படங்களாகவும் அவை இருக்கின்றன. அரசாங்கம் சிறந்த படம் என்று அவற்றுக்கு விருதுகளும் வழங்கி கெளரவிக்கின்றன.

இன்றைய காலகட்டத்தில் மக்களிடையே தொலைகாட்சி ஆதிக்கம் பெற்றதாக திகழ்கின்றன. அவற்றில் நெடுந்தொடர்கள் (வெப் சீரிஸ்) இன்றைக்கு பெரும் செல்வாக்கு பெற்றவையாக இருக்கின்றன. இத்தகைய தொடர்களில்  பெண்களை வக்கிர உணர்வு கொண்டவர்களாக, வில்லிகளாக, பலதார மணம் கொள்கிறவர்களாக, அந்நிய ஆண்களை நேசிப்பவர்களாக, தற்கொலைக்குத் தூண்டுபவர்களாக, கொலை கொள்ளையில் ஈடுபடுபவர்களாக  சித்தரிக்கப்படுகிறார்கள். அத்தகைய பாத்திர படைப்புகளில் நடிக்க பல பெண்கள் விரும்புகிறார்கள். விரும்பி நடித்து பெரும் பாராட்டையும் பெறுகிறார்கள். இன்றைய சமூக வலைதளங்களில் அவர்கள் செல்வாக்கு பெற்றவர்களாகி விடுகிறார்கள். இத்தகைய தொலைக்காட்சி களேபரங்களை பெண்கள் விரும்பி கண்டு களிப்பதுதான் விநோதமாகும். இதனால் அந்த சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் பெரும் விளம்பர வருவாயையும் ஈட்டுகின்றன.

இதனை எல்லாம் பார்க்கும்போது, இப்படித்தான் சமுதாயம் இருந்திருக்கின்றதா? பெண்கள் இன்றைய நாளில் இப்படித்தான் இருக்கிறார்களா? பெண்களும்  இதனைத்தான் இன்று விரும்புகிறார்களா? இப்படித்தான் இன்றைய பெண்களின் தேவைகளும் விருப்பங்களும் இருக்கின்றனவா? என்று மனதில் ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

திருமணம் புனிதமானது. அது, சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்றெல்லாம் நம்பப்படுகிறது. ஆயிரம் காலத்துப் பயிர் என்றும், ஆயிரம் பொய் சொல்லியாவது  ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. 

திருமணம் என்றால் என்ன? அது எப்போது, எவ்விதம் உருவானது? அது நிறுவனமயமானது எப்படி? அதன் பயன் என்ன? அதில் இருக்கும் பிரச்சினைகள், பாதிப்புகள் என்ன?  அதன் விளைவுகள் எப்படியிருக்கும்? திருமணம் என்கிற ஒன்று இல்லாவிட்டால் இந்த மனிதர்கள் எப்படி இருப்பார்கள்? இந்த சமுதாயம் எப்படி உருமாறியிருக்கும்? திருமணம் என்பதில் சட்டத்தின் பங்கு என்ன? திருமணம் என்பதில் சமுதாயத்தின் பங்கு என்ன? திருமணத்தை ஆரோக்கியமாக நடத்த என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றன? திருமணத்துக்கான ஆலோசனைகளை என்ன? அவற்றை பெறுவது எப்படி? திருமணம் என்பதை எவை எவை சீரழிக்கின்றன? முற்காலங்களில் திருமணம் என்பது எப்படி இருந்தது? முற்காலத்தில் விவாகரத்து என்பது இருந்ததா? இக்காலத் திருமணம், காதல் திருமணம், சாதி மீறல் திருமணம், பெரியோர்களால் திட்டமிட்டு நடத்தப்படும் திருமணம், வைதீக திருமணம், சீர்திருத்தத் திருமணம், திருமணத்தின் வரலாறு என்ன? என்பதை எல்லாம் நுட்பமாக நாம் அறிந்துகொண்டால், திருமணம் என்பதன் மீதான் நம் மதிப்பு என்னவென்று தெளிவாகத் தெரிந்துவிடும்.

திருமணம் என்பது இரண்டு மனங்கள் ஒன்றுசேர்வது மட்டுமல்ல. இரு உடல்கள் சங்கமிப்பது மட்டுமல்ல. அது இரு வேறுபட்ட கலாச்சாரங்கள் ஒன்றுசேரும் பெரும் நிகழ்வு! இரு வேறுபட்ட பொருளாதார நிலைகள் ஒன்றுசேரும் நிகழ்வு. வேறுபட்ட உணவு பழக்க வழக்கங்கள் இரண்டறக் கலக்கும் நிகழ்வு. வேறுபட்ட வழிபாட்டு முறைகள், நாகரிகங்கள், ஒழுங்கு முறைகள் கலந்துருவாகும் நிகழ்வு. வெவ்வேறான சுத்தம், சுகாதார நிலைகள் ஒருமித்த பயணம். வெவ்வேறு குணநலன்கள் ஒன்று கூடி சிறகடித்துப் பறக்கும் சம்பவம். இதுதான் திருமணம் என்பதன் தெளிவு.

இத்தகைய திருமணம் பொறுப்புடன், மதிப்புடன், குறையின்றி நடந்தேற என்னென்ன ஆலோசனைகள் உள்ளன என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

திருமணம் என்கிற நிகழ்வு எப்படித் தொடங்கியது? இதுவொரு மிகப்பெரிய கேள்வி. பதில் தெரிந்துகொள்ள வேண்டிய கேள்வியும் கூட. மனிதன் தொடக்கக் காலங்களில் உணவைத் தேடி வெவ்வேறு இடங்களுக்கு நகர்ந்துகொண்டே இருந்தான். உடலின் தேவையை அறிந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டான். அதில் சுகம் இருப்பதையும் அவனது உடல் அறிந்துகொண்டது. அதனால் இச்சையின் தேவை அவனுக்கு வசமானது. இனப்பெருக்கம் நிகழ்ந்தது. கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்கினான். ஒவ்வொருவரும் சுமக்கக் கூடிய அளவுக்குத்தான் அவனது தேவை இருந்தது.

அவனது அவனது நாட்களை வழிநடத்தியது. உணவு, உடை, இருப்பிடம் மட்டுமே அவனது அத்தியாவசிய தேவையாக இருந்ததால் அதற்குதான் முக்கியத்துவம் கொடுத்தான். அன்றைய நாட்களில் தட்ப வெப்ப, பருவ கால சூழல்களுக்கு ஏற்ப தனது வாழ்க்கையை நகர்த்திச் செல்வது அவனுக்கு பெரும் சிக்கலாக இருந்தது. அதே வேளையில் சேகரிப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டார்கள் மக்கள். தனது தேவையின் அளவுக்கேற்ப சேகரம் செய்துகொண்டார்கள். உறவு நிலைக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும் பாசம், பரிவு போன்ற உணர்வுகள் இயற்கையாக அமைந்திருந்தன.

மனித குல வரலாற்றின் அடுத்தகட்டமாக, தன் பசிப்பிணியைப் போக்கிக்கொள்ள உணவு இருக்கும் இடங்களைத் தேடித் தேடி அலைந்த மனிதர்கள், ஒரு கட்டத்தில் நிரந்தரமாக உணவு கிடைக்குமிடங்களில் தங்க ஆரம்பித்தான். அதுமட்டுமின்றி தனக்கான உணவை தானே உற்பத்து செய்துகொள்பவனாக மனிதர்கள் மாறினார்கள். வேளாண்மை என்கிற உற்பத்தி முறை அவனுக்கு அறிமுகமானது. தங்கள் தேவைக்கேற்ப உற்பத்தி செய்துகொண்டார்கள். அதையும் தாண்டி மிஞ்சியவற்றை சேகரித்து வைக்கத் தொடங்கினார்கள். தனக்கென்ற வேளாண்மை எல்லைகளை வகுத்துக்கொண்டார்கள். பயிர்களை பாதுகாத்தான். வேளாண்மை மூலம் உறவுகள் ஏற்பட்டன. இத்தகைய உற்பத்தியில் ஈடுபட கூடுதல் ஆள் பலம் அவர்களுக்குத் தெவைப்பட்டது. எனது, உனது என்கிற உரிமை உணர்வு எல்லோருக்கும் உண்டானது.

எனக்குப் பின் இந்த உற்பத்தியை யார் மேற்கொள்ளப் போகிறார்கள்? இந்த பலனை யார் யார் அனுபவிக்கப் போகிறார்கள் என்கிற கேள்விகள் அவர்களுக்கு எழுந்தன. நிலத்திற்காக உரிமை கொண்டாடப்பட்டது. ஒரு கட்டத்தில் உணவைத் தேடித் தேடி அலைந்தவனுக்கு ஓரிடத்திலேயே உற்பத்தி செய்துகொள்ளும் ஆற்றல் கைவரப் பெற்றதால் அந்தந்த இடங்களிலேயே தங்க ஆரம்பித்தான். ஊர் என்பது அப்படித்தான் உருவாயின. கால நிலை வேகத்தில் மனிதர்களுக்கு நோயும் வர ஆரம்பித்தன. அந்த நோய்களில் இருந்து விடுபட தீர்வு தேவைப்பட்டது.  ஆசை, கோபம், அங்கங்காரம், திமிர், உயர்வு நவிர்ச்சி, பாசம் என்கிற உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கூடியது. நிலமும் உடைமைகளும் அவரவர்களின் சொந்தமாகின. அவற்றை பாதுகாக்கும் நிலைகளையும் அவன் யோசித்து யோசித்து அவற்றை கடைபிடிக்கத் தொடங்கினான்.

இன்னும் என்னென்னெ உருவாயின. திருமணம் என்கிற நிலை எப்போது, எப்படி உருவானது என்பதை ’யாக்கை’ அடுத்த இதழில் தெளிவாகப் பார்ப்போம்.

–      தொடரும்…

Leave a Comment